செவ்வாய், 29 டிசம்பர், 2015

'யாமம்’ – நுகரப்படாத இரவின் வாசனை

இரவுக்கு வாசனை உண்டா? இரவுக்கென்று மணம் இருந்தால் அதுதான் ‘யாமம்’. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அற்புதமான நவீன நாவல் யாமம். 

இரவு என்பது நம்மில் பலரும் முழுதாகப் பார்த்து முடிக்காத, அனுபவிக்காத அற்புதமான பொழுது. நம் அகவுலகை பார்க்க உதவுவது இரவு. அந்த அகவுலகை நான்கு பேரின் வாழ்க்கையின் ஊடாக 360 பக்கங்களில் விவரிப்பதே இந்த நாவல். இது பல வகையில் அற்புதமான நாவலாக எனக்குத் தோன்றுகிறது. 

இந்த நாவலை முதலில் படிக்கத் தொடங்கிய போது ஏதோ மொழிபெயர்ப்பு நூலைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. கதை மாந்தர்களின் பெயரும் கதைக் களமும் கொஞ்சம் அந்நியமாகத் தோன்றின. ஆனால், கதை செல்ல செல்ல மிகவும் நெருக்கமாக உணர முடிந்தது. கதாபாத்திரங்கள் மனதைப் பிடித்துக்கொண்டு நகர மறுத்தனர். 

‘குறுமிளகின் கதை’, ‘முதல் சாசனம்’, ‘காற்றும் வெயிலும்’ என்ற மூன்று எழுதாக் கதைகள் சொல்லப்பட்ட பின்புதான் நேரடி கதை ஆரம்பமாகிறது., ‘மதராப்பட்டணம் என்னும் கடற்பாக்கம்’ என்ற அத்தியாயத்தில் சென்னை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உருவானது என்பதை மிக அழகாகச் சொல்கிறார். 

மிளகு வியாபாரம் செய்ய டச்சு நாட்டு வணிகர்களுக்கு அனுமதி கொடுப்பது, முகாலய மன்னர் ஷாஜகானின் பெண் ஷாகாநாராவின் தீப்புண்களை ஆற்றிய கதை, ஆங்கிலேய அதிகாரி ஃப்ரான்ஸிஸ் டே மசூலிப்பட்டணத்தை விட்டு மதராப்பட்டணத்தை உருவாக்குவது என்ற கதைகளில் கொஞ்சம் வரலாறும் கொஞ்சம் புனைவும் கலந்து சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. அதன் பின்பு, பட்டணத்துவாசிகளின் சரிதம் ஆரம்பமாகிறது. 

நான்கு தனி நபர்களின் வாழ்க்கையை நாவல் விவரிக்கிறது. இந்த நான்கு மனிதர்களுக்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. அவர்களை ஒரு சரடாக இணைப்பது ‘யாமம்’ என்னும் அத்தர் தான். 

1. யாமம் என்னும் அத்தர் தயாரிக்கும் கரீம். கரீமினுடைய முன்னோர்களால் அவருக்குக் கிடைக்கும் வரப்பிரசாதம். அது யாரையும் அனுமதிக்காமல் தனியாக ஒரு தோட்டத்தில் அவர் மட்டுமே வடிக்குமளவு மிகவும் ரகசியமானது. அவர் தயாரிக்கும் அத்தர் ஆளை மயக்கக்கூடியது. அதைப் பூசிக்கொண்டால் நம்மைச் சுற்றி இரவின் பிசுபிசுப்பு ஒட்டிக்கொள்ளும். அந்த அத்தரின் மூலம் பெரும் செல்வந்தராகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த கரீமுக்கு ஆண்மகன் பிறக்கவில்லை. ஆண்பிள்ளைகளிடம் மட்டுமே இந்த வியாபார சூத்திரத்தை கடத்துவார்கள். எனவே, அவர் மூன்று திருமணங்கள் செய்து கொள்கிறார். அப்படி இருந்தும் ஆண்பிள்ளை இல்லை. அவருடைய மனைவிகளான ரஹ்மானி, வகிதா, சுரையா மூவரும் தனித்துவமான குணம் கொண்டவர்கள். குதிரை பந்தயத்தின் மீது மோகம் கொண்ட கரீம் தன் செல்வம் முழுவதையும் அதில் இழந்து குடும்பம் நடத்த முடியாமல் வீட்டை விட்டுச் சொல்லிக்கொள்ளாமல் தலைமறைவாகிவிடுகிறார். அதன் பின்பு அவருடைய மூன்று மனைவிகளும் வறுமை எய்தி மீன் வியாபாரம் செய்யும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் குடும்பம் என்னாகிறது என்பது கிளைமாக்ஸ். 

