ஞாயிறு, 27 நவம்பர், 2016

புரட்சித் தலைவன்!!

எம்.ஜி.யார். பற்றிய கட்டுரை அல்ல இது. சினிமா நடிகர்கள் பேசும் புரட்சி வசனங்களில் மயங்கி புரட்சித் தலைவரையும், புரட்சிக் கலைஞரையும், புரட்சித் தளபதியையும் உருவாக்கியவர்கள் நாம். இவை வெறும் பட்டங்களாக யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கப்படுவதால் உண்மையான புரட்சி நாயகர்கள் நம் டீ-ஷர்ட்டுகளில் வெறும் வியாபார பண்டமாக படங்களாகிப் போனார்கள். ஆனால், புரட்சி என்பது வேறு.

‘உலகின் சர்க்கரைக் கிண்ணம் கியூபா’ என்ற பொது அறிவுத் தகவலைத் தெரிந்துக்கொள்வதற்கு முன்பாகவே மிகச் சிறு வயதிலேயே ஃபிடல் காஸ்ட்ரோ என்ற பெயரை நான் தெரிந்து வைத்திருந்தேன். தலைவர்களின் பிம்பம் எப்போதுமே பார்த்த நொடியிலேயே நம்மை ஈர்த்துவிடும். ஃபிடலின் தோற்றமும் அப்படியானது.


‘உழைத்தால் உயரலாம்.
யார் உழைக்க?
யார் உயர?'

என்ற புதுக்கவிதை நினைவுக்கு வருகிறது. உழைக்கும் மக்கள் கியூபர்கள். அவர்களின் உழைப்பை சுரண்டி உயர்ந்தவர்கள் ஸ்பானியர்களும் அமெரிக்கர்களும். யார் அதிகம் சுரண்டுகிறார்கள் என்பதுதான் போட்டி. அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும். பாதிக்கப்படுவது என்னவோ உழைக்கும் வர்க்கம்தான்.

அந்த உழைக்கும் வர்க்கத்தின் நாயகனான ஃபிடல் ஸ்பானிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பது ஆச்சர்யத்தைத் தரலாம். ஸ்பெயின் நாட்டின் இராணுவ வீரரான ஃபிடலின் தந்தை கியூபாவின் அழகில் சொக்கி போர் முடிந்ததும் இங்கேயே வந்து தங்கிவிடுகிறார். கடுமையாக உழைக்கிறார். உழைப்பு என்றால் கரும்புத் தோட்டங்களில் இறங்கி வேலை செய்வது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நிலத்தின் உரிமையாளராகிறார் (பண்ணையாராக). இவரும் ஸ்பானியர்தானே. அதனால் நிலவுடைமை உண்டு. பணக்கார குடும்பத்தில் பிறந்த ஃபிடல் காஸ்ட்ரோ தன் தந்தையின் தோட்டங்களில் சிலர் மட்டும் கடுமையாக உழைப்பதையும் தன் தந்தை சொகுசாக வாழ்வதையும், தான் வேலை செய்யாததையும் அதே சமயம் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் இதே தோட்டத்தில் வேலை செய்வதையும் பார்த்த ஃபிடல் சிந்திக்க ஆரம்பித்தார். அந்தச் சிந்தனைதான் கியூப புரட்சியின் வித்து.

இளமையிலேயே மிகவும் சுட்டித்தனமான ஃபிடல் படிப்பதில் சோடையாகிவிடவில்லை. படிப்பதில் அவருக்குத் தீராத ஆர்வம். பள்ளியிலேயே ஆசிரியரை எதிர்த்து கோபித்துக்கொள்ளும் ஃபிடல், முதல் மதிப்பெண் வாங்குவதை பார்த்து அவர் ஆசிரியர்களே அதிசயித்துப் போயினர். கல்விதான் இந்த மக்களை காப்பாற்றும் என்பதில் தெளிவாக இருந்தார். கியூப வரலாற்றை ஆர்வமாக படித்தார். இவருக்கு முன்பே சிறு சிறு போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களை வாசித்தார். கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் மாணவத் தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போதிருந்தே அவருக்கு பயங்கர எதிர்ப்பு இருந்தது. எப்போதும் துப்பாக்கியுடந்தான் எங்கும் செல்வார். போராட ஆரம்பித்தார். அதாவது மக்களை ஒருங்கிணைப்பது; புரட்சி செய்வது. அதுவும் ஆயுதம் ஏந்திய புரட்சி. சே குவேரா என்ற இன்னொரு சக்தியும் இணைந்து கொண்டது. அதன் பின் நடந்தது எல்லாம் வரலாறு. 

புரட்சியின் பலனாய் மக்கள் விடுதலை அடைந்தனர். புரட்சிக்குப் பிறகான முப்பது ஆண்டுகள் மிகக் கடுமையான சட்ட திட்டங்களுடன் ஆட்சி நடந்தது. அதிபரான ஃபிடல் கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார் என்று மக்கள் நினைத்தனர். அதே சமயம், ஃபிடலால் மட்டும்தான் சிறந்த் நிர்வாகத்தை அளிக்க முடியும் என்றும் நம்பினர்.

ஃபிடலிடமே மொத்த அதிகாரமும் குவிக்கப்பட்டிருந்தது என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. காரணம், கியூபாவில் இன்றும் ஆயுதமேந்திய போரட்டத்துக்கு அனுமதியுண்டு. நினைத்துப்பாருங்கள். இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் கூட இது சாத்தியமா? மாணவர்களும் விவசாயிகளும் இங்கு ஆயுதம் ஏந்தி போராட உரிமை இருக்கிறதா? ஆனால் கியூபாவில் இருக்கிறது.

விடுதலை பெற்று தருவதைவிட நிர்வாகம் செய்வதுதான் கடினமானது. இந்திய விடுதலைப் போராட்டத்தைவிட விடுதலைக்குப் பிறகு நாட்டை எந்தத் திசையில் கொண்டு செல்வது என்பதுதான் சவால். கியூபாவில் புரட்சி முடிந்து 30 ஆண்டுகளில், எப்போதுமே தலைவர்கள் படங்கள் இருந்ததே கிடையாது. ஃபிடலின் படம் அதிகாரப்பூர்வமாக கிடையாது. புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்த முதல் சில மாதங்களிலேயே அது தடை செய்யப்பட்டுவிட்டது. உயிருடன் இருப்பவர்களின் பெயர்களைப் பள்ளிகளுக்கும், நிறுவனங்களுக்கும், பிற ஆலைகளுக்கு சூட்டுவதும் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது. நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதே சமயம், அது கொடுங்கோலான ஆட்சி மாதிரிதான் இருந்திருக்கும் மக்களுக்கு.

நான் முன்பு குறிப்பிட்டதைப் போல கல்வியின் மீது தீராத பிரேமை கொண்டவர் ஃபிடல். ஒருநாளைக்கு 14-15 மணி நேரம் வீதம் இரண்டு ஆண்டு காலம் சிறையில் படித்துக்கொண்டே இருந்தாராம். “வாழ்நாள் முழுவதும் எத்தனை முடியுமோ அத்தனை புத்தகங்களைப் படித்து வந்திருந்தபோதும், படிப்பதற்கு நேரம் போதவில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. நூலகங்களையும், புத்தகங்களின் பட்டியலையும் பார்க்கும்போதெல்லாம் என் வாழ்நாள் முழுவதையும் படிப்பதிலும் கற்பதிலும் செலவிடமுடியவில்லையே என்று வருந்துவேன்” என்றவர் அவர்.

இன்னமும் எனக்கு அவர் மீது பெரும் வியப்பும் மரியாதையும், இன்னும் 
சொல்லப்போனால் கண்கலங்கி நான் நிற்பதும் கல்விக்கு அவர் செய்த செயல்கள்தான். புரட்சிக்குப் பிறகு கியூப மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று அவர் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டார். ஆலைகளுக்கும் குழந்தைகள் இல்லாத வீடுகளுக்கும் கொடுக்கப்படும் மின்சாரத்தைக் குறைத்து அதை குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கும் பள்ளிகளுக்கும் கொடுத்தவர் அவர். ஒருபோதும் பள்ளிகளில் மின்வெட்டு இருந்ததில்லை. கியூப ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களுடன் உலகின் மிகச் சிறந்த புத்தகங்களும் விற்கப்படுமாம். இதுமாதிரி உலகில் எங்காவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

11 அமெரிக்க ஜனாதிபதிகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டியவர் ஃபிடல். ஒருபோதும் அடிபணிந்தவர் அல்லர். ‘தக்கினியூண்டு’ கியூபா ‘அம்மாம் பெரிய வல்லரசு’ அமெரிக்காவை ஆட்டி வைப்பது என்பது சாதாரணமான விஷயமா? அமெரிக்காவின் ஜனநாயகத்தைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார் ஃபிடல். ‘அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது ‘ஒற்றை வர்க்க ஆட்சி’ என காஸ்ட்ரோ குறிப்பிடுகிறார். அங்கு கடின உழைப்பை மேற்கொள்ளக்கூடிய பணிகளில் ஈடுபடுவோர் வெள்ளையர்கள் அல்லர். கருப்பின மக்கள், துருக்கியர்கள், ஆசியர்கள், புலம் பெயர்ந்தோர் ஆகியோர்தான். இது ஒரு புதுவகை அடிமை முறை. மரணதண்டனை வழங்குவதில் கிரிமினல் குற்றவாளிகள், அரசியல் குற்றவாளிகள் என்ற வேறுபாட்டை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் அத்தண்டனை வெள்ளையருக்கு வழங்கப்படுவது அரிது.’ அமெரிக்காவில் இருப்பதும் ஜனநாயகம்தான். கியூபாவில் இருப்பதும் ஜனநாயகம் தான். ஆனால் இரண்டும் ஒன்றல்ல என்கிறார் ஃபிடல். அமெரிக்காவில் இருப்பது முதலாளித்துவ ஜனநாயகம். கியூபாவிலோ சோசலிஷ ஜனநாயகம். உண்மையான ஜனநாயகம் முதலாளித்துவ அமைப்பினுள் இருக்கவே முடியாது. அது சோசலிச அமைப்பினுள் மட்டுமே நிலவ முடியும் என்றும் தெளிவாக்குகிறார். ஐ.நா சபையிலேயே ஜனநாயகம் இல்லை என்று அவர் சொல்வது உண்மைதானே?

இப்படியெல்லாம் பேசினால் அமெரிக்கா என்ன வாயில் விரல் சூப்பிக்கொண்டிருக்குமா? ஃபிடலைக் கொல்ல 638 முறை (ஆமாம். நீங்கள் சரியாகத்தான் வாசிக்கிறீர்கள். 638 முறை) முயற்சி செய்ததாம் அமெரிக்க உளவுத்துறை. எப்படி? ஃபிடலின் சிகரெட்க்குள் விஷம் வைத்து, ஸ்க்யூபா டைவிங்கின்போது அவர் உடுத்தும் உடையில் விஷக்கிருமிகளை வைத்து.....என்ன செய்தாலும் 638 முறையும் அமெரிக்காதான் தோற்றுப்போனது.

