திங்கள், 14 செப்டம்பர், 2015

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை: 

உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும் விழுமியங்கள் என்று பல தளங்களில் வள்ளுவரின் உழவியல் பார்வையை எடுத்து இயம்புவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 

உழவின் சிறப்பு: 

எந்த ஒரு தொழிலைப் பற்றியும் குறிப்பிட்டு பேசாத வள்ளுவர் உழவுத் தொழில் பற்றி மட்டும் தனி அதிகாரம் அமைத்து ஆராய்வது நம்மையும் ஆராயத் தூண்டுகிறது. வேட்டைச் சமூகமாக இருந்த மனித சமூகம் நாகரிக சமூகம் ஆனதற்குக் காரணம் உழவுத் தொழிலே. சம வெளிகளில் தங்கிவிட்ட மனிதன் கண்டுபிடித்த முதல் தொழில் உழவுதான். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உழவுத் தொழில் தோன்றிவிட்டது.1 அதுதான் மனிதனை மற்ற மிருகங்களிலிருந்து மேம்பட்டவனாக மாற்றியது. “உழவே அறிவியல்களிலெல்லாம் உயர்ந்த அறிவியல்” என்று டாக்டர். ஜான்சன் கூறினார்.2 “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற பழமொழியும் உழவர்களை நோக்கித்தான் சொல்லப்பட்டது. பழமையை மறந்துவிடா பண்பு கொண்ட வள்ளுவர் இயல்பாகவே உழவு பற்றிப் பேச தனி அதிகாரம் படைத்துள்ளார். அப்படிப் பாடப் புகுந்த வள்ளுவர் பாயிரவியலிலேயே உழவின் சிறப்பைப் பாடியிருக்கலாமே, ஏன் 104 வது அதிகாரமாகப் பாடியுள்ளார் என்ற கேள்வி எழலாம். சற்று ஆராய்ந்து பார்த்தால் பாயிரத்திலேயே உழவைப் பற்றி அவர் பாடியிருக்கிறார் என்பது புலப்படும். 

“ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் 
வாரி வளங்குன்றிக் கால்”                                                           (வான் சிறப்பு : குறள் 14) 

மழையின் சிறப்பைப் பாட வந்தவர் ‘ஏர்’ என்றும் ‘உழவர்’ என்றும் நேரிடையாக உழவு பற்றிப் பேசியுள்ளார். குறைவில்லாது பொழிய வேண்டிய மழை இல்லாது போகுமானால், உழவர் தங்களுடைய ஏர்களைப் பூட்டி உழவை மேற்கொள்ள மாட்டார் என்பது இதன் நேரிடைப் பொருள். மழை இல்லையென்றால் உழவர்கள் படுத்துக் கொள்வார்கள்; உழவர்கள் படுத்து விட்டால் உலகமே படுத்து விடும் என்பது இதன் மறை பொருள். இங்கே குறிப்பால் உணர்த்திய வள்ளுவர் ‘உழவு’ அதிகாரத்தின் முதற் குறளில் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். 

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை”                                                                        (உழவு: குறள் 1031) 

உலகமே உழவை நம்பிச் சுழன்றுக் கொண்டிருப்பதால் உழவே தலையாயத் தொழில் என்பது இதன் மூலம் சொல்லப்படும் செய்தி. 

உழவர்கள் - மேற்குடி மக்கள்: 

வள்ளுவரைப் பொறுத்தவரை உழவர்களே சமுதாயத்தின் மேற்குடி மக்கள். ஏனென்றால், மற்றவர்கள் வேறு பல தொழில் செய்யக் காரணமானவர்கள் உழவர்களே. அரசன் முதல் ஆண்டி வரை உழவர்களை நம்பித்தான் வாழ வேண்டியுள்ளது. உழவர்கள் மட்டும்தான் உண்மையாக வாழ்பவர்கள். ஏனைய தொழில் புரியும் அனைவரும் அவர்களைத் தொழுது உணவுக்கு நம்பியிருப்பவர்கள். இக்கருத்தை, 

“உழுவார் உலகத்தார் காணியஃ தாற்றா 
தெழுவாரை எல்லாம் பொறுத்து”                                                    (உழவு: குறள் 1032) 

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல் பவர்”                                                            (உழவு: குறள் 1033) 
என்ற குறள்களில் வெளிப்படுத்துகிறார். 

உலக இன்பங்களில் ஈடுபாடிழந்து மெய்யாகவே துறவு பூண்டவர்கள் சிலரே. பல பேர் உண்ண உணவு கிடைக்காமல் போனதாலே துறவு பூண்டவர்கள். வறுமையிலிருந்து தப்பித்துக்கொள்ள அன்றைய மக்கள் கடைபிடித்த வழி இது. மேலும், எல்லாவற்றையும் துறந்துவிட்ட துறவிகள் கூட உழவர்கள் இல்லையென்றால் இல்லாமல் போவார்கள். எனவே, முற்றும் துறந்த முனிகளுக்கும் உணவளித்து வாழ வைப்பதால் அவர்களை விடவும் உழவர்களே சிறந்தவர் என்கிறார் வள்ளுவர். இதனை, 

“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் 
விட்டேமென் பார்க்கும் நிலை”                                                           (உழவு: குறள் 1036) 

ஆகவே, அரசர்கள், துறவிகள், அந்தணர் என எல்லோரையும் விட உழவர்களே அன்றைய சமுதாயத்தின் மேற்குடி மக்கள் என்பது வள்ளுவர்தம் கருத்து. 

அடுத்தப் பகுதியில் - வள்ளுவர் கூறும் விவசாய முறைகள், செயற்கை உரங்கள் பற்றி வள்ளுவர், வளமான நாட்டின் இலக்கணம்...


கருத்துரையிடுக

Ads Inside Post