செவ்வாய், 12 ஜனவரி, 2016

வள்ளுவத்தை வாழ்வியலாக்க இயலுமா?

மு.கு: மே 9, 2015 அன்று உலகத் திருக்குறள் மையம், பாபநாசம் நடத்திய "வள்ளுவத்தை வாழ்வியலாக்க இயலுமா? இயலாதா?" என்ற பட்டிமன்றத்தில் இயலும் என்ற அணியில் நான் பேசிய உரையின் எழுத்து வடிவம்.  

43ஆம் அதிகாரத்தை முழுமையாகப் பெற்று 12ஆம் அதிகாரத்தோடு விளங்கும் நடுவர் அவர்களுக்கும், வள்ளுவத்தை வாழ்வியலாக்க இயலாது என்பதை நிரூபிக்க இயலும் என்ற நம்பிக்கையில் பேசி முடித்த எதிரணியினருக்கும், எனக்கு முன்னால் பேசிய என் அணியினருக்கும், நண்பர்களுக்கும் மற்ற 
அனைவருக்கும் என் பணிவான வணக்கம்!!! 

எனக்கு இப்போது ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது, நான் எடுத்து வந்த கருத்துக்களைப் பேசுவதா? அல்லது எதிரணியினரின் கருத்துகளுக்கு எதிர் கருத்து பேசுவதா என்ற குழப்பத்தில் இருக்கிறேன். முடிந்த வரையில் இரண்டையுமே பேசுகிறேன். 

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அது இப்படிப் பகன்றது – ‘மனிதர்கள் தவறு செய்யப் பயப்படக்கூடாது. ஏனென்றால் வாழ்க்கை ஒன்றும் பயன்பாட்டுக் கையேட்டோடு வருவதில்லை’. படித்தவுடன் எனக்கு இது பிடித்தது. கொஞ்சம் சிந்துத்துப் பார்த்தபோது இது தவறு என்றும் புரிந்தது. அது எப்படி வாழ்க்கை பயன்பாட்டுக் கையேட்டோடு வருவதில்லை என்று சொல்ல முடியும்? நம் அனைவருக்குமே திருக்குறள் என்ற ஒப்பற்ற பயன்பாட்டுக் கையேடு உள்ளதே என்று தோன்றியது!!! ஆம். திருக்குறள் ஓர் ஒப்பற்ற வாழ்வியல் நூல். 

எதிர் அணியினர் பெரிய நகைச்சுவை ஒன்று செய்ததைக் கவனித்தீர்களா? ஒரு சமய நூலை வாழ்வியலாக்க முடியாது என்றால் அதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. ஒரு அறிவியல் நூலை வாழ்வியலாக்க முடியாது என்றால் அதிலும் ஒரு தர்க்கம் இருக்கிறது; நியாயம் இருக்கிறது. ஆனால், ஒரு வாழ்வியல் நூலையே வாழ்வியலாக்க முடியாது என்று அவர்கள் சொல்வது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது! 

“வாழும் வள்ளுவம்” என்ற ஆய்வு நூலுக்காகச் சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற டாக்டர். வா.செ. குழந்தைசாமி அவர்கள் 2000 ஆண்டுகளாக வள்ளுவம் ஏன் வாழ்ந்துகொண்டு இருக்கிறது என்பதற்கு ஐந்து காரணிகளைக் குறிப்பிடுகிறார். அதில் மிக முக்கியமானது ‘இலக்கியலோடு இயல்பியல் சமுதாயத்தை உருவாக்கியவர் வள்ளுவர்’ என்பது. உலகின் பெரும் படைப்பாளிகள் என்று நாம் குறிப்பிடும் பலரும் கூட இலக்கியல் சமுதாயத்தைதான் (Ideal Society) முன்னிறுத்துகின்றனர். பிளாட்டோ எழுதிய ‘குடியரசு’ம், தாமஸ் மூர் எழுதிய ‘உடோஃபியா’வும், பேகன் எழுதிய ‘New Atlandis’ உம் இலக்கியல் சமுதாயத்தையே விவரிக்கின்றன. ஏன் அவ்வளவு தூரம் போய்க்கொண்டு? தமிழின் கவிச்சக்கரவர்த்தி என்று கொண்டாடப்படும் கம்பர் கூடத் தன் இராமாயணக் காவியத்தில் இலக்கியல் உலகையே வர்ணிக்கிறார். அயோத்தி தேசத்தில் தசரதன் யாருக்குமே உதவியது இல்லையாம். ஏன்? ஏனென்றால்... அங்கு வறியவர்கள் இருந்தால்தானே உதவ முடியும்? கம்பர் சொல்கிறார்- 
“வண்மையில்லை ஓர் வறுமையின்மையால் 
திண்மையில்லை நேர் செறுநர் இன்மையால் 
உண்மையில்லை பொய் உரை இலாமையால்” என்று.

இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றன. புலியும் ஆடும் ஒரே தடாகத்தில் நீர் அருந்தின என்ற வருணனையெல்லாம் வர்ணிக்க நன்றாகத்தான் இருக்கும். கண்ணகி, ராமன், சீதை, சாவித்ரி என்பவர்கள் இலக்கியல் கதாபாத்திரங்கள். இவர்கள் போல் நம்மால் வாழ முடியாது என்று நாம் அவர்களை வழிபடத் தொடங்கிவிட்டோம். அவர்களை அன்றாட வாழ்வில் பின்பற்றும் தலைவன், தலைவியாக நாம் எண்ணுவதில்லை. அதனால்தான் கவிஞர் வைரமுத்து சொன்னார் – “பூனையில் சைவம் கிடையாது. ஆண்களில் ராமன் கிடையாது” என்று. அதுதான் உண்மையும் கூட. நிஜ உலகம் எப்படி இருக்கிறது?. 

ஒழுக்கத்தோடு இழுக்கமும், பெருக்கத்தோடு சுருக்கமும், ஆக்கத்தோடு கேடும், சீர்த்த பருவத்தோடு கூம்பும் பருவமும், ஆகூழோடு போகூழும் இணைந்து இருக்கிறது. அதைத்தான் வள்ளுவமும் விவரிக்கிறது. 

வள்ளுவம் வறுமையில்லை என்று சொல்லவில்லை. இரவு, இரவச்சம் என்று வறுமையின் கொடுமையை உரக்கப் பேசுகிறது. வாழ்வியலைப் பேசுகிறது. இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யார் வேண்டுமானாலும் பேசலாம். நான் கூடச் சொல்லலாம் இந்த நாடும் உலகமும் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று. ஆனால், அதை அடைவதற்கு முறையான வழிமுறைகளும் செயல்திட்டங்களும் இருக்க வேண்டுமே! அதுதானே நம் நாட்டில் பிரச்சனை. ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’. அதை நன்கு புரிந்தவர் வள்ளுவர். வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியாத வழிகளை அவர் சொன்னது போல இட்டுக்கட்டுகிறார்களே! அவர் எத்தனை எத்தனை வழிகளை, கவனிக்கவும். நடைமுறைபடுத்தக்கூடிய வழிகளைச் சொல்லி இருக்கிறார்?? 


எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு மொழியின் இலக்கியத்தை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். சாதாரண மனிதன் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான கருத்துகளைக் கொண்ட, எளிமையான மொழியில் சொல்லப்பட்ட தொடக்க நிலை இலக்கியம். இரண்டு - ஆய்வுக்கு உட்படுத்தக் கூடிய அளவு சான்றோர்க்குரிய பேரிலக்கியம். இந்த இரண்டு தரப்பு மக்களையும் பூர்த்திச் செய்யக்கூடிய இலக்கியம் திருக்குறள். அது எல்லாத் தரப்பு மக்களுக்கும் தேவையான வழிமுறைகளைச் சொல்கிறது. எனவே, அது வாழ்வியல் இலக்கியம் தான். 

