முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத வைத்த எழுத்து

இந்தத் தலைப்பில் நான் எழுத நேரிடும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.  மனத்தின் கணத்தோடுதான் எழுதுகிறேன். இப்போது என்னை எழுத வைத்தது ஜெ.கே என்னும் இரண்டெழுத்து. 

ஜெயகாந்தன் இறந்துவிட்டாராம். ஜெயகாந்தன் யாரென்று கேட்கமாட்டீர்கள். அவரை அறியாதோர் தமிழ் இலக்கியத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஜெயகாந்தனின் முகத்தை பலர் பார்த்திராமல் இருக்கலாம். அவர் கதைககளைக் கூட பலர் வாசித்தறியாதிருக்கலாம். ஆனாலும், ஜெயகாந்தன் என்ற பெயரைக் கேள்விப் படாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த காந்தம் தான் ஜெயகாந்தன்.

என் பள்ளிப் பருவம். எல்லோரையும் போல் நானும் முதலில் சுஜாதாவின் கதைகளைத்தான் படித்தேன். அதன் பிறகே ஜெ.கே வை அறிந்தேன். அவருடைய "சில நேரங்களில் சில மனிதர்கள்" நாவலை 100 பக்கங்கள் படித்தேன்.  பிடிக்கவில்லை. 'அப்படி ஒன்றும் பெரிதாக இவர் எழுதிடவில்லையே. இதற்கா சாகித்ய அகாடமி விருது கொடுத்தார்கள்?இது ஒரு தொடர் கதை. நாவல் என்று சொல்லமுடியாது' என்றெல்லாம் முடிவு கட்டிவிட்டேன். பிறகுதான் புரிந்தது, அப்போது நான் வாசிப்பின் ஆரம்ப நிலையைக்  கூட தாண்டவில்லையென்று. வாசிப்பு பெருக பெருக வெகு நாள் கழித்து மீண்டும் அதை எடுத்துப் படித்தேன். இல்லை இல்லை. அவர் அறிமுகப்படுத்திய  மனிதர்களோடு வாழ்ந்தேன். 4 நாள் சாப்பிட மனமே இல்லாமல், தூங்க மனமேயில்லாமல் கையோடு எப்போதும் வைத்திருந்து படித்து முடித்தேன். அது நாவலா? ம்ஹூம் 'அதுக்கும் மேல'. படித்துக்கொண்டிருந்தபோதே நண்பர்கள் ஐவருக்கு முழுக் கதையையும் சொன்னேன். அந்நாவலின் மாந்தர்களான கங்கா, அவள் மாமா, பிரபு, அவர் மகள், ஆர்.கே.வி என்று யாரை நான் மறப்பேன்???  

தேடித் தேடிப் படித்தேன் அவர் எழுத்துகளை. இணையத்தில் அவரைப் பற்றி இதுவரை என்னவெல்லாம் செய்திகள் இருக்கின்றனவோ அத்தனையும் படித்து முடித்தேன். அவருடைய அனைத்து புகைப்படங்களையும் சேகரித்தேன். அவரைப் பற்றி ரவி சுப்ரமணியன் இயக்கிய ஆவணப்படம் பார்த்தேன். ஜெயகாந்தன் என்ற மாமனிதனை இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டேன். ஞான பீட விருது வழங்கி ஜெயகாந்தனைப் பற்றி அப்துல் கலாம் பேசிய நீண்ட உரையை கஷ்டப்பட்டுத் தேடிப் படித்தேன். எல்லோருக்குமே ஜெ.கே ஒரு நாயகன் தான். அவர் சினிமாவும் இயக்கியிருக்கிறார். அரசியலிலும் நின்றிருக்கிறார். அவர் கோபம், கூர்மையான பேச்சு, குழந்தைச் சிரிப்பு, தலைப்பாக் கட்டு, கம்பீரமான நடை, உண்மையான செயல் எல்லாம் அறிந்து பிரமித்துப் போனேன். ஒரு வேளை பாரதி இப்படி தான் இருந்திருப்பானோ என்றே நம்பிவிட்டேன். அவர் பாரதியின் பெரும் பக்தனாயிற்றே! 


அவருடைய வித்தியாசமான பார்வை என்னை மிகவும் கவர்ந்தது. "கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா; இல்ல  ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா?" என்ற பாடலை எழுதிவிட்டு சிநேகன் பெரும் அவஸ்தைக்குள்ளானார். தமிழ் பண்பாட்டை இழிவுபடுத்துவதாக சொல்லி அவரை இழிவுப்படுத்தினர். அப்போது ஒரு மேடையில் ஜெயகாந்தன் அந்த பாடலுக்கு ஒரு விளக்கம் கொடுத்தார். நான் கேட்டேன். சிலிர்த்தேன். என்ன பார்வை அது!!!அதுதான் ஜெயகாந்தன். 

ஜெயகாந்தன் ஆணவம் பிடித்தவர் என்பர். எனக்கு அந்த சொல் சரியானதாகப் படவில்லை. ஆணவம் என்பது அரைகுறை எழுத்தாளர்களிடம் இருப்பது. ஜெ.கே விடம் இருப்பது ஆணவம் அல்ல. பாரதி சொன்னது போல் "திமிர்ந்த ஞானச் செருக்கு". அது ஞானம் அடைந்தவர்களிடம் இருக்கும் செருக்கு. ஜெயகாந்தன் தமிழ் நாவலின் வடிவத்தை மாற்றியவர். அதன் உள்ளடக்கத்தை மேம்படுத்தியவர். அதி பயங்கர பொருள் கொண்ட நாவல்களை அனாயாசமாக எழுதியவர். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' முதல் தர நாவல். 'ரிஷிமூலம்'. அய்யய்யோ! தாயிடம் உடல் இச்சை கொண்ட மகனைப் பற்றிய (இடிஃபஸ் காம்ப்லக்ஸ்) அதன் கதைக் கருவைப் பேசவே பலரும் தயங்குவரே! 'சினிமாவுக்குப் போன சித்தாளு', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' எல்லாமே அந்த காலக்கட்டத்தில் எழுதமுடியாத, எழுதக்கூடாத கதைகள்.

ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனால், இன்னும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் என்றே பலரும் அவரை நினைக்கின்றனர். ஆனந்த விகடன் நடத்திய அவருடைய 80-வது பிறந்த நாள் விழா தான் அவர் கடைசியாகக் கலந்துகொண்ட விழா என்று நினைக்கிறேன். அந்த விழாவில் கூட அவர் அதிகம் பேசவில்லை. எப்போதும் கர்ஜிக்கும் சிங்கம் அன்று இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசியது.

ஜெயகாந்தன் இன்னும் நிறைய எழுதியிருக்கலாம் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால், அவர் இதுவரை எழுதிய எழுத்துக்களே இன்னும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. அதை அவரே கூட ஒருமுறை சொல்லியிருக்கிறார். அவர் படைப்புகளை முழுமையாகப் புரிந்து கொள்ள இன்னும் சில நூற்றாண்டுகளாவது ஆகும். அதுவரை அவர் இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியாது தான். வாழும் எழுத்தாளராகவே இன்னும் பல ஆண்டுகள் கருதப்படுவார். 
கருத்துரையிடுக