ஃபிடல் கல்விக்கு எப்படி முன்னுரிமை கொடுத்தாரோ அதற்கு நிகராக மருத்துவத்துக்கும் முன்னுரிமை கொடுத்தார். இங்கேதான் இந்திய அணுகுமுறையும் கியூப அணுகுமுறையும் வேறுபடுகிறது. கியூபா மின் அணுவில், உதிரிப்பாகங்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தவில்லை. ஜப்பான், அமெரிக்கா போன்று கணிணி தயாரிப்பில் போட்டி போடுவதில்லை. ஆனால், மருத்துவம், சுகாதாரம் போன்ற குறிப்பான துறைகளில் தேவையான சாதனங்களை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

கம்யூனிசமும் சோசலிசமும் தோற்றுப்போன சித்தாந்தம் என்று அரற்றுவோர் பலர் உள்ளனர். ஆனானப்பட்ட சோவியத் ரஷ்யாவிலேயே தோற்றுப்போய்விட்ட அது, இனி உலகின் வேறு நாடுகளில் வளர வாய்ப்பே இல்லை என்போர்க்கு ஃபிடல் தான் விடை. உண்மையான, நேர்மையான சித்தாந்தம் எதுவும் தோற்றுப்போவதில்லை. சித்தாந்தத்தின் குரல்வளையை இறுகப் பிடித்துக்கொண்டு காலத்திற்கேற்ற மாற்றங்கள் செய்யாமல் போகும்போதுதான் அது தோற்றுப் போகிறது. இதை ஃபிடல் மிகத் தெளிவாகவே புரிந்து வைத்திருந்தார். “மண்ணுக்கேற்ற மார்க்சியம் வேண்டும்” என்று சொல்கிறார் அவர். ஃபிடலையும் கியூபாவையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது.

ஃபிடலின் இறப்பு வருத்தமானதுதான். ஆனால், அவரையும் அவர் வழிநடத்திய புரட்சியையும் நினைக்கும்போது வருத்தம் ஏற்படவில்லை. பெருமிதம்தான் உண்டாகிறது.

ஃபிடலின் நேரடி வார்த்தைகளில் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். “நாம் தொடர்ந்து கனவு காண வேண்டும் – நல்லதொரு உலகம் உண்மையில் உருவாகும் என்று; காரணம், தொடர்ந்து போராடினால், அது கைகூடும். மனிதகுலம் தனது கனவுகளை, இலட்சிய உலகைக் கைவிடவே கூடாது. என்னைப் பொருத்தவரை ஒரு புரட்சியாளன் கனவு காண்பதை எப்படி நிறுத்துவதேயில்லையோ அதுபோல, போராட்டத்தை ஒருபோதும் கைவிடுவதில்லை”.

உண்மையான புரட்சித் தலைவன், - ஃபிடல்!!!


புதன், 26 அக்டோபர், 2016

ஒற்றை வரி விமர்சனம்

பிரபு காளிதாஸ் அவர்கள் முன்பு ஒருமுறை தன்னுடைய முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் தொலைக்காட்சியில் கதை சொல்வதாகவும் அதைப் பார்த்ததும் தனக்குச் சிரிப்பு வந்ததாகவும் சொல்லியிருந்தார். விளம்பர வெளிச்சத்துக்காக அவர் இப்படிச் செய்திருக்கலாம் என்றும் குறிப்பிடிருந்தார். அந்தப் பதிவிற்கு ஆதரவான கருத்துகள் பெரும்பாலும் இல்லை, ஒன்றிரண்டைத் தவிர. ஒன்றுமே தெரியாமல் பலர் நிகழ்ச்சி நடத்தும்போது இறையன்பு போன்ற விஷயம் தெரிந்தவர்கள் பேசுவதில் தவறில்லை என்றே பலரும் சொல்லியிருந்தனர். பின்னூட்டங்களிலும் சில கருத்துக்களை பிரபு காளிதாஸ் சொல்லியிருந்தார்.

அவருடைய கருத்துக்கள் இவை:
1. கதை சொல்வதற்காக ஒருவர் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டுமா?
2. அவர் இறங்கி அடிக்க வேண்டிய களங்கள் நிறைய இருக்கின்றனவே? அதை விட்டு ஏன் கதை சொல்கிறார்?
3. சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்வதை விட்டுவிட்டு இவரே உட்கார்ந்து புத்தகம் எழுதுவது சரியா?
4. தானும் தொலைக்காட்சியில் வருகிறோம் என்ற அற்ப ஆசைக்காக கூட அவர் கதை சொல்ல ஒத்துக்கொண்டிருக்கலாம்.
5. கதை சொல்ல ஒப்புக்கொண்டிருக்கும் இறையன்பு விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்வருவாரா?
இக்கருத்துக்களுக்கான என்னுடைய எதிர்வினைகள் கீழே:

1. கதை சொல்வதற்காக ஒருவர் ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டியதில்லைதான். ஆனால், ஐ.ஏ.எஸ் படித்த ஒருவர் கதை சொல்வது குற்றமா என்ன? ஒரு ஐ.ஏ.எஸ் கதையும் சொல்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், கதை சொல்வதற்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? நன்றாக கதை சொல்லும் திறனும் கதையும் தெரிந்தால் போதாதா? உலகமே கதை சொல்லாமல் நகர்கிறதா? நம் நாட்டிலும் நாற்று நடுபவர்கள் முதல் நாட்டை ஆள்பவர்கள் வரை எல்லோரும் கதைச் சொல்லிக்கொண்டுத்தானே இருக்கின்றார்கள்? கதைதான் சொல்லப்போகிறோம் என்றால் யாராவது ஐ.ஏ.எஸ் படிப்பார்களா என்ன?

2. அவர் இறங்கி அடித்த களங்கள் நிறைய இருக்கின்றன. அவர் பணி வரலாற்றைப் பார்த்தால் அது தெரியும். அவர் பணிபுரிந்த மாவட்டங்களில் என்னென்ன புதுமைகள் செய்தார், எவ்வளவு நேர்மையாக இருந்தார், என்னென்ன சாதித்தார் என்று புரியும். நிலவொளிப் பள்ளி, கடலூரில் மீனவக் குடும்பளுக்காகச் செய்தவை, சுற்றுலாத் துறையில் இருந்தபோது செய்த சாதனைகள் என இப்பட்டியல் நீளும்.. இப்போதும் அவர் தயாராகவே இருக்கிறார். ஆனால், அரசு அவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் 'தூக்கி அடிப்பதிலேயே' குறியாக இருக்கிறது.

3. அவர் எத்தனையோ சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்திருக்கிறார். அவர் அறிமுகம் செய்து நான் படித்த புத்தகங்கள் அனேகம். மேலும், அவர் புத்தகம் எழுதக்கூடாது என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா? அதுமட்டுமல்ல. அவர் தொலைக்காட்சியில் பேசுவதாலும் புத்தகம் எழுதுவதாலும் தன்னுடைய பணியில் சிறப்பாகப் பணியாற்றவில்லை என்ற சொல்ல ஆதாரம் எதுவும் இல்லையே? அதோடு, இறையன்புவின் பெரும்பான்மையான புத்தகங்களைப் படித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். அவருடைய சில புத்தகங்களைப் படித்தால் பல புத்தகங்களைப் படித்த அளவுக்கான செய்திகள் இருக்கும். குறிப்பாக, பத்தாயிரம் மைல் பயணம், இலக்கியத்தில் மேலாண்மை, வையத் தலைமை கொள், போர்த் தொழில் பழகு, Ancient Yet Modern, Random Thoughts போன்ற புத்தகங்கள். இலக்கியத்தில் மேலாண்மை என்ற நூலில் அவர் கிட்டத்தட்ட 300 புத்தகங்களை ஆராய்ந்திருக்கிறார். ஒவ்வொரு புத்தகம் பற்றிய சிறு குறிப்பும் கொடுத்து அறிமுகம் செய்கிறார். எனவே, அவர் புத்தகங்களை அறிமுகம் செய்வதில்லை என்பது தவறு.

4. தொலைக்காட்சியில் வரவேண்டும் என்பதற்காக அவர் இதைச் செய்கிறார் என்பது அவதூறு அல்லாமல் வேறொன்றுமில்லை. அப்படி வந்துதான் அவர் பிரபலமாக வேண்டும் என்றில்லை. மேலும், இறையன்பு வெறும் கதைகளைச் சொல்லிச் செல்பவர் அல்லர். முடிந்தவரை இளைஞர்களை முன்னேற்ற தன்னாலான உத்வேகத்தைக் கொடுத்து வருகிறார். அவரால் தாக்கம் பெற்று முன்னேறிய இளைஞர்கள் பலர். அவரைக் கொண்டு தொலைக்காட்சிகள் பிரபலமடைய முயல்கின்றன என்று சொன்னால் கூட அது பொருந்தும்.

5. இறுதியாக, விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் தயாரா இல்லையா என்று தெரியாது. ஆனால், அவ்வாறு செய்வது அரசுப்பணிக்கு புறம்பானது. காரணம், தற்போது தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகள் அரசியல் தொடர்பாகவையே பெரும்பாலும் இருக்கின்றன. ஒரு அரசு அதிகாரி அரசைப் பற்றிக் கருத்து சொல்லக்கூடாது. ஏற்கெனவே, காவல்துறை பற்றி சகாயம் ஐ.ஏ.எஸ். கருத்துச் சொல்லி அது பெரும் சர்ச்சையானது. இன்னொன்று, இவற்றை விவாத நிகழ்ச்சிகள் என்று சொல்வது தவறு. இவை விதண்டாவாத நிகழ்ச்சிகள். தொ.காட்சியில் கதை சொல்வதே விளம்பரத்துக்காக என்று முதலில் சொன்ன பிரபு காளிதாஸ் பின்னர் விவாதங்களில் மட்டும் பங்குபெற அழைப்பது எப்படி? அதுவும் விளம்பரம் ஆகிவிடாதா?

இது இறையன்புவுக்கு 'ஜல்லி' அடிக்கும் பதிவல்ல. எனக்கும் அவரிடம் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன, விமர்சனங்களும் உண்டு. ஆனால், பிரபு காளிதாஸ் போல அவரைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் (அவர் ஐ.ஏ.எஸ் என்பதைத் தவிர) ஒற்றை வரியில் விமர்சனம் என்ற பெயரில் எதையாவது சொல்வது வேடிக்கையாக இருக்கிறது!

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

புத்தகங்களைக் கொண்டாடுவோம்!

திருவிழா என்றவுடன் அது நிச்சயம் கடவுள் நம்பிக்கையோடு தொடர்புடையது என்றே நம் பொது மனம் யோசிக்கும். அல்ல. திருவிழா என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு. ஒரு சமூகத்தின் பல்வேறு வகையான மக்களை ஒன்றிணைப்பது. அது ஒரு கூட்டுக் கொண்டாட்டம். 

சமீப காலங்களில் புது வகையான திருவிழாக்கள் நடக்கின்றன. அதில் ஒன்று புத்தகத் திருவிழா. புத்தகத் திருவிழா என்று சொல்லும்போதே எனக்குள் பிறக்கும் உவகையை வர்ணிக்க முடியவில்லை. புத்தகங்களைக் கொண்டாடாமல் வேறு எதை நாம் கொண்டாடப் போகிறோம்? புத்தகங்களை ஒரு சமூகம் எந்தளவு கொண்டாடுகிறதோ அதை விட அதிகமாகவே அதன் வளர்ச்சி எல்லா நிலைகளிலும் இருக்கும் என்பது திண்ணம். அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லமுடியும். அந்த வகையில் என் தஞ்சை மண்ணில் இரண்டாம் ஆண்டாகப் புத்தகத் திருவிழா கடந்த மாதம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 

10 நாள் நடைபெற்ற அந்தத் திருவிழாவுக்கு நாள்தோறும் செல்ல வேண்டும் என்பதே ஆசை. முயன்றேன். என்றாலும், முடியவில்லை. ஐந்து நாள் சென்று வந்தேன். 
நான் வாங்கிய புத்தகங்கள்

இந்த ஆண்டுப் புத்தகத் திருவிழாவிலும் மொத்தம் 120 அரங்குகள். ஆனால், உயிர்மை பதிப்பக அரங்கு இல்லை. நான்தான் சரியாகக் கவனிக்கவில்லையோ என்று மீண்டும் ஒருமுறை சுற்றி வந்தேன். உயிர்மைக்கான அரங்கு ஒதுக்கப்படவில்லை. நான் எதிர்பார்த்துப் போன புத்தகங்களில் சில அந்தப் பதிப்பகத்தின் வெளியீடுகள். நல்லவேளை! உயிர்மையின் சில புத்தகங்களையாவது வாங்க முடிந்தது. எப்படி என்கிறீர்களா? ஏதோ ஒரு பதிப்பக அரங்கில் மேஜைக்குக் கீழே நிறைய நூல்கள் கண்ணில் பட்டன. திரையை விலக்கி பார்த்தபோது எல்லாம் உயிர்மை வெளியீடுகள். விற்பனையாளர் வந்து "உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். நான் எடுத்துத் தருகிறேன்" என்றார். நான் பெயர்களைச் சொன்னேன். அவர் "உயிர்மையின் புத்தகங்கள் இங்கே கிடையாது” என்றார். நான் கீழேயிருந்த எல்லாப் புத்தகங்களையும் காட்டி "இவையெல்லாமே உயிர்மை வெளியீடுகள்தானே?” என்றேன். அவரே அதை நம்ப முடியாமல் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். பிறகு, சில புத்தகங்களை வாங்கினேன். உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளர் மனுஷ்யபுத்திரன் தி.மு.க.வில் இணைந்தது அர்ரரன்மங்ககு ஒட்துக்கப்படாததற்கு காரணமாக இருக்குமோ என்று தோன்றியது. ஏனென்றால், இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துவது மாவட்ட நிர்வாகம். அதாவது தமிழக அரசு என்று சொல்லலாம். 