இங்கு யாருமே ஒழுக்கத்தோடு இல்லை என்று எதிரணியினர் புலம்புகின்றனரே...ஆண், பெண் ஒழுக்கமாக இல்லை என்று அங்கலாய்க்கிறார்களே! நான் கேட்கிறேன். எது அய்யா ஒழுக்கம்? வள்ளுவர் எங்காவது ஒழுக்கம் என்றால் இதுதான் என்று குறிப்பிட்டுள்ளாரா? ஒழுக்கத்தினால் வரும் உயர்வையும் ஒழுக்கமின்மையால் ஏற்படும் இழிவையும் ஒழுக்கத்தை எப்படிப் பேணிக் காப்பது என்பதையும்தான் வள்ளுவம் பேசுமே ஒழிய, பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிவதும் ஆண்கள் லோ-ஹிப் அணிவதும் ஒழுக்கமின்மை என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? ஒழுக்கமுடைமையின் பத்து குறள்களிலும் எங்காவது இதுதான் ஒழுக்கம் என்று வரையரை செய்துள்ளாரா என்று சொல்லுங்கள் பார்ப்போம். இல்லை. வள்ளுவருக்குத் தெரியும். ஒழுக்கம் என்பது மனித சமுதாயம் முழுவதும் எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே இருக்காது. அன்றைய காலத்தில் யானையை வீழ்த்துவது வீரம். இன்று அது குற்றம். அது போல் தான் ஒழுக்கமும். 

திருமணம் பற்றி வள்ளுவர் எங்காவது சொல்லியிருக்கிறாரா? தாலி கட்டிக்கொள்வது பற்றியோ மற்ற திருமணச் சடங்குகள் பற்றியோ ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறாரா? இல்லை. ஏன்? திருமணம் என்ற அமைப்பே ஒரு காலத்தில் இல்லாமல் போகலாம். திருமணம் என்பது அவசியமற்றுப் போகலாம் என்று வள்ளுவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் அவர் ‘வாழ்க்கை துணைநலம்’ என்று அதிகாரப் பெயர் வைத்துள்ளார். வாழ்க்கைக்கு ஒரு துணை தேவை என்பதை வள்ளுவர் மறுக்கவில்லை. ஆனால், அதைத் திருமணம் செய்துகொண்டுதான் தொடர வேண்டும் என்றும் அவர் சொல்லவில்லை. நான் இப்படிச் சொல்வதைக் கொலை குற்றம் போல நீங்கள் கருதலாம். என்றாலும், வள்ளுவரின் மனப்பான்மையை நான் இங்குச் சுட்டுகிறேன். 

வள்ளுவர் மிகத் தெளிவாக ஒழுக்கமுடைமையின் இறுதி குறளில் ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ என்று சொல்லி முடிக்கிறார். இதுதான் வள்ளுவத்தை வாழ்வியலாக்குவதற்கான ரகசியம். அவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அதனால்தான் இன்றும் பொருந்தக்கூடியதாக வள்ளுவம் இருக்கிறது. 

கிறித்துவ வேதமான பைபிள் இத்தனை மக்களுக்குத் தெரிகிறது. குரான் இத்தனை மக்களுக்குத் தெரிகிறது. ராமாயணமும் பாரதமும் தெரிகிறது. இவையெல்லாம் மக்களைப் போய்ச் சேர்ந்ததுபோல் ஏன் வள்ளுவம் போய்ச் சேரவில்லை. ஏனென்றால் அதை வாழ்வியலாக்கவியலாது என்று ஒரு கருத்தை எதிரணித் தலைவர் சொன்னார். அய்யா அவர்கள் குறிப்பிட்ட நூல்கள் அனைத்தும் மத நூல்கள். அவை எளிதாகச் சென்று சேர்ந்துவிடும். அங்கு வழிபாடுதான் முக்கியம். 

தமிழருவி மணியன் அவர்கள் அழகாகச் சொல்வார். “உலகத்தில் எத்தனையோ நாடுகளில் பௌத்தம் வேறூன்றிய போதும் புத்தரை உலகுக்கு அளித்த இந்தியாவில் ஏன் பௌத்தம் காலூன்றவில்லை. ஏனென்றால், இங்கு அது மார்க்கமாக இருந்தது. மற்ற நாடுகளில் அது மதமாக மாறியது”. மதமாக மாறினால் வள்ளுவரும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விடுவார். ஆனால், என்ன பிரச்னை என்றால் மதமாக மாற்றினால் வள்ளுவருக்குப் பூஜை செய்வோமே ஒழிய வள்ளுவத்தைக் கடைபிடிக்க மாட்டோம். எனவே, வள்ளுவம் வாழ்வியல் ஆக இன்னும் ஆண்டுகள் ஆகும். ஆனால், முடியாதது அல்ல. 

