திங்கள், 14 செப்டம்பர், 2015

வள்ளுவரின் உழவியல் பார்வை - 3

விவசாயப் பொருளாதாரம் பற்றி வள்ளுவர்: 

வளர்ந்த நாடுகளில் 10% மக்களும் வளரும் நாடுகளில் 60% மக்களும் தங்களின் வாழ்க்கையை வேளாண்மை மூலமே நடத்தி வருகின்றனர்.14 இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது விவசாயம் தான். 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 58% வேலைவாய்ப்புகள் இந்தத் துறையில் தான் உள்ளன. மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் (CSO) 2011 கணக்கெடுப்பின் படி நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மையும் அது சார்ந்த தொழிகளும் 14.2% இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.15 பல நாடுகளில் பெரிய பரப்பளவிலான நிலங்கள் உள்ளன. ஆனால், அவை வேளாண்மைக்கு ஏற்றதாக இருக்கவில்லை. இந்தியா இயற்கையால் வரமளிக்கப்பட்ட நாடு. இங்கே 62% நிலம் வேளாண்மை செய்வதற்கு ஏற்ற நிலமாக இருக்கிறது.11 
உழவுக்கு இன்றியமையாத தேவை நீர். முறையான பாசன வசதி இருந்தால்தான் நல்ல விளைச்சல் தர முடியும். நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாள்பவர்களுடையது. உழவர்களுக்குச் சிறந்த பாசன வசதி செய்து கொடுக்கும் மன்னர்களையே வரலாறு பேசும். கல்லணை கட்டிய கரிகாலனைத் தான் உலகம் இன்று வரை போற்றுகிறது.

“காடுகொன்று நாடாக்கி 
குளம் தொட்டு வளம்பெருக்கி” என்று பட்டினப்பாலையில் கரிகாலனை புகழ்ந்து கடியலூர் உருத்திரக்கண்ணனார் பாடியுள்ளார்

நமது முக்கிய உணவான அரிசி, இந்தியாவில் பத்து கோடியே எண்பத்தைந்து லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு ஐயாயிரம் லிட்டர் தண்ணீர் தேவை என்கிறார்கள் நிபுணர்கள்.12 நம் நாட்டில் நதிகள் அனைத்தும் வற்றிக் கிடக்கும் நிலையில் மழையும் பொய்த்துப் போவதால் பூமியில் உள்ள நீரை உறிஞ்சிதான் பெரும்பாலான இடத்தில் நெல் விளைவிக்கப்படுகிறது. எனவே, மழை நீர் சேமிப்பின் அவசியத்தை நாம் உணர வேண்டும். இதை உணர்ந்துதான் வான் சிறப்பில் மழையின் முக்கியத்துவத்தையும் அதைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் மக்கள் பட வேண்டிய துன்பங்களையும் தெளிவாக விளக்குகிறார்.

“விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
  துண்ணின் றுடற்றும் பசி”                                                     (வான் சிறப்பு: குறள் 13)

“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
  பசும்போல் தலைகண் பரிது”                                              (வான் சிறப்பு: குறள் 16)

என்ற குறள்களின் மூலம் விளக்குகிறார். எல்லாவற்றுக்கும் உச்சபட்சமாக வான் சிறப்பின் இறுதிக் குறளில் மழை இல்லையென்றால் உலகில் ஒழுக்கமே இருக்காது என்கிறார்.

“நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு”                                               (வான் சிறப்பு: குறள் 20)

இதனால் உழவுக்குத் தேவையான நீர் வசதி பற்றியும் நம் நாட்டின் புவியியல் சூழலுக்கு ஏற்ற முறைகளை வள்ளுவர் தம் குறளில் விவரிக்கிறார்.
நம் நாட்டின் 70% மழையை நம்பிய மானாவாரி நிலங்கள். எனவே இங்கே நவீன வேளாண் முறைகளால் பயனில்லை. இந்த 70% ஏறத்தாழ 30% இடங்களில் தரிசு நிலச் சாகுபடி நடக்கிறது. அங்கு வருடாந்திர சராசரி மழை அளவு 400 மில்லி மீட்டர்.13 இந்த மழையைச் சரியாகப் பயன்படுத்தினால் சிறந்த பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதியும் செய்யலாம். எனவே, நாம் மழை நீரை சேமிக்கும் சரியான திட்டங்களை வகுத்து அதைச் செயல்முறையிலும் கொண்டு வர வேண்டும்.