தஞ்சை மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் அவர்களிடம் பரிசு பெறுவது (கடந்த ஆண்டு)
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர் வெ. இறையன்பு வந்திருந்தார். அன்றைய சிறப்புப் பேச்சாளர்கள் இருவர். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் மற்றும் இறையன்பு. லேனாவின் பேச்சு என்னைக் கவரவில்லை. மிக மேலோட்டமான பேச்சு. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு “வாசிப்பே நமது சுவாசிப்பு”. 40 நிமிடங்கள் பேசியும் வாசிப்பின் முக்கியத்துவத்தை ஆழமாகவே பேசவில்லை என்று தோன்றியது. 

இரண்டாவதாக இறையன்பு. இறையன்பு அரங்குக்கு வந்தபோதே பலத்த கரவொலி, விசில் சத்தம். அன்றைக்குக் கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் அதிகளவில் வந்திருந்தனர். அரங்கமே நிரம்பியிருந்தது. அது இறையன்புக்காகத்தான் என்பது வெளிப்படை. இறையன்புக்கென்று தலைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. அதனால் அவரும் இதே தலைப்பில் பேசுவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அவர் பேசிய தலைப்பு வித்தியாசமானது. அவர் இப்படித் தொடங்கினார் தன் உரையை. “லேனா தமிழ்வாணன் அவர்கள் ‘வாசிப்பு நமது சுவாசிப்பு’ என்ற தலைப்பில் பேசியதால் நான் ‘வாசிப்பது வீண்’ என்ற தலைப்பில் பேசலாமென்று இருக்கிறேன்”. அரங்கில் ஒவ்வொருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அதன் பின்பு, 40 நிமிடங்கள் சொல்மாரி பொழிந்தார். அவருக்கே உரித்தான தனித்த உடல்மொழி அவர் சொல்லும் கருத்தை இன்னும் ஆணித்தரமாகச் சொல்லியது. ஆனாலும், அவர் எப்போதும் பேசும் அளவு பொதுஅறிவுத் தகவல்கள் அதிகம் இல்லை. என்றாலும், நேரம் போனதே தெரியவில்லை. மிக ஆழமான உரை. அவருடைய உரையை நேரடியாகக் கேட்பது எனக்கு இது மூன்றாவது முறை. அவர் பேசிக்கொண்டிருக்கும்போது கீழே சில 40 வயது பெண்மணிகள் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் என்பதை எளிதாக அறியமுடிந்தது. நான் எப்போதும் போல அவர் உரையை அலைபேசியில் ஒலிப்பதிவு செய்துகொண்டேன். 
இறையன்பு அவர்களின் சொல்மாரி

நான் பெரிதும் மதிப்பது இந்த விழாவை இவ்வளவு நேர்த்தியாக நடத்திய தஞ்சை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் அவர்களைத்தான். அவர் இதற்காக எடுத்துக்கொண்ட சிரத்தையை ஒவ்வொரு நாளும் உணர முடிந்தது. அவர் 4 ஆண்டுகளாகச் சிறந்த நிர்வாகத்தைச் அளித்தார். மக்களிடம் குறைகளைக் கேட்டு முடிந்தளவு நிவர்த்திச் செய்து வந்தார். கையூட்டும் வாங்குவதில்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். மிகவும் எளிமையானவரும் கூட. எளிதில் அவரைச் சந்தித்துப் பேசலாம். கடந்த முறை என்னிடம் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். இருவரும் திருக்குறள் பற்றிப் பேசினோம். சில புதிய முயற்சிகளை அவர் வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளார். சமீபத்தில் கூட, ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோலார் பேனல்கள் பொருத்தி (சோலார் பைக் ஸ்டாண்ட் உட்பட) சாதனை படைத்தார். இதனால் ஆண்டுக்கு 24 லட்சம் மின் கட்டணம் மிச்சமாகிறதாம். (நன்றி: புதிய தலைமுறை). கொடுமை என்னவென்றால், திருவிழா முடிந்த 3 நாட்களில் அவர் இங்கிருந்து மாற்றப்பட்டுவிட்டார். 
தஞ்சை மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் அவர்களிடம் பாராட்டு பெறுவது

புத்தகம் படிப்பது என்பது இன்று சமூகத்தையும் குடும்பத்தையும் சீரழிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. ஒருவன் தன் வீட்டில் பொதுப் புத்தகம் படித்தால் அவன் குடும்பத்தில் உள்ளவர்களே அவனை ஏலியன் மாதிரிப் பார்க்கிறார்கள். அல்ல அல்ல. ஏலியனைக் கூட ஆச்சர்யமாகத்தான் பார்க்கிறார்கள். புத்தகம் படிப்பவனைத்தான் அசூயையோடு பார்க்கிறார்கள். என்ன சொல்ல? 

புத்தகங்களைப் பற்றி எவ்வளவுதான் எழுதினாலும் பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துவிடுவதில்லை. ஆனாலும், ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கும்போதும் மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. அதனாலேயே, இன்னும் பக்கம் பக்கமாகப் புத்தகம் படிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி எழுதிக்கொண்டே இருப்பேன். 

இந்த ஆண்டு என்னுடைய பட்ஜெட் ஐயாயிரம் ரூபாய். ஆனால், அதற்கும் அதிகமாகவே வாங்கிவிட்டேன். மொத்தம் 80 புத்தகங்கள். அந்தப் பட்டியல் மிகவும் தேர்ந்தெடுத்து வாங்கப்பட்டது. ஒவ்வொரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நேரம் வாய்க்கும்போது அப்புத்தககங்களின் சிறு அறிமுகத்தோடு பேசுகிறேன். இப்போது நான் வாங்கிய நூல்களின் பட்டியல் மட்டும் கீழே. 

பகுத்தறிவு நூல்கள்: 
1. தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரணச் சாசனம்) – பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு 
2. சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார் – திராவிடர்கழக வெளியீடு 
3. கறுப்புச் சட்டை – சுகி சிவம் - திராவிடர்கழக வெளியீடு 
4. சிதம்பர ரகசியம்? – கி. வீரமணி - திராவிடர்கழக வெளியீடு 
5. நவமணிகள் – தந்தை பெரியார் - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு 
6. மகாபாரத ஆராய்ச்சி – கி. வீரமணி - திராவிடர்கழக வெளியீடு 
7. சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? – தந்தை பெரியார் - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு 

கவிதை: 
8. தனிமையின் ஆயிரம் இறக்கைகள் – குட்டி ரேவதி – அடையாளம் 
9. ஆலாபனை – அப்துல் ரகுமான் – நேஷனல் பப்ளிஷர்ஸ் 

நாவல்: 
10. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி – காலச்சுவடு பதிப்பகம் 
11. கானகன் – லக்ஷ்மி சரவணகுமார் – மலைச்சொல் பதிப்பகம் 
12. ரோலக்ஸ் வாட்ச் – சரவணன் சந்திரன் – உயிர்மை பதிப்பகம் 
13. கதிரேசன் செட்டியாரின் காதல் – மா.கிருஷ்ணன் – மதுரை பிரஸ் 
14. கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – கிழக்குப் பதிப்பகம் 
15. மதில்கள் – வைக்கம் முகம்மது பஷீர் – காலச்சுவடு பதிப்பகம் 
16. ஈஸ்வர அல்லா தேரே நாம் – ஜெயகாந்தன் – மீனாட்சி புத்தக நிலையம் 
17. பிரம்மோபதேசம் – ஜெயகாந்தன் - மீனாட்சி புத்தக நிலையம் 
18. நெஞ்சக் கனல் – நா. பார்த்தசாரதி – எல் கே எம் பப்ளிகேஷன்ஸ் 
19. இரும்பு குதிரைகள் – பாலகுமாரன் – விசா பப்ளிகேஷன்ஸ் 
20. வாழ மறந்தவன் (மலையாள நாவல்) – வெட்டூ ராமன் நாயர் – சாகித்ய அக்காதெமி 

கட்டுரைகள்: 
21. துயரமும் துயர நிமித்தமும் – பெருமாள் முருகன் – காலச்சுவடு பதிப்பகம் 
22. முருகன் விநாயகன் (மூன்றாம் உலக அரசியல்) – கௌதம சித்தார்த்தன் – எதிர் வெளியீடு 
23. சங்க காலச் சாதி அரசியல் – கௌதம சித்தார்த்தன் – எதிர் வெளியீடு 
24. டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன – மனுஷ்ய புத்திரன் – உயிர்மை பதிப்பகம் 
25. வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை பதிப்பகம் 
26. என்றார் போர்ஹே – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை பதிப்பகம் 
27. இன்றில்லை எனினும் – எஸ்.ராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக் பேலஸ் 
28. எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது – சாரு நிவேதிதா – உயிர்மை பதிப்பகம் 
29. புதிய காலம் (சில சமகால எழுத்தாளர்கள்)– ஜெயமோகன் – கிழக்குப் பதிப்பகம் 
30. நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் – சுஜாதா – திருமகள் நிலையம் 
31. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன் – கிழக்குப் பதிப்பகம் 
32. உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் – வேங்கடம் – விகடன் பிரசுரம் 
33. எல்லோரும் வல்லவரே – சோம. வள்ளியப்பன் – கிழக்குப் பதிப்பகம் 
34. வேண்டும் எனக்கு வளர்ச்சி – எஸ்.ராமகிருஷ்ணன் – கிழக்குப் பதிப்பகம் 
35. சிந்தனை விருந்து – தெங்கச்சி கோ.சுவாமிநாதன் – கற்பகம் புத்தகாலயம் வெளியீடு 

சிறுகதைகள்: 
36. உதயம் – ஜெயகாந்தன் – மீனாட்சி புத்தக நிலையம் 
37. குஜராத்திச் சிறுகதைகள் – மன்சுக்லால் ஜாவேரி – சாகித்ய அக்காதெமி 
38. கதவு – கி.ராஜநாராயணன் – அன்னம் வெளியீடு 

வாழ்க்கை வரலாறு: 
39. என் சரித்திரம் – உ.வே.சாமிநாத அய்யர் – விகடன் பிரசுரம் 
40. சார்லஸ் டார்வின் (சுயசரிதை) – எதிர் வெளியீடு 
41. துறவி வேந்தர் ஸ்ரீ நாராயணகுரு – டி.பாஸ்கரன் – சாகித்ய அகாதெமி 
42. மறைமலை அடிகள் – இளங்குமரன் – சாகித்ய அகாதெமி 
43. அன்னமாச்சார்யா – அடபா ராமகிருஷ்ண ராவ் – சாகித்ய அகாதெமி 