2. பத்ரகிரி. லாம்டனின் நில அளவைக் குழுவில் பணி புரிபவன். சிறுவயதில் சரியில்லாத தந்தை, இளமையிலே உயிரை விடும் தாய். சித்தியின் அரவணைப்பில் தம்பி திருச்சிற்றம்பலத்துடன் வாழ்வு. திருச்சிற்றம்பலம் கணிதப்புலி. ஆராய்ச்சிக்காக லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் ஆய்வு செய்வதற்காகத் தன் மனைவி தையல்நாயகியை அண்ணன் பத்ரகிரியின் வீட்டில் விட்டுவிட்டுச் செல்கிறான். இங்கிலாந்து சென்ற சிற்றம்பலம் அங்குக் கணித ஆராய்ச்சியில் தன் முழுக் கவனத்தையும் செலுத்துகிறான். அங்கிருக்கும் மற்ற பேராசிரியர்களுக்கு இவன் உழைப்பைப் பார்த்து ஆச்சர்யம். எப்போதாவது தன் மனைவியின் நினைப்பும் அண்ணனின் நினைப்பும் வந்து போகும். ஆராய்ச்சியில் அதெல்லாம் மறந்தும் போகும். 

பத்ரகிரிக்கு விசாலா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறது. தையலுக்குக் குழந்தை இல்லை. அவள் பேசுவதும் சிரிப்பதும் பத்ரகிரிக்கு அவளுடன் இணைய வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. அதே சமயம், தம்பி மனைவியுடன் இப்படிச் செய்யலாமா என்று உறுத்துகிறது. ஆனாலும், அவன் இணைகிறான். குழந்தை உருவாகிறது. அவளைத் தன் வீட்டிலிருந்து வேறொரு வீட்டில் குடி வைக்கிறான். விசாலாவுக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது, சிற்றம்பலம் திரும்பி வந்தானா, பத்ரகிரி என்ன செய்தான் என்பது இவர்களின் கிளைமாக்ஸ். 

3. கிருஷ்ணப்பக் கரையாளர். மேல்மலையில் வசிப்பவர். நிறையச் சொத்துடையவர். அவருக்கும் சொந்தங்களுக்கும் சொத்துப் பிரச்னை. மிகவும் மனசு கஷ்டப்படுகிறார். ஆனால் மேல்மலையின் இயற்கை எழில் அவருக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அவருக்கு ஆங்கிலோ இந்தியப் பெண்ணுடன் தொடர்பு உண்டு. அவள் ஒரு வேசி. ஆனால், அவளுடைய நெருக்கம், அவளுடைய துணை அவருக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. அவளை நேரில் சந்தித்துத் தன்னோடு அழைத்து வந்து விடுகிறார் மேல்மலைக்கு. அவர்கள் இருவருக்கும் உள்ள உறவை தெளிவாகச் சொல்ல முடியாது. சில நேரம் இருவரும் மது அருந்திக்கொண்டே பல கதைகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். சில நேரம் எந்த உரையாடலும் நடக்காது. அமைதியாக இருப்பர். ஒரு கட்டத்தில் தன் அனைத்துச் சொத்தையும் சொந்தங்களிடம் எழுதிக் கொடுத்துவிட்டு மேல்மலையை ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் பெயரில் எழுதி வைத்து விட்டு தன் நாட்களை அவளோடு அங்கேயே கழிக்கிறார். 

4. சதாசிவப் பண்டாரம் என்னும் துறவி. பண்டாரம் என்ற பெயரை பார்த்து வயதான சாமி என்று எண்ணிவிடலாகாது. மத்திய வயது சாமி. இளமையிலேயே துறவு மனப்பான்மை கொண்டு வீட்டை விட்டு வந்துவிடுகிறது. நீலகண்டம் என்ற நாய் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் பண்டாரமும் செல்லும். நீலகண்டம்தான் பண்டாரத்தின் குரு. அது தன்னை வழிநடத்துவதாக நம்புகிறார். அது எங்கேயும் போகாமல் ஒரே இடத்தில் நின்றால் அவரும் அங்கேயே இருப்பார். அது நடக்கத்தொடங்கினால் அவரும் நடப்பார். ஒருபோதும் நீலகண்டத்துக்கு முன்னால் அவர் சென்றதே கிடையாது. ஒரு வீட்டில் நீலகண்டம் ரொம்ப நாட்கள் தங்கிவிடுகிறது. பண்டாரமும் அங்கே இருக்கிறார். அப்போது அந்த வீட்டில் உள்ள பெண்ணோடு உறவு கொள்கிறார். குழந்தையும் உருவாகிறது. ஒன்பது மாதம் அங்கயே இருக்கும் நாய் அவளுக்குப் பிரசவ வலி ஏற்படும் அன்று பார்த்துக் கிளம்பிவிடுகிறது. குடிசையில் பண்டாரத்தின் மனைவி பிரசவ வலியில். இந்த நீலகண்டம் நடக்கத்தொடங்கிவிடுகிறது. பெரும் இக்கட்டில் மாட்டிக்கொள்ளும் பண்டாரம் நாயின் பின்னால் போனாரா அல்லது மருத்துவரை அழைத்து வந்து மனைவிக்குப் பிரசவம் பார்க்கச் செய்தாரா என்பது இவர் கதையின் கிளைமாக்ஸ். இது கதையின் ரத்தினச் சுருக்கம் அல்ல. அணு அளவு சுருக்கம். 