உழவர்களுக்கு வள்ளுவரின் வழிகாட்டல்: 
உழவர்கள் எந்த மாதிரியான பயிர்களை விளைவிக்க வேண்டும் என்று வள்ளுவர் பட்டியலிடவில்லை. ஆனால், உழவர்களிடம் இருக்க வேண்டிய பண்பு நலன்கள் பற்றியும் பொறுப்புணர்ச்சி பற்றியும் தன்னுடைய அறவுரையில் அறிவுறுத்தியிருக்கிறார்.

1. தன் பணி பற்றிய உயர்வெண்ணம்:
உலகின் அனைத்து மக்களுக்கும் உணவளிப்பது உழவர்கள்தான். எனவே அவர்கள் தங்கள் தொழில் மீது பற்றுக் கொள்ள வேண்டும். ‘வெள்ளைக் காலர் வேலை’ (White Collar Jobs) புரிபவர்களைப் பார்த்து தன்னுடைய தொழில் இழிவானது என்று ஓர் உழவன் எண்ணக் கூடாது. அவன் யாரிடமும் சென்று கையேந்துபவன் அல்ல. இல்லை என்று கையேந்தி வருபவர்களுக்கு மறைக்காமல் தந்து உதவுபவன்.
இக்கருத்தை,

“இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்”                                                               (உழவு: குறள் 1035)

என்ற குறளில் பதிவு செய்கிறார்.

2. பொறுப்புணர்ச்சி: 
தன்னை நம்பித்தான் மற்றவர்கள் வேறு தொழில்களை மேற்கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கு உணவளிக்க வேண்டிய உழவன் தன்னுடைய பொறுப்புணர்ச்சியை உணர்ந்து செய்ய வேண்டும். அவனிடம் சோம்பல் இருக்கக்கூடாது. தன் நிலத்தை நாள்தோறும் சென்று கவனித்து வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் பொறுப்பில்லாத கணவனிடம் ஊடும் மனைவியைப் போல நிலமும் விளைச்சலின்றி அவனோடு பிணக்குக் கொண்டு விடும்.

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்”                                                                    (உழவு: குறள் 1039)

என்னும் குறளில் அழகாக விளக்கியுள்ளார்.

3. நேர மேலாண்மை: 
வேளாண்மையில் மேலாண்மை பேசிய முதல் அறிஞர் வள்ளுவராகத்தான் இருக்க முடியும். நேர மேலாண்மை இன்று எல்லாத் துறைகளிலும் முக்கியமான ஒன்று என்றாலும் உழவுக்கு மிக மிக முக்கியம். ஏனென்றால், இந்தியா போன்ற நாடு பருவ மழையை நம்பித்தான் விவசாயம் செய்ய வேண்டும்.14 எனவே, சரியான பருவ காலத்தில் சோம்பியிருக்காமல் விதைக்க வேண்டும். ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி காலத்தின் அவசியத்தை உணர்த்துவது. ‘காலமறிதல்’ அதிகாரத்திலே நேர மேலாண்மையை விரிவாகப் பேசுகிறார். சரியான சூழல் வைக்கும்போது சரியான முறையில் செய்தால் உலகமே கைகூடும் என்கிறார்.

“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு”                                                         (காலமறிதல்: குறள் 482)

“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்”                                                          (காலமறிதல்: குறள் 484)
என்ற இரு குறள்களும் உழவர்கள் கடைபிடிக்க வேண்டிய பண்பு.

இன்றைய விவசாயப் பிரச்னைகளும் வள்ளுவரின் தீர்வுகளும்:
·
உழவுக்கு முக்கியத்துவம் அளிக்காத அரசு: 

இன்றைய சூழலில் இந்தியாவில் உழவர்களுக்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் சரிவரச் செய்து தரவில்லை. பெருகிவிட்ட தொழிற்சாலைகளாலும் வாகனங்களாலும் சுற்றுச் சூழல் மாசடைந்து புவி வெப்பமயமாதலை ஊக்குவிக்கிறது. இதனால் மழையும் பொழிவதில்லை. நெல்லை உரிய விலைக்கு யாரும் கொள்முதல் செய்வதில்லை. உணவை உற்பத்தி செய்த உழவனால் அதற்கு விலை நிர்ணயிக்க முடியவில்லை.