தமிழ் மொழியியல்: 
44. திருக்குறளின் பெருமை – முல்லை முத்தையா – முல்லை பதிப்பகம் 
45. திருக்குறள் கதைகள் – கிருபானந்த வாரியார் சுவாமிகள் – குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் 
46. திருக்குறளும் தெய்வத்தின் குரலும் – புலவர் இராம்மூர்த்தி – வனிதா பதிப்பகம் 
47. மதிவளம் நமது செல்வம் – வா.செ.குழந்தைசாமி – பாரதி பதிப்பகம் 
48. தாய்மொழி பெறாததைச் சமுதாயம் பெறாதா? – வா.செ.குழந்தைசாமி – பாரதி பதிப்பகம் 
49. தமிழ் எழுத்துச் சீரமைப்பு – வா.செ.குழந்தைசாமி – பாரதி பதிப்பகம் 
50. வளர்க தமிழ் – குலோத்துங்கன் – பாரதி பதிப்பகம் 

ஆய்வு நூல்கள்: 
51. பாரதியின் அறிவியல் பார்வை – வா.செ.குழந்தைசாமி – பாரதி பதிப்பகம் 
52. பாரதி: கவிஞனும் காப்புரிமையும் – இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு பதிப்பகம் 
53. களப்பிரர் காலம் – டி.கே.இரவீந்திரன் – விகடன் பிரசுரம் 
54. இலக்கியத்தில் மேலாண்மை – வெ.இறையன்பு – நியூ சென்சுரி புக் ஹவுஸ் 
சுற்றுச்சூழல் & அறிவியல்: 
55. குப்பை உலகம் – சுப்ரபாரதி மணியன் – சேவ் வெளியீடு 
56. குப்பை கொட்டும் கலை – சிபி.கே.சாலமன் – கிழக்குப் பதிப்பகம் 
57. மேக வெடிப்பு – சுப்ரபாரதிமணியன் – எதிர் வெளியீடு 
58. சிவப்புச் சந்தை – ஸ்காட் கார்னி – அடையாளம் பதிப்பகம் 
59. ஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபு ஃபுகோகா – எதிர் வெளியீடு 
60. கனவுகளின் விளக்கம் – சிக்மன்ட் ஃப்ராய்ட் – பாரதி புத்தகாலயம் 
61. அமானுஷ்யம் – ஜி.எஸ்.எஸ். – விகடன் பிரசுரம் 

ஆன்மிகம்: 
62. திருமூலர் அருளிய திருமந்திரம் - மூலமும் தெளிவுரையும் (முதல் பாகம்) – கோ.பெரியண்ணன் – வனிதா பதிப்பகம் 
63. திருமூலர் அருளிய திருமந்திரம் - மூலமும் தெளிவுரையும் (இரண்டாம் பாகம்) – கோ.பெரியண்ணன் – வனிதா பதிப்பகம் 
64. திருமூலர் அருளிய திருமந்திரம் - மூலமும் தெளிவுரையும் (மூன்றாம் பாகம்) – கோ.பெரியண்ணன் – வனிதா பதிப்பகம் 
65. திருமூலர் அருளிய திருமந்திரம் – அனுபவ உரை – டி.வி.வெங்கட்டராமன் – பாரதி பதிப்பகம் 
66. ஸ்ரீ ராமானுஜர் 1000 – தி இந்து வெளியீடு 

மருத்துவம்: 
67. நலம் 360 – மருத்துவர் கு. சிவராமன் – விகடன் பிரசுரம் 
68. செல்வ யோகங்கள் வந்து குவிய முத்திரை பயிற்சிகள் – ஜாண் பி. நாயகம் – ராம்பிரஷாத் பப்ளிகேஷன்ஸ் 
69. நீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம் – ஆ.நடராசன் – மதிநிலையம் 
70. நரம்புத் தளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம் – ஆ.நடராசன் – உஷா பிரசுரம் 
71. உடல் நலம் – டாக்டர்.கெங்காதரன் – லியோ புக் பப்ளிஷர்ஸ் 
72. மூலிகை மகத்துவம் – தேவூர் மணி வைத்தியர் – தாமரை பப்ளிகேஷன்ஸ் 
73. வள்ளலார் அமுத மருந்து – லோகநாதர் – விதை வெளியீடு 

பொது நூல்கள்: 
74. ஜெயகாந்தன் முன்னுரைகள் – ஜெயகாந்தன் – மீனாட்சி புத்தக நிலையம் 
75. ஜெயகாந்தன் முன்னுரைகள் 2 – ஜெயகாந்தன் – மீனாட்சி புத்தக நிலையம் 
76. கி.ராஜநாராயணன் பதிலகள் – அகரம் பதிப்பகம் 

ENGLISH NOVELS 
77. New Moon - Stephenie Meyer - Atom Books 
78. When God Was A Rabbit-Sarah Winman - Head Line Publishers 
79. Our Impossible Love - Durjoy Datta - Penguin Publishers 
80. Doors Open - Ian Rankin - Orion Books 

புதன், 20 ஜூலை, 2016

எனக்கு இரண்டு முறை பேய் பிடித்திருக்கிறது!!

எனக்கு இரண்டு முறை பேய் பிடித்திருக்கிறது. என்னடா இது, கடவுள் மீதும் பேய் மீதும் நம்பிக்கை இல்லாதவனுக்கா என்று நண்பர்கள் ஆச்சர்யப்படக்கூடும். உண்மைதான். அந்தப் பேய் பிடித்த அனுபவத்தைதான் சொல்லப் போகிறேன்.

கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது முதல்முறை பேய் பிடித்தது. இரண்டாம் முறைதான் மறக்கவே முடியாதது.

அது நான் வீட்டில் இருந்தபோது வந்தது. அப்போது நான் கல்லூரி இறுதி ஆண்டுப் படித்துக்கொண்டிருந்தேன். கடைசிச் செமஸ்டர். ப்ராஜக்ட் வேலைகள் முடிக்கப்படாமல் இருந்தன. இன்னும் மூன்று நாள்களுக்குள் முழுதும் முடித்துச் சமர்ப்பிக்க வேண்டிய நிலை. இரவு பகல் பாராமல் இறுதி வடிவத்தைத் தயார் செய்து கொண்டிருந்தோம். (கடைசி நேரம் என்பதால்தான் இந்த இரவு பகல் பாராத உழைப்பு). மெய்யாகச் சொல்கிறேன். அந்த மூன்று நாள் நான் இம்மி கூடத் தூங்கவில்லை. கண்ணை மூடிப் படுத்தால் அடித்துப் போட்டது போல் தூங்க நேரிடும் என்ற பயத்தில் தூக்கம் வரும்போதெல்லாம் நடந்துகொண்டே பாட்டுக் கேட்பேன். பாடவும் செய்வேன். ப்ராஜக்ட் ரிவீவ் முடிந்து வீட்டுக்கு வந்து தூங்கியபோது மணி இரவு ஒன்றாகியிருந்தது. அப்போதுதான் இரண்டாம் முறை பேய் பிடித்தது.

மூளை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைவது போல் இருந்தது. அப்படியே நீர் போல் வழியத் தொடங்கியது. என் நெஞ்சின் மீது பேய் வந்து அமர்ந்து கொண்டது. என்னைப் பிடித்து அமுக்கியது. நான் தள்ளிவிட முயன்றேன். அது பேய்ய்ய்.. நானோ அற்ப மனிதன். அதனால் அது என்னை மேலும் ஆக்கிரமித்துக்கொண்டது.

என்னால் நகர முடியவில்லை. கையையோ காலையோ அசைக்க முடியவில்லை. அந்தப் பேய் எப்படி இருக்கிறது என்று பார்க்க கண்ணைத் திறக்க முயன்றேன். பலனில்லை. குறைந்தபட்சம் கத்தினாலாவது யாராவது உதவ வருவார்கள் என்று கத்துகிறேன். “பாட்டி பாட்டி” என்று தொண்டை கிழியக் கத்துகிறேன். என்ன ஆச்சர்யம்!! நான் கத்துவது எனக்கு மட்டும்தான் கேட்கிறது. வெளியில் “ஊ ஊ” என்றுதான் ஒலி வருகிறது. என்னால் இரண்டு ஒலிகளையும் தெளிவாகக் கேட்க முடிகிறது என்பது நம்பமுடியாததாக இருந்தது. மூச்சுக் காற்றைக் கொஞ்சம் பலமாக விட்டாலே விழித்துக்கொள்ளும் என் பாட்டி அன்று ஏனோ இத்தனை சத்தத்தையும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. ‘இன்று நான் செத்தே விடுவேன்’ என்று உள்ளுக்குள் தோன்றியது. இருந்தாலும் முயற்சியை விடவில்லை. ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்த கூலி தரும்’ அல்லவா? என் முழு ஆற்றலையும் பிரயோகித்தேன். கூலி தந்தது. எழுந்து உட்கார்ந்துகொண்டேன். அந்தப் பேயைத் தேடினேன். எங்கோ ஓடிவிட்டது. பின்னர் மீண்டும் படுத்தேன். அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் மூளை கரையத் தொடங்கியது. ம்ஹூம்... இது சரிப்பட்டு வராது என்று கீழே இறங்கி சகோதரன் அருகில் படுத்துக்கொண்டேன். மீண்டும் பேய் பிடித்தால் அவன் காப்பாற்றுவான் என்றொரு நம்பிக்கை.


அந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து மனதில் ஆழமாகப் பதியவிட்டுக்கொண்டேன். அன்றிரவே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அது இன்றுதான் நிறைவேறியுள்ளது.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நான் பேய் பிடித்ததாகச் சொன்னது ‘Sleep Paralysis’ என்று அறியப்படும் தூக்க பக்கவாதம் என்று. இதுதான் இக்கட்டுரையின் மையம்.

தூக்க பக்கவாதம் என்பது எல்லோர் வாழ்விலும் ஒரே ஒரு முறையாவது வந்து விடும். இதை ஆங்கிலத்தில் ‘Nightmare’ என்பார்கள். நம்மூர்களில் இதை அமுக்குவான் பேய் என்பார்கள். கிரைண்டர் கல் ஒன்று நெஞ்சின் மீது உட்கார்ந்து அமுக்குவது போல் இருப்பதால் இதை அமுக்குவான் பேய் என்றனர் நம் முன்னோர்.

இதில் ஒரே ஒருமுறை வருவது, அடிக்கடி வருவது என்று இரண்டு வகை இருக்கிறது.. அடிக்கடி இதுபோல் வருவது அரிது. முதல் வகைதான் பரவலானது. இது கனவு நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் இடைப்பட்ட நிலை. (An intermediate state between conscious and dreamy states).

இது வருவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானது சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் விழிக்காதது. நம் உடலில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சுரக்கும் சில ஹார்மோன்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று மெலடோனின். (மெலனின் அல்ல. மெலனின் என்பது தோல் நிறமி. இது மெலடோனின்). இது இரவில்தான் சுரக்கும். அதுவும் நாம் தூங்கினால் மட்டுமே. இந்த மெலடோனின் சுரப்புச் சரியாக இருக்கும் வரை பிரச்சினை இல்லை. இதன் சமநிலை மாறும்போதுதான் தூக்கப் பிரச்சினைகள் தொடங்குகின்றன.

நிச்சயமாகத் தூ.ப.வாதம் வரும்போது நம் காதலன்/காதலியுடன் இருக்கும் மாதிரியான கனவுகள் நமக்கு வராது. அமானுஷ்யமான, பயங்கரமான, திகிலூட்டும் கனவுகள்தான் வரும். அதனால்தான் நாம் இதைப் பேய் என்று முடிவு செய்து விட்டோம்.
குப்புறப் படுத்தால் இது அதிகம் வருவதில்லை என்கிறார்கள். நேராகப் படுக்கும்போதுதான் இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இதற்குப் பெரிதாக மருந்து, மாத்திரைகள் எதுவும் கிடையாது. (மெலடோனின் மாத்திரைகள் கிடைக்கின்றன) தேவையும் படாது. பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தாது. அடிக்கடி வந்தால்தான் சிக்கல்.