நான் இப்போது சொல்லப்போகும் கருத்து நம் மையத்து உறுப்பினர்கள் சிலருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தலாம். என்றாலும் சொல்லத்தானே வேண்டும் உண்மையை? ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காண்பதுதானே அறிவு’. வள்ளுவத்துக்கு நாம் கொடுக்கும் அதிகபட்ச மதிப்பே அதற்குப் பாதிப்பாகிவிடுமோ என்று என் மனம் பதைபதைக்கிறது. வள்ளுவரை தெய்வப்புலவர் என்று ஏத்தி குறளை வேதம் போன்று உயர்த்தி அதை நடைமுறைப்படுத்தமுடியாதபடி, அதைச் சாதாரண மனிதன் நெருங்கமுடியாதபடி செய்துவிடுவோமோ என்று தோன்றுகிறது. 

எத்தனையோ முறை இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டபோது நமக்கு நேரடித் தொடர்பு இல்லாத மக்கள் என்று தெரிந்தும் நாம் பாயும் போர்வையும் அளித்து உதவவில்லையா? ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?’ ஆம். நம்மிடம் இன்னும் அன்பு இருக்கிறது. பரிவு இருக்கிறது. கருணை இருக்கிறது. அப்படி இருக்கும் போது மனிதமே இல்லை, அன்பே இல்லை என்று எப்படி அய்யா சொல்கிறீர்கள்? கொஞ்சம் முயற்சி எடுத்தால் அதைப் பரவலாக்க முடியும். 

நம்மில் ஒருவராவது ஒரே ஒரு குறள் படி வாழ்ந்து வருகிறோமா என்று ஆவேசமாகக் கேட்டார் எதிரணியைச் சேர்ந்தவர். ஏன் நாம் எல்லாம் அந்த அளவுக்கு மனிதம் இழந்து விட்டோமா என்ன? கள்ளுண்ணாமை அதிகாரத்தில் சொல்லிய 10 குறள்கள் படி நம்மில் ஒருவர் கூட வாழவில்லையா? நான் கடைபிடிக்கிறேனே? நம்மில் பலர் அப்படி வாழ்கிறோமே? பரத்தையர் தொடர்பு இல்லையே? 

‘மனிதனுக்கு என்னதான் முயற்சியை வலியுறுத்தி பேசினாலும் ஒரு கட்டத்தில் வள்ளுவரே விதியின் வசம் தன்னை ஒப்படைத்ததால்தான் ஊழ் என்ற அதிகாரத்தை இயற்றினார்’ என்று ஒரு தவறான கருத்தை இங்கே பதிவு செய்தனர் எதிரணியினர். அதேபோல், வள்ளுவர் ஒரு இடத்தில் பொய் சொல்லக்கூடாது என்றும் இன்னொரு இடத்தில் அதையே மாற்றிப் பேசுவதாகவும், அவர் ஒரு குழப்பவாதி என்பது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கினர். ‘அவர் ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்று சொல்வதன் மூலம் பற்று இல்லாமல் இருக்கவேண்டும் என்கிறார். அப்படி இருந்திருந்தால் எப்படி அறிவியல் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கும்?’ என்ற கேள்வியையும் கேட்டனர். நம்மில் பெரும்பாலானோர் குறளை வைத்துக் குழப்பிக்கொள்வதற்குக் காரணம் ஒரே ஒரு குறளை மட்டும் எடுத்துக்கொண்டு அதைப் பொருள்கொள்வதால். அந்தக் குறள் எந்த அதிகாரத்தில், எந்த இயலில் வருகிறது என்று பார்க்க தவறியதே குழப்பங்களுக்குக் காரணம் ஆகும். நீங்கள் சொல்லும் குறள் சாதாரண மனிதனுக்கு இல்லறவியலிலோ களவியல் கற்பியலிலோ அரசியலிலோ சொல்லப்பட்டதல்ல. அது துறவறவியலில் துறவிகளுக்குச் சொல்லப்பட்டது. அதை வேறு சூழலில் பொருத்திப்பார்த்து பொருள் கொள்வது சரியான அணுகுமுறை அல்ல. அவர் மற்ற இடங்களில் எல்லாம் மனித முயற்சியின் மாண்பைத்தான் போற்றுகிறார். 