இனி நாவலின் வெற்றிகளைப் பார்ப்போம். 

என்னை மிகவும் பாதித்த கதாபாத்திரம் சதாசிவப் பண்டாரம். நீலகண்டம் என்ற நாயின் பின்னாலேயே செல்லும் பண்டாரம் மிகப் பெரிய ஞானியாகவே எனக்குத் தோன்றினார். காரணம், அவ்வப்போது அவர் மனம் எந்தப் பக்கம் செல்வது என்று தடுமாறினாலும் இறுதியில் நீலகண்டம் பின்னால் செல்வது என்று தன் முடிவில் சிறிதும் மாற்றம் செய்து கொள்ளவில்லை. ‘இந்தியாவில் தெருப் பரதேசிகளிடம் ஞானம் கொட்டிக்கிடக்கிறது’ என்ற வைரமுத்துவின் வரி ஒன்று நினைவுக்கு வந்தது. 

இந்த நான்கு கதாபாத்திரங்களும் ஏதோவொரு தருணத்தில் சந்திப்பார்கள் என்ற நம் எதிர்பார்ப்பை உடைக்கிறார் எஸ்.ரா. அது இந்த நாவலின் மிகப் பெரிய வெற்றி என்பேன். நால்வரும் சந்தித்துக்கொண்டிருந்தால் அது சினிமாத்தனமாக இருந்திருக்கும். எனவே, இது முதல் வெற்றி. 

இரண்டு - இந்த நூல் மிக மிக நுண் சித்தரிப்புகளுடையது. இந்த நூலை படிக்கும்போது நம் வாசிப்பை இன்னும் சுவையுடையதாக ஆக்கவேண்டுமென்றால் சில வரலாறுகளை நாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நல்ல வேளையாக, நான் இதில் வரும் சில கதாபாத்திரங்களோடு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தேன். ஏ.எஸ்.ஐயர், லாம்டன், ஃப்ரான்ஸிஸ் டே போன்றவர்கள். இந்த நுண் சித்தரிப்புகள் முழுதும் ஒருமுறை படிப்பதால் நினைவிலிருக்காது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். கொஞ்சம் வரலாறு தெரிந்துகொண்டு இந்த நாவலை வாசிக்க நான் பரிந்துரைக்கும் புத்தகங்கள் இரண்டு: 
1. ‘சென்னை: தலைநகரின் கதை’ – பார்த்திபன் 
2. ‘கடைசிக் கோடு’ – ரமணன் 

இதன் மூன்றாவது வெற்றி என்ன தெரியுமா? இதன் எந்த அத்தியாயத்தை எடுத்துப் படித்தாலும் அது ஓர் அற்புதமான சிறுகதையாகத் தோன்றும். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை. இதில் ஆங்காங்கு கவித்துவமான வரிகள் வருகின்றன. 

நான்காவது வெற்றி - நான்-லீனியர் முறையில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல் உணர்வுகளை மிக ஆழமாகப் பாதிக்கிறது. நான்- லீனியர் முறையை மிகவும் சிறப்பாகக் கையாண்டுள்ளார் எஸ்.ரா. 

“யாவரின் சுக துக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப் போல முடிவற்று எல்லாப் பக்கங்களிலும் ஓடிக்கொண்டேயிருந்தது. அதன் சுகந்தம் எப்போதும் போல உலகமெங்கும் நிரம்பியிருந்தது” என்று முடிகிறது நாவல். எவ்வளவு பெரிய உண்மை!! யாமத்தைப் படித்தபின்பு என்னுடைய இரவுகளிலும் ஒரு வாசனை இருப்பதாகத் தோன்றியது.

ஒரு மகத்தான படைப்பை ஒரு முறை வாசித்தால் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியாது. கதை எப்படி நகர்கிறது என்பதுதான் முதல் முறை படிக்கும்போது நம் சிந்தையில் ஓடும். இரண்டு, மூன்று முறை படித்தால்தான் சில அபூர்வமான தருணங்களைத் தரிசிக்க முடியும். யாமத்தை நான் ஒரு முறை தான் படித்திருக்கிறேன். விலை கொடுத்து வாங்கி மீண்டும் படிக்க வேண்டும். 

பி.கு: இது நூல் பற்றிய விமர்சனம் அல்ல. ஒரு நல்ல நூலைப் பற்றிய அறிமுகம். 
கருத்துரையிடுக

Ads Inside Post