உலகின் பெரும்பாலான இலக்கியங்களில் இதைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ அண்ட் ஜூலியட்’- இல் கூட இதைப் பற்றிய குறிப்பு வருகிறது. தமிழில் நாட்டார் கதைகளிலும் உண்டு. அனைத்துக் குழு மக்களிடமும் வெவ்வேறு பெயர்களில் இது உலாவுகிறது. ஆச்சர்யம் என்னவென்றால், கிட்டத்தட்ட அனைத்து குடி மக்களும் இதைப் பேயாகவே உருவகப் படுத்தியுள்ளனர். வெகு சில இனங்களில் மட்டுமே, இப்படிச் செய்வது ஏலியன்கள் என்று நம்புகிறார்கள்.

மனிதனின் அடிப்படை தேவைகள் மூன்று - உணவு, உடை, உறைவிடம். என் கல்லூரி பேராசிரியர் ஒருவர் நான்காவதாகக் காமத்தையும் சேர்த்துக்கொள்வார். நான் ஐந்தாவதாகத் தூக்கத்தையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஆம். தூக்கம் என்பதே இன்று பலருக்குத் துக்கத்தைத் தருகிறது.

நேரத்துக்குத் தூக்கம் வரப்பெற்றவன் உண்மையிலேயே வரம் பெற்றவன் என்றுதான் பொருள். குழந்தைகள் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் தூங்க வேண்டும். வயதானவர்களுக்கோ அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வராது. அப்படியே வந்தாலும் ஒழுங்கான தூக்கத்தைப் பெறமுடியாது. மணிக்கு முந்நூறு தடவை விழிப்பு வந்துவிடும். இளைஞர்கள் இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கின்றனர். இன்று வயதானவர்களை விடவும் இளைஞர்களுக்குத் தூக்கப் பிரச்சினை தூக்கலாகவே இருக்கிறது. காரணம், அவர்கள் விர்ட்சுவல் உலகத்திலேயே வாழ்வதால் தான். கண்ணை மூடினால் கலர் கலராக வருகிறதே தவிரத் தூக்கம் வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. தொழில்நுட்பத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. நம் உடலுக்கும் தட்ப வெட்பத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இறக்குமதியாகும் உணவுகளை உண்பது, பணிச் சுமை, காரணமே இல்லாமல் ஏற்படும் கோபம், மன அழுத்தம் – இவையும் கூடப் பெரும் காரணமாகின்றன.

கடந்த எட்டு ஆண்டுகளாக எனக்கு இரவில் படுப்பதற்கு அதிகாலை நான்கு அல்லது ஐந்து ஆகிவிடுகிறது. இன்றும் இதே கதைதான். நானும் 'தூக்கமின்மையைச் சரி செய்வது எப்படி?' என்றெல்லாம் புத்தகம் படித்து விட்டேன். பயனில்லை.

சில பேருக்குப் புத்தகத்தைத் திறந்தாலே தூக்கம் வந்துவிடும். அந்தப் பாக்கியமும் எனக்குக் கிடையாது. புத்தகத்தைத் திறந்தால் மூளை சுறுசுறுப்பாய் ஆகிவிடுகிறது. ஒரு மருத்துவர் ஒரு மாதத்துக்கு எடுத்துக்கொள்ளச் சொல்லி தூக்க மாத்திரையைத் தைரியமாகப் பரிந்துரைத்தார். நானும் முயன்று பார்த்தேன். அந்த நிலையெல்லாம் தாண்டி நான் வந்துவிட்டேன் என்பது புரிந்தது. மேலும், மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது எனக்குப் பயமாக இருந்தது. விட்டு விட்டேன்.
இந்த மாதிரி உங்களுக்கும் பேய் பிடித்திருக்கக்கூடும். இதுவரை இல்லையென்றால் இனிமேல் பிடிக்கும். பயப்படாதீர்கள். விழிப்போடு இருங்கள். அதாவது நன்றாகத் தூங்குங்கள்.


உபரித் தகவல்: ‘தூக்கம்’ என்ற சொல்லைத் தமிழில் முதன்முதலாகத் திருவள்ளுவர்தான் பயன்படுத்துகிறார். ஆனால், இன்று நாம் பயன்படுத்தும் உறக்கம் என்ற பொருளில் அல்ல.

வியாழன், 12 மே, 2016

கனவுகளும் கலைப்புகளும் (சிறுகதை)

மு.கு: பெரியாரின் பிறந்தநாளையொட்டி கடந்த ஆண்டு 'உண்மை' பத்திரிகை நடத்திய சிறுகதை போட்டிக்கு அனுப்பிய கதை. அனுப்பி 9 மாதங்கள் ஆனபிறகும் இன்னும் முடிவுகளை அப்பத்திரிகை வெளியிடாதலால் பொறுமையிழந்து இப்போது இங்கே பதிவேற்றுகிறேன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த பத்து நாட்களாக சந்திரிகா நடந்துகொள்வது அவளுடைய குடும்பத்தினர் யாருக்கும் துளியும் பிடிக்கவில்லை. அவர்களுக்கு இவள் செய்வதெல்லாம் மகா முட்டாள்தனமாகத் தெரிந்தது. சந்திரிகாவுக்குத் திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதத்தில் அவளிடம் காணாத குறையெல்லாம் இப்போது காண்கிறார்கள். முக்கியமாக அவளுடைய மாமியார். இவள் குடும்பம் நடத்தத் தகுதியில்லை என்பது மாமியாரின் எண்ணம். இந்து மத சடங்குகளெல்லாம் செய்து நடத்தி வைத்த திருமணம். திருமணம் முடிந்து ஒரு வாரத்துக்கு படு பிஸியாகப் போனது. மறுவீடு, கறி விருந்து என்பதோடு நில்லாமல் தெரிந்த உறவினர்கள் பலரும் தங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தனர்.

அவள் ஒன்றும் மற்ற பெண்கள் போல் திருமணம் ஆனதும் கணவனோடு தனிக்குடித்தனம் செல்ல ஆசைப்பட்டவள் அல்ல. கூட்டு குடும்பமாக வாழ ஆசைப்பட்டவள் தான். அவளுக்கும் அவள் குடும்பத்துக்குமான பிளவின் காரணம் சுய சிந்தனைக்கும் திணிக்கப்பட்ட சிந்தனைக்குமான போராட்டம்.

சந்திரிகா எளிமையான நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவள் தந்தை கொஞ்சம் பிற்போக்குத்தனமானவர் என்றாலும் சந்திரிகாவுக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கப்பட்டது.  அவள் அதை முறையாகப் பயன்படுத்திக் கொண்டாள். அவளுடைய பள்ளி ஆசிரியர் ஒருவரால் பெரியாரின் மீது ஈர்ப்பு வந்து பகுத்தறிவு, பெண்ணுரிமை சார்ந்து நிறைய புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினாள். அது அவள் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணாக அவளுக்கிருந்த பல கேள்விகளை அன்றே பெரியார் கேட்டிருக்கிறார் என்பதில் அவளுக்கு ஒரு பெருமிதமும் ஆச்சர்யமும் உண்டானது. நிறைய சிந்தித்து ஆராய்ந்த பின் பல விஷயங்களில் அவளுடைய தனிப்பட்ட முடிவுகளை எடுக்கலானாள். அதில் மிக முக்கியமானது அவள் பகுத்தறிவாதியானது. அவளுக்கு இறை நம்பிக்கை அற்றுப் போயிருந்தது. 

அவள் பள்ளிப் பேச்சுப்போட்டிகளில் தவறாமல் முதல் பரிசு வாங்கியவள். அவளுடைய வாதங்கள் மிக அழகானவையாகவும் அழமான கருத்து கொண்டவையாகவும் இருக்கும்.

ஒருமுறை தன் வகுப்புத் தோழி “சந்திரிகா, உன்னுடைய பெயர் மிகவும் பழைய பெயராக இருக்கிறதே. கொஞ்சம் மாடர்னானப் பெயராக மாற்றிக் கொள்ளேன்” என்றாள்.

அதற்கு சந்திரிகா “மாடர்னிசம் என்பது பெயரில் இருந்து பயனில்லை. சிந்தனையில் இருக்க வேண்டும்.” என்று சுருக்கமாக பதிலளித்த போது அவள் தோழியால் எதுவுமே பேச முடியவில்லை.

அதுபோல் இன்னொரு தருணத்தில் ஆத்திகவாதியான அவள் ஆசிரியருக்கும் அவளுக்கும் விவாதம் எழுந்தது. இவளுடைய அறிவார்ந்த விவாதத்தால் கோபமடைந்த ஆசிரியர் “உன்னைப் போன்ற நாத்திகவாதிகளால் தான் இன்னும் இந்த...” சொல்லி முடிப்பதற்குள் சந்திரிகா “நாங்கள் நாத்திகவாதிகள் அல்ல. பகுத்தறிவாதிகள்” என்று சொல்லி தன் சிந்தனையின் தெளிவைத் தெரியப்படுத்தினாள்.

அவளுடைய வீட்டில் இந்து சடங்குகள் பலவற்றையும் கடைப்பிடிப்பார்கள். அவளுக்கோ துளியும் உடன்பாடில்லை. ‘இந்த முட்டாள்தனமான சடங்குகளை எல்லாம் ஏன் செய்கிறீர்கள்’ என்று கேட்டாள். “காரணம் இல்லாம நம்ம பெரியவங்க சொல்லமாட்டாங்க” என்று அம்மா சொல்வாள். அப்போது “காரணம் இல்லையென்று யார் சொன்னது? ஒரு காரணமும் சரியான காரணமாக இல்லையே!” என்று சொல்லி அவர்கள் வாயை அடைத்து விடுவாள்.

சந்திரிகா மிகவும் முற்போக்கானவள். கடவுள் நம்பிக்கை இல்லாதவள். இப்போது அவளைச் சூழ்ந்திருக்கும் பிரச்சனையே அவளுடைய கடவுள் நம்பிக்கை தான். பெண் பார்க்க ஆரம்பித்த போதே தன் கடவுள் நம்பிக்கை, சடங்குகள் மேல் பற்றில்லாதமை குறித்து மேலோட்டமாகச் சொன்னாள். அப்போது அவர்கள் அதை பெரிய விஷயமாகக் கொள்ளவில்லை. இது ஒரு விஷயமா என்றே நினைத்தனர். ஆனால், அப்போதே சந்திரிகாவுக்குப் பட்டது ‘திருமண வாழ்வில் சண்டைகள் வந்தால் இதனால்தான் வரும்’ என்று. அவள் நினைத்தது போலவே நடந்தது.

அவளுக்கு திருமண நிகழ்விலேயே பல சடங்குகளில் விருப்பமில்லை. ஆனாலும், தன் பெற்றோரும் கணவன் வீட்டோரும் விரும்பியதால் ஒத்துக்கொண்டாள். அவர்களை மறுதலித்தும் அவளால் செயல்பட முடியவில்லை. இப்போது அவள்தான் இருதலைப் பாம்பாக அகப்பட்டுக்கொண்டாள். தன்னுடைய சொந்த விருப்பங்களையும் நிறைவேற்ற முடியாமல், மற்றவர்கள் வற்புறுத்தும் சடங்குகளையும் செய்ய முடியாமல் தவிக்கிறாள்.

