முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உள்ளவரை வாழ வைக்காத சென்னை

இந்த வலைப்பூவில் நான் இரண்டு விஷயங்களைப் பற்றி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்றிருந்தேன். ஒன்று அரசியல் (கட்சி அரசியல்).  இரண்டு சினிமா. ஆனால், இப்போது ஒரு படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று என்னையறியாமலே என்னுள் ஒரு தூண்டுதல். என்னைக் கவர்ந்த அந்தப் படம் 'மெட்ராஸ்'. 

நூறில் தொன்னூற்று ஒன்பதே முக்கால் புள்ளி ஒன்பது ஒன்பது படங்கள் சென்னையில் நடைபெறுவதாகவே இருக்கிறது. அதைப் பார்க்கும் மக்கள் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்து இன்று வரை சென்னை என்றால் டாம்பீகமும் கம்பீரமும் கொண்ட மாநகரம் என்று நினைத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே முதல் முறை சென்னைக்குப் போகும் அயலூர்வாசிக்கு அதன் மீது அதீத எதிர்ப்பார்ப்பும் நிறைய நம்பிக்கையும் கொஞ்சம் பயமும் மிரட்சியும் வந்துவிடுகிறது. (முதல் முறை போனபோது எனக்கும் இவை இருந்தன). உண்மைதான். சென்னையில் இல்லாதது எதுவும் இல்லை. ஆனால், நாம் பார்க்கும் இந்த முகம் சென்னையின் ஒரு பகுதிதான். தென் சென்னையை மட்டும் காண்பிக்கும் தமிழ் சினிமாவில் முதன் முதலாக முழுக்க முழுக்க வட சென்னையைக் காட்டியிருப்பதால் தான் இந்தப் படம் எனனைக் கவர்ந்தது.


படத்தின் கதையை யாரிடமாவது கேட்டால் 'செவுத்துக்காக அடிச்சுக்குற படம்' என்பார்கள் (என்னிடம் பலர் அப்படித்தான் சொன்னார்கள்). பார்த்துவிட்டு நானும் கொஞ்சம் யோசித்தேன். கதை என்று பார்த்தால் மேற்சொன்னது ஓரளவு உண்மைதான். ஆனால், இது சுவர் பற்றியது அல்ல. அதிகாரம் பற்றியது. எனக்கு எழுத்தாளர் எஸ்.ரா சொன்னது நினைவுக்கு வருகிறது. "ஒரு சினிமா என்பது கதை சொல்லும் ஊடகம் அல்ல. சினிமாவில் கதையை மட்டும் எதிர்பார்க்கக் கூடாது. அது பல விஷயங்களின் தொகுப்பு. பாடல், இசை, நடிப்பு, களம், தொழில் நுட்பம், காமெடி, ஒளிப்பதிவு என்று பலவற்றின் தொகுப்பு. இவை எல்லாமுமே ஒரு படத்தில் நன்றாக அமைய வேண்டும்" என்று அவர் சொன்னது உண்மைதான். இந்தப் படம் அப்படி ஒரு படம்.


தலித் மக்களின் வாழ்க்கையை அப்பட்டமாகப் படம் பிடித்திருக்கிறது. இரண்டரை மணி நேரம் வட சென்னை மக்களோடு வாழ்ந்தது போலவே இருந்தது. படத்தில் நடித்திருக்கும், மன்னிக்கவும். வாழ்ந்திருக்கும் எல்லா கதாபாத்திரங்களும் மனதில் தங்கிவிடுகின்றனர். ஜானி, கலையரசி, அன்பு, மாரி, மேரி, காளி என்று அனைவரும் அட்டகாசமாக நடித்திருக்கின்றனர்.  கார்த்தியின் தோற்றம் முழுதும் வடசென்னையன் போல் இல்லை என்றாலும் உடல் மொழியிலும், பேச்சிலும் வட சென்னையன் தான். கேத்ரினின் இயல்பான நடிப்பு, அளவான அழகு அருமை. பலரும் புதுமுகங்கள். ஆனால், நாம் ஏற்கனவே பழகிய மனிதர்கள் போலவே இருக்கின்றனர். 


சந்தோஷ் நாராயணனை எப்படி பாராட்டுவது. இவர்தான் இந்த மாதிரியான கதை களத்திற்குப் பொருத்தமான இசையை தரமுடியும் என்றே தோன்றுகிறது. 'எங்க ஊரு மெட்ராஸ்' - தலித்களின் வாழ்க்கையின் சுருக்கம். 'ஆகாயம் தீப்பிடிச்சா', 'நீ நான்' காதல் அனுபவம். கானா பாலாவின் 'இறந்திடவா' இரங்கற்பா. 


