முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்: 

இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும்.

முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது.3  புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம்.4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீசும்போது காற்றிலிருக்கும் நைட்ரஜன் மண்னால் உறிஞ்சப்படுகிறது. இதனை நைட்ரஜனேற்றல் என்கிறார்கள். இந்த அறிவியல் கருத்தை மறைமுகமாக இக்குறளிலே வள்ளுவர் பதிவு செய்கிறார்.

ஆனால், இதே முறையை நன்செய் நிலத்தில் கையாள முடியாது. காரணம், அந்த நிலத்தின் தன்மை, நீர் வளம், மழையை உள்வாங்கும் தன்மை, வெப்பம், காற்றின் ஈரப்பதம் இவையெல்லாம் மாறுபடும். எனவே, இந்த நிலத்துக்கு வேறு மாதிரியான அணுகுமுறையைச் சொல்லித் தருகிறார். அதாவது, புன்செய் நிலத்தில் மீண்டும் மீண்டும் ஏர் உழுதலை விட நல்ல உரங்களை இட வேண்டும். எருவிட்டபின் களை எடுக்க வேண்டும். விடுபட்ட களையும் களைபட்ட களையும் அழுகும் அளவுக்கு நீர் பிடித்துக் கட்ட வேண்டும். இவற்றோடு சரியான அரண் அமைத்துப் பயிர்களைக் காத்தல் வேண்டும். அப்படிச் செய்தால் நன்செய் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது அவர்தம் முடிவு.

இந்த இரண்டு வகையான முறைகளோடு தெளிப்பு நீர் பாசனம் பற்றியும்
வள்ளுவர் கூறுகிறார். ஆனால், இதே அதிகாரத்தில் அல்ல. பொருட்பாலிலே 72வது அதிகாரமான ‘அவையறிதல்’ இன் எட்டாவது குறளில்.

“உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று”                                                  (அவையறிதல்: குறள் 718)

‘வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று’ என்பதற்கு ‘வளரக்கூடிய பயிருக்கு மேலிருந்து நீர் தெறித்தது போல’ என்பது பொருள். சொட்டு நீர், தெளிப்பு நீர் என்று நீர்ச் சிக்கனம் பற்றி அன்றே வள்ளுவர் கூறியுள்ளார். இப்படி நீரை மேலிருந்து சொரிந்தால், நிலத்தில் நீர் இறங்கினால், நிலம் முழுவதிலும் உள்ள செடி கொடிகள் செழிக்கும். அதனால் அங்கே பல்லுயிர் ஓம்பும்.5


செயற்கை உரங்கள் பற்றி வள்ளுவர்: 

பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கிய வேளாண் புரட்சி வெகு வேகமாக முன்னேறியது. இதே காலகட்டத்தில்தான் தொழிற் புரட்சியும் உண்டானது. 1786 இல் ஆண்ட்ரு மெய்க்கில் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கதிர் அறுக்கும் இயந்திரம் தான் இந்தப் புரட்சிக்கு மூல காரணம்.6 மனிதர்கள் செய்து கொண்டிருந்த பல வேலைகளை இயந்திரங்கள் வெகு சுலபமாகவும் அதி வேகமாகவும் செய்தன. இதனால் உணவுப் பொருள்களின் உற்பத்தி பெருகியது. தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டன. செயற்கை உரம், பூச்சிக் கொல்லிகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் என்று இத்தனை ஆண்டுக் காலம் இல்லாத மாற்றம் இத்துறையில் ஏற்பட்டது.

1960-70 களில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க அப்போதைய இந்திய அரசு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான பேரா. நார்மன் பர்லாக் என்பரைக் கொண்டு “பசுமைப் புரட்சி” யைச் செய்தது.7 அதிகமான உற்பத்தியைக் கொடுத்தாலும் இந்த இரசாயன உர விவசாய முறை மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. மண்ணின் தரத்தைக் கெடுத்ததாகவும், பல பாரம்பரிய பயிர் வகைகளை அழித்ததாகவும், பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பார்த்ததாகவும் நம்மாழ்வார், வந்தனா சிவா போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.8 வியாபாரத்தை முன்னிறுத்தி உடல் நலனை பின்னுக்குத் தள்ளிய அவலமும் அப்போதிலிருந்துதான் அரங்கேற ஆரம்பித்தது. எல்லாமே வர்த்தகமயமாகிவிட்டது. மக்களைக் கவர்வதற்காக அளவில் பெரிய தக்காளி, வெங்காயம், போன்றவையும் ஒரே அளவிலான கேரட் வகைகளும் சந்தையில் புகுந்தன. இவையெல்லாம் ஓர் ஆய்வக அறையில் விஞ்ஞானிகளின் அறிவால் விளைந்தவையே. கடிவாளம் இல்லாத தொழில்நுட்ப வளர்ச்சியில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துவிட்டது.

‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று சொன்ன வள்ளுவர்தான் ‘கல்வியினால் பெற்ற அறிவு புதிய கண்டுபிடிப்புகளையும் முறைகளையும் உருவாக்க உதவினாலும் இயற்கையின் இயல்பையும் உணர்ந்து அதை நடைமுறைபடுத்த வேண்டும்’ என்கிறார்.
இதனை,

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
  இயற்கை அறிந்து செயல்”                                                             (அமைச்சு: குறள் 637)

என்பதன் மூலம் விளக்குகிறார்.

இக்குறளுக்கு இப்படியும் பொருள் கொள்ளலாம். வள்ளுவர் செயற்கை உரங்களையோ செயற்கை முறைகளையோ மறுதலிக்கவில்லை. மாறாக, இயற்கைக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருக்குமானால் செயற்கை முறைகளை ஏற்றுக்கொள்ளலாம். 

வளமான நாடு: 

இன்றைய உலகில் நாம் ‘வளமான நாடு’ என்ற பதத்தை விட ‘வளர்ந்த நாடு’ என்னும் பதத்தையே அதிகம் பயன்படுத்துகிறோம். இன்றைய உலகம் வளம் என்பதைப் போர் ஆயுதங்களின் அளவை வைத்தும், பணத்தின் மதிப்பை வைத்தும் மட்டுமே கணக்கிடுகிறது. இயற்கை வளங்களும் மனித வளமும் அதிக அளவில் பெற்றுள்ள நம் இந்தியா போன்ற நாடுகள் வளரும் நாடுகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளன.

ஒரு நாடு சிறந்த நாடா என்பதை அளக்கும் காரணிகளுள் உழவையே மீண்டும் மீண்டும் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு”                                                                       (நாடு: குறள் 731)

இக்குறளில் மூன்று காரணிகளை வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். அவற்றில் முதலில் இருப்பது உழவு. அதாவது செழிப்புக் குறையாத விளைபொருள்கள். இரண்டாவது அறிஞர் பெருமக்கள். மூன்றாவது தான் செல்வம்.
அதே போல்,

“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”                                                                                  (நாடு: குறள் 734)

என்ற குறளில் மூன்று காரணிகள் இல்லாமல் இருப்பது சிறந்த நாடு என்கிறார். பசி, நோய், பகை என்பவைதான் அவை. இவற்றில் முதல் இரண்டு காரணிகளான பசியும் நோயும் உழவோடு தொடர்புடையது. போதுமான உணவு இருந்தால் பசியும் வராது, நோயும் வராது.

ஒரு நாட்டிற்கு அழகு தருவன என்று சொல்பவற்றில் நோயில்லாமை, நல்ல விளைச்சல் என்று மீண்டும் உழவையே சார்ந்து எழுதுகிறார். அக்குறள்,

“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து”                                                        (நாடு: குறள் 738)

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறும் அளவுகோல் இன்றும் பொருத்தமானதாகவே இருக்கிறது.

“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு”                                                                                  (நாடு: குறள் 739)
எந்த நாடு வேறோர் நாட்டை நாடாமல் சுயமாகத் தன்னுடைய வளங்களைக் கொண்டே பூர்த்திச் செய்து கொள்கிறதோ அதுவே சிறந்த நாடு என்பது இதன் பொருள்.

உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் இது முடியாத காரியம் போலத் தோன்றும். ஆனால், சற்று ஆழமாகச் சிந்தித்தால் இது சாத்தியமே.
இறக்குமதிகள் இல்லாமல் தங்கள் நிலங்களில் விளையும் பொருள்களை அனைவரும் உண்டு, தங்கள் நாட்டு கனிம வளங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் நாட்டு சூழலுக்கு ஏற்ப தொழில் அமைத்துக் கொண்டால் அந்த நாடு மற்ற நாடுகளை நாட வேண்டிய தேவையிருக்காது. இதையே ‘தன்னிறைவு’ என்கிறார்கள். இதே கருத்தைதான் வள்ளுவரும் மேற்கூறிய குறளில் சுட்டிக்காட்டுகிறார்.

வர்த்தக ரீதியிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தித்திறன் அதிகரிப்பிலும் ஒரு நாடு சிறந்த பொருளாதார நாடாக உயர வேண்டுமானால் வெளிநாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களையோ, இயந்திரங்கள், உபகரணங்கள், தொழில் முறைகள் ஆகியவற்றின் இறக்குமதியையோ சார்ந்திருக்கக் கூடாது.10 இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் இது சாத்தியமே.

அடுத்தப் பகுதியில் - விவசாயப் பொருளாதாரம் பற்றி வள்ளுவர், உழவர்களுக்கு வள்ளுவரின் வழிகாட்டல், இன்றைய விவசாயப் பிரச்சினைகளும் வள்ளுவரின் தீர்வுகளும், முடிவுரை, உதவிய நூல்கள்.

கருத்துரையிடுக