சந்திரிகாவுக்கு பூஜை அறைக்குச் செல்வதோ, தினமும் விளக்கேற்றுவதோ, சூடம், சாம்பிராணி கொளுத்துவதோ என்று எதையுமே செய்ய பிடிக்காது. அவள் தன் விருப்பங்களை மிக மெதுவாகத்தான் வெளிக்காட்டத் தொடங்கினாள். அவளுடைய குரல் சன்னமாக ஒலித்தது அந்த வீட்டில். அப்போதே மற்றவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு.. “குடும்பப் பொண்ணா லட்சணமா தெனைக்கும் வெளக்கேத்தி இருக்கறதில்ல? படிச்ச பொண்ணுனா புத்திசாலியா நடந்துக்கும்னு நெனச்சேன். இப்பிடி சாமியக் கும்புடாம, குடும்பத்துக்கு அடங்காம நடக்கத்தான் சொல்லிக் கொடுத்தாங்களா? ஏண்டா, உன் பொண்டாட்டிய யார்டா சொல்லித் திருத்துறது? நா எதாவது பேசுனா மாமியார் கொடுமைனு புகார் கொடுப்பீங்க. பொறந்த வீட்லயே சொல்லிக் கொடுத்துருக்கனும்” என்று அங்கலாய்ப்பார். அவள் கணவனும் அதை ஆமோதிப்பான். அந்த வார்த்தைகள் மனதைப் புண்படுத்தினாலும், அதே வார்த்தைகளால் தன் மனதை பண்படுத்திக் கொண்டாள். அவளுடைய கொள்கைகளிலும் சிந்தனைகளிலும் இன்னும் உறுதியேற்பட்டது.

தன்னுடைய நிலையிலிருந்து அவள் மாறுவதாக இல்லை. அவள் படித்தவள். வேலைக்கும் செல்பவள். மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கிறாள். அவளுடைய சம்பளத்தை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். தன் விருப்பப்படி வேலை செய்ய அனுமதிக்கும் அவர்கள் தன் நம்பிக்கை, கொள்கைகளை அனுமதிக்காததை எண்ணி வருந்தினாள்.

சில நாட்களாகவே அவளுக்கு இந்த எண்ணம் இருந்துகொண்டேதானிருக்கிறது. அவளுடைய நண்பர்களும் ஊக்கப்படுத்தினர். இன்று இரவு ஒரு முடிவாக தன் மடிக்கணினியைத் திறந்து இணையத்தில் ஒரு வலைப்பூ தொடங்கினாள். அதற்கு “கனவுகளும் கலைப்புகளும்” என்று பெயரிட்டு தன் முதல் பதிவை இட்டிருந்தாள்.


 “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. பக்தி என்பது எதன் மேலும் ஏற்பட்டது இல்லை. பெண்களின் இறை நம்பிக்கைகளைக் கூட மற்றவர்களே தீர்மானிக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் மற்றவர்களுக்காக சில சடங்குகளுக்கு ஒப்புக்கொண்டேன். காரணம் பக்தி அல்ல. பயம் அல்ல. மனிதர்கள் மேல் நான் வைக்கும் மரியாதை. நான் என் விருப்பத்தை எவர் மீதும் திணித்ததில்லை. ஆனால், மற்றவர்களோ நல்லதுதான் செய்கிறோம் என்று தங்கள் விருப்பத்தைத் திணிக்கின்றனர். அவர்களுக்குத் தெரிவதில்லை திணிக்கும்போது அமிர்தம் கூட நஞ்சாகி விடும் என்பது.” - அந்தப் பதிவின் கடைசி வரிகள் இவை.

பி.கு: என்னுடைய மதிப்பீட்டில் இந்தக் கதை மிக மிக மோசமான கதை.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

செகாவும் ஜெ.கே வும்


மு.கு: ஜெயகாந்தனின் முதலாமாண்டு நினைவாக...இக்கட்டுரை.

எப்போதும் மழை இல்லை, மழை இல்லை என்றே புலம்பிய நமக்கு (எல்லோரும் புலம்பினோமா என்ன?) சென்ற ஆண்டு ‘மினி சுனாமி’ போல் சென்னை, கடலூர், தூத்துக்குடி போன்ற பகுதிகளை இயற்கை தன் பேராற்றலின் சிறு துளி கொண்டு எச்சரித்துப் போனது. மழையின் கொடூரங்களைத் தாங்க முடியவில்லை என்று எல்லோரும் தவித்தனர். உண்மையில் அது மழையின் கொடூரமா அல்லது மனிதக் கொடூரமா? விவாதம் பிறகு.

சென்னையில் பயங்கர மழை. ஊரெல்லாம் வெள்ளம். அம்மாசி என்பவர் சென்னையின் சேரிப் பகுதியைச் சேர்ந்த கிழவர். திருமணமாகாதவர். பாப்பாத்தி என்ற பெண் பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்து தீனன் என்ற ரிக்ஷாக்காரனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

ஆனால், தீனன் - பாப்பாத்தியால் முதலிரவு கொண்டாட முடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். அகமொன்று. புறமொன்று.

புறக்காரணம் – அன்றைய இரவு திடீரென்று சூறைக்காற்று. அதைத் தொடர்ந்து பெருமழை. சேரியின் குடிசைகள் சின்னாபின்னமாகின்றன. எல்லோரும் கிடைத்த இடங்களில் – வீடுகளில், பள்ளிகளில் தஞ்சம் புகுகின்றனர். தீனன் பாப்பாத்தியை செல்வம் என்பவனுடைய வீட்டில் விட்டு விட்டு மக்களுக்கு உதவ அவன் சென்று விடுகிறான். சேரிப் பகுதியே தத்தளிக்கிறது.

இரண்டு நாட்களாகியும் மழை நின்றபாடில்லை.  எங்கும் செல்ல முடியவில்லை. மாடி வீடுகளில் தங்கிய சேரி மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். உணவில்லாமல் தவிக்கின்றனர். அப்போது ஒரு லாரி வருகிறது. அதில் உணவுப் பொட்டலங்கள். ஏதோ ஒரு அரசியல் கட்சியின் வண்டி. வரிசையில் நின்று வாங்கிகொள்ள வேண்டும் என்று சொன்னபோதும் மக்கள் முண்டியடிக்கின்றனர். பொட்டலங்களை வரிசைக் கிரமமாக விநியோகிக்கின்றனர். அப்போது ஒருவன் ‘நாளைக்கு வேற ஒருத்தன் வந்து உங்களுக்கு பொட்டலம் கொடுப்பான். வாங்காதீங்க. நாங்களே நாளைக்கும் வருவோம். சரியா’ என்கிறான். மக்கள் இருந்த நிலைக்கு கிடைத்தால் போதும் என்றிருந்தனர். அம்மாசி கிழவர் மட்டும் வாங்கிக்கொள்ளவில்லை எதையும். சாப்பிடாமலேயே இருந்தார். அருகிலிருந்தவர்கள் வற்புறுத்தியும் அவர் எதையும் சாப்பிடவில்லை. அரசுப் பள்ளிகளில் கொட்டும் மழையில் இருந்தனர். இப்படியாக சென்னையின் சேரிப் பகுதி அந்த பெரு வெள்ளத்தை எப்படி எதிர்கொண்டது? மக்கள் என்ன செய்தார்கள்? மீண்டார்களா?  அரசியல்வாதிகள் என்னென்ன நாடகங்கள் நடத்தினர்? என்று பல கேள்விகள்.

இதுவரை நான் சொன்னது கடந்த ஆண்டு பெய்த மழையைப் பற்றி அல்ல. ‘பிரளயம்’ என்ற ஜெயகாந்தனின் குறுநாவலின் ஒரு பகுதி. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. இப்போது நடக்கும் அரசியல் கூத்துகளையும் மக்களின் அவலங்களையும் எப்படி அச்சுப் பிசகாமல் மனிதர் அன்றெ எழுதியிருக்கிறார் என்று வியந்தேன். இதை அவர் எழுதியது 1964இல்.


எப்படி இன்றும் இக்கதை பொருந்துகிறது? இதை ஜெயகாந்தனின் தீர்க்கதரிசனம் என்று சொல்வதா? அல்லது அவர் எழுதிய காலத்திலிருந்து இன்று வரை தமிழகத்தின் நிலை இதுவென்று கொள்வதா? மழை வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்கப்படும் சேரிப் பகுதிகள் அப்போது போலவே இப்போதும் உள்ளன என்பது புரிகிறது. இந்த முறை இதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்ததற்கும் ஊடக வெளிச்சம் பாய்ச்சியதற்கும் காரணம் இந்த முறை சேரிப் பகுதிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த சென்னையே பாதிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு எதுவுமே தலைநகரத்தில் நடந்தால்தான் காது கொடுத்துக் கேட்போம். கண் கொண்டு பார்ப்போம். அதுவும் நடுத்தர, மேற்தட்டு மக்களும் சேர்ந்து பாதிக்கப்பட்டதால்தான் இவ்வளவு முக்கியத்துவம். சேரி மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் அதை வெறும் செய்தியாக மட்டும் ஒற்றை வரியில் சொல்லிச் சென்றிருப்பார்கள். நாமும் வாசித்து ‘லைக்’ செய்து கடந்திருப்போம்.

இப்போது அகக் காரணத்துக்குள் நுழைவோம். அம்மாசியின் மகள் பாப்பாத்தி செல்வம் என்பவனுடைய வீட்டில் அவ்வப்போது சென்று வீட்டு வேலை செய்து வந்தாள். செல்வம் நிறைய படித்தவன். அமைதியானவன். திருமணம் செய்துகொள்ள விரும்பாதவன். அந்த இளைஞனுக்கும் அவளுக்கும் காதல் மலர்ந்தது. ‘திருமணம் செய்துகொள்’ என்று அவள் கேட்டாள். அவன் மறுத்தான். அதற்கு அவன் பெரிய விளக்கம் கொடுத்தான். அவளுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் அவனை நம்பினாள். அவன் நிறையப் படித்தவன் அவனுக்குத் தெரியாதா என்று. அவன் சொல்லித்தான் அவள் தீனனைத் திருமணம் செய்துகொண்டாள். செல்வத்துக்கு இதில் பரம திருப்தி. மழை காரணமாக அவள் வீட்டில் தஞ்சமடைந்தபோது அவன் அவளிடம் உறவுகொள்ள நினைத்தான். அவள் அதை விரும்பவில்லை. அவளுக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு. தன்னை முழுதாக நம்பும் தீனனை ஏமாற்றுகிறோமோ என்று. காரணம், முதலிரவு அன்று தீனன் பேசியது அவன் தன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதைக் காட்டியது. அதனால், அவள் செல்வத்திடம் நெருங்காமல் தயங்கினாள். அது செல்வத்தை மிகவும் எரிச்சலூட்டுகிறது.

அவன் அவளிடம் சொல்லியிருந்தான் “நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சில நாட்களிலேயே கசந்து விடும். எனவே, நீ வேறு யாரையாவது திருமணம் செய்துகொள். எப்போதும் போல் இங்கு வீட்டு வேலைக்கு வா. நாம் பழைய மாதிரியே சந்தோசமாக வாழலாம். ஒரே வீட்டில் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தால் கொஞ்ச நாளில் அது கசந்து விடும்” என்று. எல்லாம் முன்பே பேசித்தானே நடந்தது? இப்போது இவள் தாலியைக் காட்டி தள்ளிப் போகிறாளே என்று. அவன் பெரிய பெரிய தத்துவமெல்லாம் பேசுகிறான். கோபமடைந்து வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறான்.

இந்தக் கருத்தை படித்தபோது நான் அதிர்ந்து போனேன். ஜெ.கே வின் பல கதைகளில் இதுபோன்ற அதிர்ச்சிகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். இந்தக் கதையில் வரும் இவன் செய்கையை நிஜ வாழ்வில் ஓர் எழுத்தாளர் செய்திருக்கிறார். அவர்தான் ஆண்டன் செகாவ்.