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்”                                     (ஆள்வினை உடைமை: குறள் 619)

என்று வள்ளுவர் கூறியபடி மெய் வருத்தி உழைத்துப் பார்க்கின்றனர். ஆனால், கூலி மட்டும் வந்தபாடில்லை. எனவே, விவசாயிகளால் தங்கள் தொழிலை செம்மையாகச் செய்ய முடியாத சூழலில் பல உழவர்கள் தங்கள் நிலங்களை மனைகளாக விற்று விட்டு வந்த பணத்தில் வேறு தொழில் பார்க்கின்றனர். அல்லது, வறுமை எய்தி தாளமுடியாமல் பல நூறு பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது அரசுக்கு எவ்வளவு பெரிய அவமானம்?

“ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு”                                                                      (நாடு: குறள் 740)

என்ற குறளில் ‘நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை’ என்று வள்ளுவர் கூறுவது நம் நாட்டுக்கு எவ்வளவு பொருத்தம்! எனவே நம் நாடு உழவுக்கு முக்கியத்துவம் அளித்தால் நம் நாட்டின் பொருளாதாரமும் சமூகப் பொருளாதாரமும் உயரும்.
· 
உணவைப் பகிர்ந்தளிப்பதில் சிக்கல்: 
கட்டுமான பணிகளுக்காகவும் தொழிற்சாலைகளுக்காகவும் ஒருபக்கம் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், சில புதிய ரகப் பயிர் விதைகளால் குறைந்த நிலத்திலயே நல்ல விளைச்சலைத் தர முடிகிறது. எனவே, இங்கே உணவு பற்றாக்குறை இல்லை. ஆனால், உற்பத்தி செய்த உணவுப் பொருள்களைச் சரியான முறையில் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படவில்லை. அதுதான் சிக்கல். யாரோ ஒரு சிலருக்கு மட்டும் இந்த உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் செல்கின்றன. மற்றவர்கள் வறுமையில் உழல்கின்றனர். எனவே, பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் உணவு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனை வள்ளுவர்,

“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைதொருபாற்
கோடாமை சான்றோர் கணி”                                            (நடுவு நிலைமை: குறள் 118)

என்ற குறள் மூலம் விளக்குகிறார்.
· 
வறுமை: 
ஒரு நாட்டில் அந்நாட்டு மக்களுக்குப் போதுமான அளவு உணவு உற்பத்தி செய்யப்படவில்லையென்றால் அந்நாட்டு மக்கள் வறுமை எய்துவர். வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிக மக்களைக் கொண்டுள்ள நாடு வளராத நாடு என்றே பொருள்படும். வறுமை ஒரு நாட்டின் மதிப்பை உலக அரங்கில் குறைத்துவிடுகிறது. வறுமையின் கொடுமையை ‘நல்குரவு’ என்னும் அதிகாரத்திலே சொல்லி வருந்துகிறார் வள்ளுவர். நல்குரவை உழவுக்கு அடுத்த அதிகாரமாக வைத்துள்ளது எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. உழவு செழிக்கவில்லையென்றால் மக்கள் வறுமை எய்துவர் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே உழவின் தொடர்ச்சியாய் நல்குரை அமைத்துள்ளார்.

“இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
  இன்மையே இன்னா தது”                                                             (நல்குரவு: குறள் 1041)

வறுமையை விடக் கொடியது எது என்று யோசித்த வள்ளுவர் வறுமையே அந்த வறுமையை விடக் கொடியது என்று முடிவு செய்துள்ளார்.
ஆனால், இன்று நிலைமையோ வேறாக உள்ளது. தேவையான உணவை உழவர்கள் உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். உற்பத்தி செய்த அவர்களோ வறுமையில் சிக்கிக் கொள்கின்றனர்.
இப்படி வறுமையில் வாடும் மக்களை ஒரு நாடு கொண்டிருக்குமானால் அந்நாட்டை ஆளும் அரசனும் பிச்சை எடுத்து அத்துன்பத்தை அனுபவிக்கட்டும் என்று வள்ளுவர் சாபமிடுகிறார்.