 சில இடங்கள் என்னைச் சிலிர்க்கச் செய்தன. தலித் மக்கள் மீது பெரும் மதிப்பும் அவர்கள் படும் துன்பங்களையும் உணர முடிந்தது. இப்படி ஒரு படத்தை நான் வெகு நாட்களாகவே எதிர்பார்த்தேன். இயக்குனர் ரஞ்சித்துக்கு மிகப்பெரிய சலாம். 

"ரிப்பன் பில்டிங் ஹை கோர்ட்டுல செங்கல் மணல் மட்டுமில்ல 
எங்களோட ரத்தங்களும் சேர்ந்திருக்குடா", "போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு கூட்டம் கூட்டி ஓட்டு போட்டும் ஏமாற்றமே எங்க பண்பாடு தான்" என்ற கபிலனின் வரிகள் என்னை பாதித்தன. இந்த சமூகத்தை சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. 

மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றி பல ஆண்டுகள் ஆனாலும் வட இந்தியா வாசிகள் இன்னமும் தமிழர்களை மதராஸிஸ் என்றுதான் சொல்கிறார்கள். வட இந்திய மக்களால் நாம் எப்படி ஒதுக்கப்படுகிறமோ அப்படி தென் சென்னை வாசிகளால் ஒதுக்கப்படுபவர்கள்தான் வட சென்னையர். 

வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தென் சென்னையை மையமாக வைத்தே தீட்டப்படுகின்றன. வட சென்னை இன்னமும் வளராத சென்னையாகவே இருக்கிறது. மாட மாளிகைகளும், சிறந்த மருத்துவமனைகளும், இ.ஏ (EA) களும், ஸ்பென்சர்களும், கல்லூரிகளும், மைதானங்களும் தென் சென்னையில் தான் உள்ளன. சினிமாக்காரர்களின் வீடுகளும், அரசியல்வாதிகளின் வீடுகளும் தென் சென்னையில்தான். இவ்வளவும் இங்கே இருக்கின்றன.

வட சென்னையிலும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் உள்ளனவே என்று நீங்கள் நினைக்கலாம். இதிலும்  ஓர் அரசியல் இருக்கிறது. வட சென்னையில் வசிப்பவர்கள் (வாழ்பவர்கள் என்று சொல்லமுடியாது) பெரும்பாலும் தலித்கள். தொழிற்சாலைகளின் கழிவுகள் வட சென்னைவாசிகளையே பாதிக்கின்றன. உயிரிழப்பு அங்கேதான் அதிகம். ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக வைக்கப்படுவது போல்தான் இது. இயந்திரங்களுக்கு இரை இவர்கள்தான். ஐ.டி. கம்பெனிகள் எதுவும் வட சென்னையில் இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே இவர்களின் நினைவு அரசியல்வாதிகளுக்கு வருகிறது. 

அரசியல் பேசும் வசனங்களும் இப்படத்தில் உள்ளன. அதிகார அரசியல்வாதிக்கு எதிராக ஒரு தலித் குரல் கொடுக்கும் போது "உங்கள உசுப்பி விட்டவன் யாருன்னு தெரியும்" என்று அந்த அரசியல்வாதி சொல்லும் வசனம் உண்மை நிலை. தலித் மக்கள் வாய் திறந்தாலே சமூகம் இப்படித்தான் பேசுகிறது. "பெரிய கலவரமாச்சு. ஆனா போலிஸ் ஹவுசிங் போர்டு ஆளுங்களத்தான் புச்சிகினு போனாங்க" என்று ஆரம்பத்திலேயே  அரசியல் பேசுகிறது. இறுதியில், பள்ளி பிள்ளைகளுக்கு அரசியல் சொல்லித் தருவது போல் முடித்திருப்பது மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது. சினிமேட்டிகலாக இருக்கிறது. ஆனால், அதுவும் ஒரு தீர்வை முன்வைப்பதாக எடுத்துக்கொள்ளலாம். 

இந்தப் படம் தலித் அரசியலைப் பேசும் படம் என்கிறார்கள். எனக்கென்னவோ இன்னும் கொஞ்சம் அரசியல் பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது. முதல் பாதியில் பேசும் அரசியல் இரண்டாம் பாதியில் தனி நபர் பழி வாங்குதல் போல மாறிவிடுகிறது. ஆனாலும், மெய்யாகச் சொல்கிறேன். இந்தப் படம் மிகச் சிறந்த படம். ரஞ்சித்துக்கு மீண்டும் பாராட்டுகள். 
 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' என்கிறார்கள். ஆனால், மெட்ராஸின் அட்ரஸாக இருக்கும், பூர்வ குடிகளான தலித் மக்களை எப்போது வாழ வைக்கப் போகிறது, இந்த சென்னை ????

கருத்துரையிடுக