செகாவ் ரஷ்யாவின் மிகச் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். அவரும் காதலித்தார், தன்னுடைய நாடகங்களில் நடித்து வந்த ஒல்கா நிப்பர் என்ற நடிகையை. திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார். ஒரு நிபந்தனையோடு. திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கக் கூடாது. அவர் ஒரு வீட்டிலும் இவர் ஒரு வீட்டிலுமாக வசிக்க வேண்டும். அதுவும் வெவ்வேறு ஊர்களில். ஏனாம்? அவருடைய காரணம், நம் ஜே.கே வின் கதாபாத்திரம் செல்வம் சொல்லும் அதே காரணம். “நிறைய விட்டுகொடுக்க வேண்டும், சமரசம் செய்ய வேண்டும். அது தேவையற்றது. சுதந்திரத்தோடு வாழ வேண்டும் என்றால் தனியே வாழ்வதே சிறப்பானது.” திருமணத்துக்குப் பிறகு ஒல்கா மாஸ்கோவிலும் செகாவ் யால்டாவிலும் இருந்தனர். [நன்றி – திரு. எஸ். ரா]

செகாவின் வாழ்க்கையை ஜெ.கே அறிந்திருப்பாரா? ஒருவேளை, அதை அறிந்து அதன் பாதிப்பில் தான் இப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினாரா? எனக்குத் தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இந்தக் கதையில் ஜெ.கேவின் சாதனைகள் என்று எதைச் சொல்வது? அவருடைய மொழி நடையையா? அல்லது அடித்தட்டு மக்களுடைய ஆதாரப் பிரச்னையையும் மேல்தட்டு மக்களின் கலாச்சார மதிப்பீடுகளையும் ஒரே கதையில் ஒன்றாக இணைத்து இழைத்திருக்கும் மேதமையையா? வெள்ள காட்சிகளின் வருணனைகளையா? உப கதாபாத்திரங்களின் கதைகளையா? எதைச் சொல்வது?

இறுதியாக, இந்நாவலில் அவர் எழுதிய சில மகத்தான வரிகளோடு முடித்துக்கொள்கிறேன்.

“ஒரு மனிதனின் ஆத்மாவையே ஒரு கவளம் சோற்றை விலையாகக் கொடுத்து வாங்கிவிட முடியும்”

“நமக்கெல்லாம் ஊடு கெடச்சா சோறு கெடைக்காது. ஊடு இல்லேன்றப்ப பொட்டலம் கெடைக்கும்”

“தருமம் செஞ்சா குடுத்தப்பறம் மொகம் சுருங்கக் கூடாது”

“சமூக வாழ்க்கையின் பொதுத் தன்மையும் ஒவ்வொரு மனிதனின் தனித் தன்மையும் மாறாதிருக்கும் வரை, வெறும் இடங்களை மாற்றிச் செல்வதால் மனித வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதில்லை”.

“ஒரு பிரளயமே வந்து இந்த உலகை அழித்தாலும் அது மீண்டும் புதிதாய் பிறக்கும். கேவலம் இந்த மழையா வந்து மனிதர்களின் வாழ்வுக்கு முடிவு கட்டிவிடும்?”

ஜெ.கே. நீங்கள் இப்போதும் கர்ஜித்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள்!

செவ்வாய், 12 ஜனவரி, 2016

வள்ளுவத்தை வாழ்வியலாக்க இயலுமா?

மு.கு: மே 9, 2015 அன்று உலகத் திருக்குறள் மையம், பாபநாசம் நடத்திய "வள்ளுவத்தை வாழ்வியலாக்க இயலுமா? இயலாதா?" என்ற பட்டிமன்றத்தில் இயலும் என்ற அணியில் நான் பேசிய உரையின் எழுத்து வடிவம்.  

43ஆம் அதிகாரத்தை முழுமையாகப் பெற்று 12ஆம் அதிகாரத்தோடு விளங்கும் நடுவர் அவர்களுக்கும், வள்ளுவத்தை வாழ்வியலாக்க இயலாது என்பதை நிரூபிக்க இயலும் என்ற நம்பிக்கையில் பேசி முடித்த எதிரணியினருக்கும், எனக்கு முன்னால் பேசிய என் அணியினருக்கும், நண்பர்களுக்கும் மற்ற 
அனைவருக்கும் என் பணிவான வணக்கம்!!! 

எனக்கு இப்போது ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது, நான் எடுத்து வந்த கருத்துக்களைப் பேசுவதா? அல்லது எதிரணியினரின் கருத்துகளுக்கு எதிர் கருத்து பேசுவதா என்ற குழப்பத்தில் இருக்கிறேன். முடிந்த வரையில் இரண்டையுமே பேசுகிறேன். 

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அது இப்படிப் பகன்றது – ‘மனிதர்கள் தவறு செய்யப் பயப்படக்கூடாது. ஏனென்றால் வாழ்க்கை ஒன்றும் பயன்பாட்டுக் கையேட்டோடு வருவதில்லை’. படித்தவுடன் எனக்கு இது பிடித்தது. கொஞ்சம் சிந்துத்துப் பார்த்தபோது இது தவறு என்றும் புரிந்தது. அது எப்படி வாழ்க்கை பயன்பாட்டுக் கையேட்டோடு வருவதில்லை என்று சொல்ல முடியும்? நம் அனைவருக்குமே திருக்குறள் என்ற ஒப்பற்ற பயன்பாட்டுக் கையேடு உள்ளதே என்று தோன்றியது!!! ஆம். திருக்குறள் ஓர் ஒப்பற்ற வாழ்வியல் நூல். 

எதிர் அணியினர் பெரிய நகைச்சுவை ஒன்று செய்ததைக் கவனித்தீர்களா? ஒரு சமய நூலை வாழ்வியலாக்க முடியாது என்றால் அதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. ஒரு அறிவியல் நூலை வாழ்வியலாக்க முடியாது என்றால் அதிலும் ஒரு தர்க்கம் இருக்கிறது; நியாயம் இருக்கிறது. ஆனால், ஒரு வாழ்வியல் நூலையே வாழ்வியலாக்க முடியாது என்று அவர்கள் சொல்வது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது! 

“வாழும் வள்ளுவம்” என்ற ஆய்வு நூலுக்காகச் சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற டாக்டர். வா.செ. குழந்தைசாமி அவர்கள் 2000 ஆண்டுகளாக வள்ளுவம் ஏன் வாழ்ந்துகொண்டு இருக்கிறது என்பதற்கு ஐந்து காரணிகளைக் குறிப்பிடுகிறார். அதில் மிக முக்கியமானது ‘இலக்கியலோடு இயல்பியல் சமுதாயத்தை உருவாக்கியவர் வள்ளுவர்’ என்பது. உலகின் பெரும் படைப்பாளிகள் என்று நாம் குறிப்பிடும் பலரும் கூட இலக்கியல் சமுதாயத்தைதான் (Ideal Society) முன்னிறுத்துகின்றனர். பிளாட்டோ எழுதிய ‘குடியரசு’ம், தாமஸ் மூர் எழுதிய ‘உடோஃபியா’வும், பேகன் எழுதிய ‘New Atlandis’ உம் இலக்கியல் சமுதாயத்தையே விவரிக்கின்றன. ஏன் அவ்வளவு தூரம் போய்க்கொண்டு? தமிழின் கவிச்சக்கரவர்த்தி என்று கொண்டாடப்படும் கம்பர் கூடத் தன் இராமாயணக் காவியத்தில் இலக்கியல் உலகையே வர்ணிக்கிறார். அயோத்தி தேசத்தில் தசரதன் யாருக்குமே உதவியது இல்லையாம். ஏன்? ஏனென்றால்... அங்கு வறியவர்கள் இருந்தால்தானே உதவ முடியும்? கம்பர் சொல்கிறார்- 
“வண்மையில்லை ஓர் வறுமையின்மையால் 
திண்மையில்லை நேர் செறுநர் இன்மையால் 
உண்மையில்லை பொய் உரை இலாமையால்” என்று.

இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றன. புலியும் ஆடும் ஒரே தடாகத்தில் நீர் அருந்தின என்ற வருணனையெல்லாம் வர்ணிக்க நன்றாகத்தான் இருக்கும். கண்ணகி, ராமன், சீதை, சாவித்ரி என்பவர்கள் இலக்கியல் கதாபாத்திரங்கள். இவர்கள் போல் நம்மால் வாழ முடியாது என்று நாம் அவர்களை வழிபடத் தொடங்கிவிட்டோம். அவர்களை அன்றாட வாழ்வில் பின்பற்றும் தலைவன், தலைவியாக நாம் எண்ணுவதில்லை. அதனால்தான் கவிஞர் வைரமுத்து சொன்னார் – “பூனையில் சைவம் கிடையாது. ஆண்களில் ராமன் கிடையாது” என்று. அதுதான் உண்மையும் கூட. நிஜ உலகம் எப்படி இருக்கிறது?. 

ஒழுக்கத்தோடு இழுக்கமும், பெருக்கத்தோடு சுருக்கமும், ஆக்கத்தோடு கேடும், சீர்த்த பருவத்தோடு கூம்பும் பருவமும், ஆகூழோடு போகூழும் இணைந்து இருக்கிறது. அதைத்தான் வள்ளுவமும் விவரிக்கிறது. 

வள்ளுவம் வறுமையில்லை என்று சொல்லவில்லை. இரவு, இரவச்சம் என்று வறுமையின் கொடுமையை உரக்கப் பேசுகிறது. வாழ்வியலைப் பேசுகிறது. இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யார் வேண்டுமானாலும் பேசலாம். நான் கூடச் சொல்லலாம் இந்த நாடும் உலகமும் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று. ஆனால், அதை அடைவதற்கு முறையான வழிமுறைகளும் செயல்திட்டங்களும் இருக்க வேண்டுமே! அதுதானே நம் நாட்டில் பிரச்சனை. ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’. அதை நன்கு புரிந்தவர் வள்ளுவர். வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியாத வழிகளை அவர் சொன்னது போல இட்டுக்கட்டுகிறார்களே! அவர் எத்தனை எத்தனை வழிகளை, கவனிக்கவும். நடைமுறைபடுத்தக்கூடிய வழிகளைச் சொல்லி இருக்கிறார்?? 


எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு மொழியின் இலக்கியத்தை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். சாதாரண மனிதன் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான கருத்துகளைக் கொண்ட, எளிமையான மொழியில் சொல்லப்பட்ட தொடக்க நிலை இலக்கியம். இரண்டு - ஆய்வுக்கு உட்படுத்தக் கூடிய அளவு சான்றோர்க்குரிய பேரிலக்கியம். இந்த இரண்டு தரப்பு மக்களையும் பூர்த்திச் செய்யக்கூடிய இலக்கியம் திருக்குறள். அது எல்லாத் தரப்பு மக்களுக்கும் தேவையான வழிமுறைகளைச் சொல்கிறது. எனவே, அது வாழ்வியல் இலக்கியம் தான். 

இங்கு யாருமே ஒழுக்கத்தோடு இல்லை என்று எதிரணியினர் புலம்புகின்றனரே...ஆண், பெண் ஒழுக்கமாக இல்லை என்று அங்கலாய்க்கிறார்களே! நான் கேட்கிறேன். எது அய்யா ஒழுக்கம்? வள்ளுவர் எங்காவது ஒழுக்கம் என்றால் இதுதான் என்று குறிப்பிட்டுள்ளாரா? ஒழுக்கத்தினால் வரும் உயர்வையும் ஒழுக்கமின்மையால் ஏற்படும் இழிவையும் ஒழுக்கத்தை எப்படிப் பேணிக் காப்பது என்பதையும்தான் வள்ளுவம் பேசுமே ஒழிய, பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிவதும் ஆண்கள் லோ-ஹிப் அணிவதும் ஒழுக்கமின்மை என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? ஒழுக்கமுடைமையின் பத்து குறள்களிலும் எங்காவது இதுதான் ஒழுக்கம் என்று வரையரை செய்துள்ளாரா என்று சொல்லுங்கள் பார்ப்போம். இல்லை. வள்ளுவருக்குத் தெரியும். ஒழுக்கம் என்பது மனித சமுதாயம் முழுவதும் எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே இருக்காது. அன்றைய காலத்தில் யானையை வீழ்த்துவது வீரம். இன்று அது குற்றம். அது போல் தான் ஒழுக்கமும். 