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”                                                           (இரவச்சம்: குறள் 1062)

என்ற குறள் மேற்கூறிய கருத்தை வலியுறுத்துவது. இக்குறளில்
‘உலகியற்றியான்’ என்பதற்குப் பரிமேலழகர் தொடங்கி அனைத்து உரையாசிரியர்களும் உலகைப் படைத்த கடவுள் என்றே பொருள் எழுதியுள்ளனர். ஆனால், உலகியற்றியான் என்பது நாட்டைச் சட்டம் இயற்றி ஆளும் அரசனைத் தான் குறிக்கிறது.15
‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாரதி கொதித்ததும் இந்தக் குறளின் நீட்சி தான்.
·
வறுமையைப் போக்கும் வழிமுறை: 
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். ஆனால், வள்ளுவர் இதை ஒப்பவில்லை. அன்னதானம் செய்வது சிறந்ததுதான். ஆனால், அது பசி என்னும் நோய்க்குத் தற்காலத் தீர்வு தான். நிரந்தரத் தீர்வைக் காண வழி வகைச் செய்ய வேண்டும் என்கிறார்.16
இதனை,

“ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்”                                                                (ஈகை: குறள் 225)

என்று ஈகையிலே சொல்கிறார். எனவே, அறிவியல் அறிஞர்கள் வறுமை வராத சூழல் உருவாகும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.

முடிவுரை: 

வள்ளுவர் உழவின் மீது கொண்டுள்ள பற்றையும் அதன் சிறப்பையும் இக்காலச் சிக்கல்களையும் தீர்வுகளையும் இக்கட்டுரை விரிவாக ஆராய்ந்தது. தொலை நோக்கு சிந்தனையாளர்களால் மட்டும்தான் உலகம் உய்யும் வழிமுறைகளைச் சொல்ல முடியும். அந்த வகையில் இன்று நம் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் கண்டுபிடித்ததாகச் சொல்லும் நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு, பகிர்ந்தளிக்கும் முறை என்று பலவற்றையும் வள்ளுவர் அன்றே சொல்லியுள்ளார். அவரின் தொலை நோக்குப் பார்வை நம் புருவங்களை உயர்த்த வைக்கிறது. இன்றைய வாழ்வியலோடு ஒப்பிட்டு வள்ளுவத்தை ஆராய்ந்தால் இன்னும் பல செய்திகள் கிடைக்கும்.

உதவிய நூல்கள்: 
1. “Illustrated Family Encyclopedia”, DK Publishers, Edition 2008, Page 326.
2. “Thiruvalluvar and Agricultural economy”, http://snalapat.blogspot.in/2010/05/agroeconomy-of- south-india.html
3. புலவர் நன்னன், “திருக்குறள் மூலமும் விளக்க உரையும்”, ஏகம் பதிப்பகம், பக்கம் 492.
4. சாலமன் பாப்பையா, “திருக்குறள் விளக்கவுரை”.
5. டாக்டர். கோ. நம்மாழ்வார், “எந்நாடுடைய இயற்கையே போற்றி”, விகடன் பிரசுரம், ப 23.
6. “Illustrated Family Encyclopedia”, DK Publishers, Edition 2008, Page 326.
7. APJ Abdul Kalam & A. Sivathanu Pillai, “Envisioning and Empowered Nation – Technology for Societal Transformation”, Tata McGraw-Hill Publishing Company Ltd., Page 58.
8. டாக்டர். கோ. நம்மாழ்வார், “உழவுக்கும் உண்டு வரலாறு”, விகடன் பிரசுரம்.
9. ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம் & ய.சு. ராஜன், “இந்தியா 2020 (மாணவர்களுக்கு)”, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 7
10. . ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம் & ய.சு. ராஜன், “இந்தியா 2020 (மாணவர்களுக்கு)”, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 10
11. “Manorama Year Book 2012”, Malayala Manorama Press, Page 674.
12. டாக்டர்.கோ. நம்மாழ்வார், “உழவுக்கும் உண்டு வரலாறு”, விகடன் பிரசுரம்.
13. ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம் & ய.சு. ராஜன், “இந்தியா 2020 (மாணவர்களுக்கு)”, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 46
14. “Thiruvalluvar and Agricultural economy”, http://snalapat.blogspot.in/2010/05/agroeconomy-of-south-india.html
15. புலவர் மு. அருச்சுனன், “திருக்குறள் புதிய பார்வை”, பாரதி பதிப்பகம், பக்கம் 114
16. டாக்டர்.கோ. நம்மாழ்வார், “உழவுக்கும் உண்டு வரலாறு”, விகடன் பிரசுரம், பக்கம் 82

