முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறக்கட்டும் புதுயுகம்!!!

இந்தக் கட்டுரை ....
                                  
          LKG முதல் 12-ஆம் வகுப்பு வரை நான் படித்த பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டு மலருக்காக  நான் எழுதிக் கொடுத்த கட்டுரை.       


             வரலாற்றுப் புத்தகங்கள் நம்மிடையே ஏராளம் உண்டு. புத்தகங்களைப் பற்றிய வரலாறும் உண்டு. புத்தகங்களின் மேற்பார்வையில் தான் மனித சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி நடைபெற்று வந்துள்ளது. புத்தகங்களின் சிறப்பை ஒரு கட்டுரையில் விளக்க முயல்வது, ஒரே ஒரு பளிங்குக் கல்லின் மூலம் தாஜ்மஹாலின் அழகை வர்ணிக்க முயல்வதைப் போன்றது. எனினும், அதையே நான் இங்கு செய்ய விரும்புகிறேன். சிலரின் வாழ்வில் புத்தகங்களின் தாக்கத்தைப் பாருங்களேன்.
          
     சீனாவிலிருந்து இந்தியா வந்தவர் யுவான் சுவாங்.  நாளந்தா பல்கலைகழகத்தில் மாணவராகச் சேர்ந்து பல நூல் பயின்று, சில காலம் அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர். ஒரு நாள் தன் தாயகம் திரும்பி புத்தமத பிரச்சாரம் செய்யும் உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. புறப்பட்டார். அப்போது தம்முடன் அற நூல்கள் பலவற்றை எடுத்துச் சென்றார். அவரை வழியனுப்ப மாணவர் பலரும் உடன் சென்றனர். கழகத்திலிருந்து கப்பலுக்கு படகு மூலமாகத்தான் செல்ல முடியும். அப்படியே சென்றனர்.  படகு சிந்து நதியின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று புயல் வீசியது. நிலை குலைந்தனர் படகில் இருந்தவர்கள். படகு கவிழ்ந்துவிடுமோ என்று அனைவருமே அஞ்சினர். யுவான் தாம் கற்றவை, கொண்டு செல்ல நினைத்தவை அனைத்தும் நதிக்கே இரையாகிவிடுமோ என்று முகம் வாடினார். அது கண்ட மாணவர்கள் உடனே அச்செயலைச் செய்தனர். ஆம். பாரம் குறைந்தால் படகு தப்பக்கூடும் என்றெண்ணி ஆற்றில் குதித்து விட்டனர். ஆறு அவர்களை உள் வாங்கி ஏப்பம் விட்டது.  படகு தப்பியது. அறிவுச் செல்வத்தை விட தம்முயிர் பெரிதல்ல என்பதை உணர்த்திய இந்திய மாணவர்களின் தியாக உணர்வையும் தன் புத்தகங்களோடு யுவான்  சுமந்து சென்றார்.

             பொதுவாக அரசர்கள் போர்க்களத்துக்கு செல்லும்போது, சில சமயம் பல்லக்கில் அரசியை அழைத்துச் செல்வர். ஷாஜஹானோடு போர்க்களத்துக்கு மும்தாஜும் சென்றதாகச் சொல்வர். மும்தாஜ் மீது அவனுக்கு அப்படி ஒரு காதல்.  ஆனால், மாவீரன் நெப்போலியன் எங்கு படை எடுக்கச் சென்றாலும் தன்னுடன் பல்லக்கில் ஒரு நடமாடும் நூலகத்தையே கொண்டு செல்வானாம். அதில் 5000 புத்தகங்கள் இருந்தனவாம். புத்தகங்கள் மீது இவனுக்கு இப்படி ஒரு காதல். ஒரு புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிப்பதற்காக தனக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையையே ஒரு நாள் தள்ளிப் போட்டவர் பேரறிஞர் அண்ணா. ஜனாதிபதி பதவியை முடித்து ராஷ்டிரபதி பவனிலிருந்து வெளியேறிய டாக்டர். அப்துல் கலாமிடம் இருந்தது இரண்டு சூட்கேஸுகள்தான். ஒன்றில் அவருடைய துணிகள். இன்னொன்றில் அவருக்குப் பிடித்தமான புத்தகங்கள். கியூப நாட்டின் அதிபராக ஃபிடல் கேஸ்ட்ரோ இருந்தபோது சிறந்த புத்தகங்களை அந்நாட்டின் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிடைக்கச் செய்தார். நாம் போற்றும் எல்லா சரித்திர நாயகர்களும் இப்படி ஏதேனும் ஒரு வகையில் புத்தகங்களுடன் தொடர்பு கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
           
    சில புத்தகங்கள் குழந்தையைப் போல் அனுமதியின்றி நம் மேல் ஏறிக்கொள்ளும். சிலவோ, ஒரு தோழன் போல நம் தோள் மேல் கை போட்டு உடன் வரும். இன்னும் சில ஓர் ஆசிரியரைப் போல் கண்டிப்புடன் நமக்கு கட்டளையிடும். புத்தகம் மட்டும்தான் நம் தவறுகளை அடுத்தவர் அறியாமல் சுட்டிக்காட்டும்.  ஓர் அருமையான சொலவடை: "நமக்கு எவ்வளவுதான் தெரிந்திருந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும், எல்லாம் இருந்தும் அமைதியாக இருக்கும் நூலகம் போல." இப்படி இன்னும் எத்தனையோ நல்ல பண்புகள் உள்ளன புத்தகத்திடமிருந்து கற்றுக்கொள்ள.