திருமணம் பற்றி வள்ளுவர் எங்காவது சொல்லியிருக்கிறாரா? தாலி கட்டிக்கொள்வது பற்றியோ மற்ற திருமணச் சடங்குகள் பற்றியோ ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறாரா? இல்லை. ஏன்? திருமணம் என்ற அமைப்பே ஒரு காலத்தில் இல்லாமல் போகலாம். திருமணம் என்பது அவசியமற்றுப் போகலாம் என்று வள்ளுவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் அவர் ‘வாழ்க்கை துணைநலம்’ என்று அதிகாரப் பெயர் வைத்துள்ளார். வாழ்க்கைக்கு ஒரு துணை தேவை என்பதை வள்ளுவர் மறுக்கவில்லை. ஆனால், அதைத் திருமணம் செய்துகொண்டுதான் தொடர வேண்டும் என்றும் அவர் சொல்லவில்லை. நான் இப்படிச் சொல்வதைக் கொலை குற்றம் போல நீங்கள் கருதலாம். என்றாலும், வள்ளுவரின் மனப்பான்மையை நான் இங்குச் சுட்டுகிறேன். 

வள்ளுவர் மிகத் தெளிவாக ஒழுக்கமுடைமையின் இறுதி குறளில் ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ என்று சொல்லி முடிக்கிறார். இதுதான் வள்ளுவத்தை வாழ்வியலாக்குவதற்கான ரகசியம். அவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அதனால்தான் இன்றும் பொருந்தக்கூடியதாக வள்ளுவம் இருக்கிறது. 

கிறித்துவ வேதமான பைபிள் இத்தனை மக்களுக்குத் தெரிகிறது. குரான் இத்தனை மக்களுக்குத் தெரிகிறது. ராமாயணமும் பாரதமும் தெரிகிறது. இவையெல்லாம் மக்களைப் போய்ச் சேர்ந்ததுபோல் ஏன் வள்ளுவம் போய்ச் சேரவில்லை. ஏனென்றால் அதை வாழ்வியலாக்கவியலாது என்று ஒரு கருத்தை எதிரணித் தலைவர் சொன்னார். அய்யா அவர்கள் குறிப்பிட்ட நூல்கள் அனைத்தும் மத நூல்கள். அவை எளிதாகச் சென்று சேர்ந்துவிடும். அங்கு வழிபாடுதான் முக்கியம். 

தமிழருவி மணியன் அவர்கள் அழகாகச் சொல்வார். “உலகத்தில் எத்தனையோ நாடுகளில் பௌத்தம் வேறூன்றிய போதும் புத்தரை உலகுக்கு அளித்த இந்தியாவில் ஏன் பௌத்தம் காலூன்றவில்லை. ஏனென்றால், இங்கு அது மார்க்கமாக இருந்தது. மற்ற நாடுகளில் அது மதமாக மாறியது”. மதமாக மாறினால் வள்ளுவரும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விடுவார். ஆனால், என்ன பிரச்னை என்றால் மதமாக மாற்றினால் வள்ளுவருக்குப் பூஜை செய்வோமே ஒழிய வள்ளுவத்தைக் கடைபிடிக்க மாட்டோம். எனவே, வள்ளுவம் வாழ்வியல் ஆக இன்னும் ஆண்டுகள் ஆகும். ஆனால், முடியாதது அல்ல. 

நான் இப்போது சொல்லப்போகும் கருத்து நம் மையத்து உறுப்பினர்கள் சிலருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தலாம். என்றாலும் சொல்லத்தானே வேண்டும் உண்மையை? ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காண்பதுதானே அறிவு’. வள்ளுவத்துக்கு நாம் கொடுக்கும் அதிகபட்ச மதிப்பே அதற்குப் பாதிப்பாகிவிடுமோ என்று என் மனம் பதைபதைக்கிறது. வள்ளுவரை தெய்வப்புலவர் என்று ஏத்தி குறளை வேதம் போன்று உயர்த்தி அதை நடைமுறைப்படுத்தமுடியாதபடி, அதைச் சாதாரண மனிதன் நெருங்கமுடியாதபடி செய்துவிடுவோமோ என்று தோன்றுகிறது. 

எத்தனையோ முறை இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டபோது நமக்கு நேரடித் தொடர்பு இல்லாத மக்கள் என்று தெரிந்தும் நாம் பாயும் போர்வையும் அளித்து உதவவில்லையா? ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?’ ஆம். நம்மிடம் இன்னும் அன்பு இருக்கிறது. பரிவு இருக்கிறது. கருணை இருக்கிறது. அப்படி இருக்கும் போது மனிதமே இல்லை, அன்பே இல்லை என்று எப்படி அய்யா சொல்கிறீர்கள்? கொஞ்சம் முயற்சி எடுத்தால் அதைப் பரவலாக்க முடியும். 

நம்மில் ஒருவராவது ஒரே ஒரு குறள் படி வாழ்ந்து வருகிறோமா என்று ஆவேசமாகக் கேட்டார் எதிரணியைச் சேர்ந்தவர். ஏன் நாம் எல்லாம் அந்த அளவுக்கு மனிதம் இழந்து விட்டோமா என்ன? கள்ளுண்ணாமை அதிகாரத்தில் சொல்லிய 10 குறள்கள் படி நம்மில் ஒருவர் கூட வாழவில்லையா? நான் கடைபிடிக்கிறேனே? நம்மில் பலர் அப்படி வாழ்கிறோமே? பரத்தையர் தொடர்பு இல்லையே? 

‘மனிதனுக்கு என்னதான் முயற்சியை வலியுறுத்தி பேசினாலும் ஒரு கட்டத்தில் வள்ளுவரே விதியின் வசம் தன்னை ஒப்படைத்ததால்தான் ஊழ் என்ற அதிகாரத்தை இயற்றினார்’ என்று ஒரு தவறான கருத்தை இங்கே பதிவு செய்தனர் எதிரணியினர். அதேபோல், வள்ளுவர் ஒரு இடத்தில் பொய் சொல்லக்கூடாது என்றும் இன்னொரு இடத்தில் அதையே மாற்றிப் பேசுவதாகவும், அவர் ஒரு குழப்பவாதி என்பது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கினர். ‘அவர் ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்று சொல்வதன் மூலம் பற்று இல்லாமல் இருக்கவேண்டும் என்கிறார். அப்படி இருந்திருந்தால் எப்படி அறிவியல் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கும்?’ என்ற கேள்வியையும் கேட்டனர். நம்மில் பெரும்பாலானோர் குறளை வைத்துக் குழப்பிக்கொள்வதற்குக் காரணம் ஒரே ஒரு குறளை மட்டும் எடுத்துக்கொண்டு அதைப் பொருள்கொள்வதால். அந்தக் குறள் எந்த அதிகாரத்தில், எந்த இயலில் வருகிறது என்று பார்க்க தவறியதே குழப்பங்களுக்குக் காரணம் ஆகும். நீங்கள் சொல்லும் குறள் சாதாரண மனிதனுக்கு இல்லறவியலிலோ களவியல் கற்பியலிலோ அரசியலிலோ சொல்லப்பட்டதல்ல. அது துறவறவியலில் துறவிகளுக்குச் சொல்லப்பட்டது. அதை வேறு சூழலில் பொருத்திப்பார்த்து பொருள் கொள்வது சரியான அணுகுமுறை அல்ல. அவர் மற்ற இடங்களில் எல்லாம் மனித முயற்சியின் மாண்பைத்தான் போற்றுகிறார். 

குறள் மற்ற இலக்கியம் போல் துன்பம் வரும்போது கடவுளிடம் சரணாகதி அடைந்துவிடு என்று சொல்லவில்லை. இறைவனிடம் பிரார்த்தனை செய், உன் துன்பமெல்லாம் தீரும் என்று போதிக்கவில்லை. அது சான்றோர்களை நாடச் சொல்கிறது. நம்மை விடப் பெரியவர்களின் துணையைத் தேடச் சொல்கிறது. இதை நம்மால் வாழ்வியலாக்க இயலாதா? இன்னும் சொல்லப்போனால் பொய் வேடம் போடும் துறவிகளைப் பற்றி நம்மை எச்சரிக்கிறது. 

சுவாமி என்று சொன்னால் விவேகானந்தர் மட்டுமே நம் நினைவுக்கு வந்த காலம் போய் சுவாமி என்று எத்தனை ஆனந்தாக்கள் வந்துவிட்டனர். அவர்கள் ஆனந்தமாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் சிறைக்குச் சென்று வந்தாலும் நாம் திருந்தின பாடில்லையே. மீண்டும் மீண்டும் அவர்கள் காலிலேயே விழுகிறோமே. நம்மை வள்ளுவர் எச்சரிக்கிறார். 
“மனத்தது மாசாக மாண்டார் நீராடி 
மறைந்தொழுகு மாந்தர் பலர்” என்று. 

எத்தனை பேர் அப்படி மனத்தில் மாசு கொண்டு வெளியில் வேடம் பூண்டு பொய்யாக நீராடி மறைந்து வாழ்கின்றனர். இந்த எச்சரிக்கையை நாம் கவனித்திருக்கிறோமா? இது அதிகம் அறியப்படாத குறள். 

வள்ளுவத்தை வாழ்வியலாக்க முடியாது என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? வள்ளுவத்தை வாழ்வியலாக்கி நமக்கு முன்னாலும் நம் காலத்திலும் வாழ்ந்த மனிதர்கள் இருக்கிறார்களே!! லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள், வள்ளலார், காமராசர் போன்றோர் வள்ளுவத்தை வாழ்வியலாக்கிக் கொண்டவர்கள்தானே. அவ்வளவு ஏன், நமது மதிப்புக்கும் ஆழ்மன அன்புக்கும் உரிய டாக்டர். அப்துல் கலாம் வள்ளுவத்தை வாழ்வியலாக்கி வாழ்ந்து வருபவர்தானே! பொது வெளிக்கு அறிமுகமாகாமல் இன்னும் எத்தனையோ மனிதர்கள் குறளை வாழ்வியலாக்கி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களால் முடியும் போது ஏன் மற்றவர்களால் முடியாது? 

வள்ளுவத்தை நீங்கள் வாழ்வியலாக்கவில்லை என்று சொல்லுங்கள். வாழ்வியலாக்க முடியாது என்று சொல்லாதீர்கள். 

நீங்கள் முடியாது என்று நினைத்தால் முடியாதுதான். ஆனால், நாங்கள் நேர்மறை சிந்தனையில் செல்கிறோம். வள்ளுவரே எங்களுக்குப் போதுமான ஊக்கத்தைக் கொடுக்கிறார். 
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும்” 

ஆம். நாங்கள் மெய் வருத்தி முயல்வோம். அந்த முயற்சியால் நிச்சயம் விரைவில் வாழ்வியலாக்க முடியும், முடியும் என்று சொல்லி உங்கள் அனைவருக்கும் என் ஆழ்மன நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

நன்றி! வணக்கம்! 

பி.கு: 
நடுவர்: தேசிய நல்லாசிரியர் திரு. கலைச்செல்வன் அவர்கள்
இயலும் அணியில்: வழக்குரைஞர் திரு. அரிய. அரசபூபதி, திருமதி. வசந்தா பாஸ்கர்(மாநில நல்லாசிரியை), திரு. அமல்ராஜ் (ஒய்வு பெற்ற ஆசிரியர்).இவர்களுடன் நான்....
இயலாது அணியில்: கவிஞர். பூவையார், ஆசிரியர் திரு. செங்கதிர்செல்வன், தலைமையாசிரியை திருமதி. சித்ரா மற்றும் திரு. பெரியசாமி.....
ஒளிப்படங்கள்: நண்பன் ஷகீல் ஷாகித்Ads Inside Post