உரை நூல்கள்: 
1) திருக்குறள் – கலைஞர் உரை
2) திருக்குறள் – பரிமேலழகர் உரை
3) திருக்குறள் – சாலமன் பாப்பையா உரை
4) திருக்குறள் – புலவர் நன்னன் உரை
5) திருக்குறள் வாழ்வியல் உரை – மதுரை இளங்குமரனார்
6) திருக்குறள் – மணக்குடவர் உரைவள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்: 

இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும்.

முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது.3  புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம்.4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீசும்போது காற்றிலிருக்கும் நைட்ரஜன் மண்னால் உறிஞ்சப்படுகிறது. இதனை நைட்ரஜனேற்றல் என்கிறார்கள். இந்த அறிவியல் கருத்தை மறைமுகமாக இக்குறளிலே வள்ளுவர் பதிவு செய்கிறார்.

ஆனால், இதே முறையை நன்செய் நிலத்தில் கையாள முடியாது. காரணம், அந்த நிலத்தின் தன்மை, நீர் வளம், மழையை உள்வாங்கும் தன்மை, வெப்பம், காற்றின் ஈரப்பதம் இவையெல்லாம் மாறுபடும். எனவே, இந்த நிலத்துக்கு வேறு மாதிரியான அணுகுமுறையைச் சொல்லித் தருகிறார். அதாவது, புன்செய் நிலத்தில் மீண்டும் மீண்டும் ஏர் உழுதலை விட நல்ல உரங்களை இட வேண்டும். எருவிட்டபின் களை எடுக்க வேண்டும். விடுபட்ட களையும் களைபட்ட களையும் அழுகும் அளவுக்கு நீர் பிடித்துக் கட்ட வேண்டும். இவற்றோடு சரியான அரண் அமைத்துப் பயிர்களைக் காத்தல் வேண்டும். அப்படிச் செய்தால் நன்செய் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது அவர்தம் முடிவு.

இந்த இரண்டு வகையான முறைகளோடு தெளிப்பு நீர் பாசனம் பற்றியும்
வள்ளுவர் கூறுகிறார். ஆனால், இதே அதிகாரத்தில் அல்ல. பொருட்பாலிலே 72வது அதிகாரமான ‘அவையறிதல்’ இன் எட்டாவது குறளில்.

“உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று”                                                  (அவையறிதல்: குறள் 718)

‘வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று’ என்பதற்கு ‘வளரக்கூடிய பயிருக்கு மேலிருந்து நீர் தெறித்தது போல’ என்பது பொருள். சொட்டு நீர், தெளிப்பு நீர் என்று நீர்ச் சிக்கனம் பற்றி அன்றே வள்ளுவர் கூறியுள்ளார். இப்படி நீரை மேலிருந்து சொரிந்தால், நிலத்தில் நீர் இறங்கினால், நிலம் முழுவதிலும் உள்ள செடி கொடிகள் செழிக்கும். அதனால் அங்கே பல்லுயிர் ஓம்பும்.5


செயற்கை உரங்கள் பற்றி வள்ளுவர்: 

பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கிய வேளாண் புரட்சி வெகு வேகமாக முன்னேறியது. இதே காலகட்டத்தில்தான் தொழிற் புரட்சியும் உண்டானது. 1786 இல் ஆண்ட்ரு மெய்க்கில் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கதிர் அறுக்கும் இயந்திரம் தான் இந்தப் புரட்சிக்கு மூல காரணம்.6 மனிதர்கள் செய்து கொண்டிருந்த பல வேலைகளை இயந்திரங்கள் வெகு சுலபமாகவும் அதி வேகமாகவும் செய்தன. இதனால் உணவுப் பொருள்களின் உற்பத்தி பெருகியது. தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டன. செயற்கை உரம், பூச்சிக் கொல்லிகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் என்று இத்தனை ஆண்டுக் காலம் இல்லாத மாற்றம் இத்துறையில் ஏற்பட்டது.