       அப்துல் கலாம் சொல்கிறார், "நம்மால் நம் எதிர் காலத்தை நேரடியாக மாற்ற முடியாது. ஆனால், நம் பண்புகளை மாற்றிக்கொள்ள முடியும். அந்த பண்புகள் மூலம் நம் எதிர்காலம் மாறும்" என்று. நல்ல புத்தகங்கள் நல்ல பண்புகளை வளர்க்க உதவுகின்றன. மாணவப் பருவம் வாழ்வின் முக்கியப் பருவம்.  மாணவர்கள் அனைவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். மதிப்பெண்கள் பெற பாடப் புத்தகங்களையும் சமுதாயத்தில் மதிப்பு பெற பொது நூல்களையும் படிக்க வேண்டும். கலாம் மேலும் சொல்கிறார் "நாள்தோறும் ஒரு மணி நேரம் பொது நூல்களைப் படித்தால் ஓராண்டில் நாம் ஒரு அறிவுக் களஞ்சியமாக விளங்குவோம்" என்று.

              2750 ஆண்டுகளுக்கு முந்தைய மெசபடோமியாவின் அசிரியப் பேரரசின்   கடைசி மன்னரான அசுர்பானிபல் மகத்தான காரியம் ஒன்றை செய்து விட்டுப் போனார். 30,000 களிமண் தகடுகளில் அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பதியப்பட்டன. அவற்றைத் துறை வாரியாகப் பிரித்து அடுக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார். 'The Royal Library Of Ashurbanipal' என்று பெயரிடப்பட்ட இதுவே உலகின் முதல் நூலகம். பின்னர் எகிப்திய மன்னரான டாலமி (மாவீரன் அலெக்ஸாண்டரின் நண்பர்) காலத்தில் ஏழு லட்சம் பாப்பிரஸ் தாள்களைக் கொண்ட மாபெரும் நூலகம் அலெக்ஸாண்ட்ரியா நகரில்             'The Royal Library of Alexandria' என்ற பெயரில் அமைக்கப்பட்டது. தற்போது நல்ல, விதவிதமானத் தாள்களில் அச்சடிக்கப்பட்ட கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. இதையும் தாண்டி இன்று புத்தகங்கள் மின்னனு பரிமாணத்தில் பரிணாமம் அடைந்துள்ளன. இவற்றை e-books என்கின்றனர். 1993லேயே மின் புத்தகங்களைப் படிப்பதற்கென்றே பிரத்யேகமான மென்பொருள்கள் வடிவமைக்கப்பட்டன. இன்று எல்லாம் கணினி மயமாகிவிட்டன. தாள்களின் தேவை குறைந்துவிட்டது. (நானும் கூட இக்கட்டுரையை தாளில் எழுதவில்லை. நேரடியாகவே கணினியில் தட்டச்சு செய்கிறேன்). களிமண் தகடுகளில் தொடங்கிய புத்தகத்தின் பயணம் சிலிக்கான் சில்லு வரை வளர்ந்து விட்டது. 

                புத்தகம் என்பது வெறும் காகிதம் அல்ல. நூலகத்தின் ஏதோவொரு மூலையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் ஏதோவொரு புத்தகம் யுகப்புரட்சியையே ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது. இரண்டு புரோட்டான்கள் இணையும்போது உண்டாகும் ஆற்றலின் அளவை விட ஒரு புத்தகமும் மனிதனும் இணையும்போது உண்டாகும் ஆற்றலின் அளவே பெரிது என்று கருதுகிறேன். இந்த உலகையே ஒரு புத்தகத்தால் நல்வழிப்படுத்த முடியும் என்று நம்பியதால்தான் இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் 'திருக்குறள்' என்ற அரிய நூலை வடித்துத் தந்துள்ளார். 

                    இன்று நம் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி, நாம் புத்தகத்தின் பொருளைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளோமா என்பதுதான். இலக்கணப்படி புத்தகம் என்பது காரணப்பெயர். புது + அகம் = புத்தகம். அகத்தை சுத்தம் செய்து புதிதாக்குவதுதான் அதன் பணி. புத்தகம் தன் பணியைச் செய்ய என்றுமே தயங்கியதில்லை. அது தயாராகவே உள்ளது. நாம் தான் அவற்றை வாசிக்க யோசிக்கிறோம். இன்று இது வெறும் சொல்லாகவே உள்ளது. இதன் பொருள் என்றைக்கு நம்மால் முழுமையடகிறதோ அன்று புது அகம் மட்டுமல்ல, புது யுகமும் பிறக்கும்.


                தீனதயாளன். மு   B. Tech (Chemical Engg.,) 
                'பட்டுக்கோட்டை அழகிரி' வளர்த்தெடுத்த பிள்ளை
கருத்துரையிடுக