குறள் மற்ற இலக்கியம் போல் துன்பம் வரும்போது கடவுளிடம் சரணாகதி அடைந்துவிடு என்று சொல்லவில்லை. இறைவனிடம் பிரார்த்தனை செய், உன் துன்பமெல்லாம் தீரும் என்று போதிக்கவில்லை. அது சான்றோர்களை நாடச் சொல்கிறது. நம்மை விடப் பெரியவர்களின் துணையைத் தேடச் சொல்கிறது. இதை நம்மால் வாழ்வியலாக்க இயலாதா? இன்னும் சொல்லப்போனால் பொய் வேடம் போடும் துறவிகளைப் பற்றி நம்மை எச்சரிக்கிறது. 

சுவாமி என்று சொன்னால் விவேகானந்தர் மட்டுமே நம் நினைவுக்கு வந்த காலம் போய் சுவாமி என்று எத்தனை ஆனந்தாக்கள் வந்துவிட்டனர். அவர்கள் ஆனந்தமாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் சிறைக்குச் சென்று வந்தாலும் நாம் திருந்தின பாடில்லையே. மீண்டும் மீண்டும் அவர்கள் காலிலேயே விழுகிறோமே. நம்மை வள்ளுவர் எச்சரிக்கிறார். 
“மனத்தது மாசாக மாண்டார் நீராடி 
மறைந்தொழுகு மாந்தர் பலர்” என்று. 

எத்தனை பேர் அப்படி மனத்தில் மாசு கொண்டு வெளியில் வேடம் பூண்டு பொய்யாக நீராடி மறைந்து வாழ்கின்றனர். இந்த எச்சரிக்கையை நாம் கவனித்திருக்கிறோமா? இது அதிகம் அறியப்படாத குறள். 

வள்ளுவத்தை வாழ்வியலாக்க முடியாது என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? வள்ளுவத்தை வாழ்வியலாக்கி நமக்கு முன்னாலும் நம் காலத்திலும் வாழ்ந்த மனிதர்கள் இருக்கிறார்களே!! லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள், வள்ளலார், காமராசர் போன்றோர் வள்ளுவத்தை வாழ்வியலாக்கிக் கொண்டவர்கள்தானே. அவ்வளவு ஏன், நமது மதிப்புக்கும் ஆழ்மன அன்புக்கும் உரிய டாக்டர். அப்துல் கலாம் வள்ளுவத்தை வாழ்வியலாக்கி வாழ்ந்து வருபவர்தானே! பொது வெளிக்கு அறிமுகமாகாமல் இன்னும் எத்தனையோ மனிதர்கள் குறளை வாழ்வியலாக்கி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களால் முடியும் போது ஏன் மற்றவர்களால் முடியாது? 

வள்ளுவத்தை நீங்கள் வாழ்வியலாக்கவில்லை என்று சொல்லுங்கள். வாழ்வியலாக்க முடியாது என்று சொல்லாதீர்கள். 

நீங்கள் முடியாது என்று நினைத்தால் முடியாதுதான். ஆனால், நாங்கள் நேர்மறை சிந்தனையில் செல்கிறோம். வள்ளுவரே எங்களுக்குப் போதுமான ஊக்கத்தைக் கொடுக்கிறார். 
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும்” 

ஆம். நாங்கள் மெய் வருத்தி முயல்வோம். அந்த முயற்சியால் நிச்சயம் விரைவில் வாழ்வியலாக்க முடியும், முடியும் என்று சொல்லி உங்கள் அனைவருக்கும் என் ஆழ்மன நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

நன்றி! வணக்கம்! 

பி.கு: 
நடுவர்: தேசிய நல்லாசிரியர் திரு. கலைச்செல்வன் அவர்கள்
இயலும் அணியில்: வழக்குரைஞர் திரு. அரிய. அரசபூபதி, திருமதி. வசந்தா பாஸ்கர்(மாநில நல்லாசிரியை), திரு. அமல்ராஜ் (ஒய்வு பெற்ற ஆசிரியர்).இவர்களுடன் நான்....
இயலாது அணியில்: கவிஞர். பூவையார், ஆசிரியர் திரு. செங்கதிர்செல்வன், தலைமையாசிரியை திருமதி. சித்ரா மற்றும் திரு. பெரியசாமி.....
ஒளிப்படங்கள்: நண்பன் ஷகீல் ஷாகித்Ads Inside Post