1960-70 களில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க அப்போதைய இந்திய அரசு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான பேரா. நார்மன் பர்லாக் என்பரைக் கொண்டு “பசுமைப் புரட்சி” யைச் செய்தது.7 அதிகமான உற்பத்தியைக் கொடுத்தாலும் இந்த இரசாயன உர விவசாய முறை மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. மண்ணின் தரத்தைக் கெடுத்ததாகவும், பல பாரம்பரிய பயிர் வகைகளை அழித்ததாகவும், பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பார்த்ததாகவும் நம்மாழ்வார், வந்தனா சிவா போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.8 வியாபாரத்தை முன்னிறுத்தி உடல் நலனை பின்னுக்குத் தள்ளிய அவலமும் அப்போதிலிருந்துதான் அரங்கேற ஆரம்பித்தது. எல்லாமே வர்த்தகமயமாகிவிட்டது. மக்களைக் கவர்வதற்காக அளவில் பெரிய தக்காளி, வெங்காயம், போன்றவையும் ஒரே அளவிலான கேரட் வகைகளும் சந்தையில் புகுந்தன. இவையெல்லாம் ஓர் ஆய்வக அறையில் விஞ்ஞானிகளின் அறிவால் விளைந்தவையே. கடிவாளம் இல்லாத தொழில்நுட்ப வளர்ச்சியில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துவிட்டது.

‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று சொன்ன வள்ளுவர்தான் ‘கல்வியினால் பெற்ற அறிவு புதிய கண்டுபிடிப்புகளையும் முறைகளையும் உருவாக்க உதவினாலும் இயற்கையின் இயல்பையும் உணர்ந்து அதை நடைமுறைபடுத்த வேண்டும்’ என்கிறார்.
இதனை,

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
  இயற்கை அறிந்து செயல்”                                                             (அமைச்சு: குறள் 637)

என்பதன் மூலம் விளக்குகிறார்.

இக்குறளுக்கு இப்படியும் பொருள் கொள்ளலாம். வள்ளுவர் செயற்கை உரங்களையோ செயற்கை முறைகளையோ மறுதலிக்கவில்லை. மாறாக, இயற்கைக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருக்குமானால் செயற்கை முறைகளை ஏற்றுக்கொள்ளலாம். 

வளமான நாடு: 

இன்றைய உலகில் நாம் ‘வளமான நாடு’ என்ற பதத்தை விட ‘வளர்ந்த நாடு’ என்னும் பதத்தையே அதிகம் பயன்படுத்துகிறோம். இன்றைய உலகம் வளம் என்பதைப் போர் ஆயுதங்களின் அளவை வைத்தும், பணத்தின் மதிப்பை வைத்தும் மட்டுமே கணக்கிடுகிறது. இயற்கை வளங்களும் மனித வளமும் அதிக அளவில் பெற்றுள்ள நம் இந்தியா போன்ற நாடுகள் வளரும் நாடுகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளன.

ஒரு நாடு சிறந்த நாடா என்பதை அளக்கும் காரணிகளுள் உழவையே மீண்டும் மீண்டும் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு”                                                                       (நாடு: குறள் 731)

இக்குறளில் மூன்று காரணிகளை வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். அவற்றில் முதலில் இருப்பது உழவு. அதாவது செழிப்புக் குறையாத விளைபொருள்கள். இரண்டாவது அறிஞர் பெருமக்கள். மூன்றாவது தான் செல்வம்.
அதே போல்,

“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”                                                                                  (நாடு: குறள் 734)

என்ற குறளில் மூன்று காரணிகள் இல்லாமல் இருப்பது சிறந்த நாடு என்கிறார். பசி, நோய், பகை என்பவைதான் அவை. இவற்றில் முதல் இரண்டு காரணிகளான பசியும் நோயும் உழவோடு தொடர்புடையது. போதுமான உணவு இருந்தால் பசியும் வராது, நோயும் வராது.

ஒரு நாட்டிற்கு அழகு தருவன என்று சொல்பவற்றில் நோயில்லாமை, நல்ல விளைச்சல் என்று மீண்டும் உழவையே சார்ந்து எழுதுகிறார். அக்குறள்,

“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து”                                                        (நாடு: குறள் 738)

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறும் அளவுகோல் இன்றும் பொருத்தமானதாகவே இருக்கிறது.

“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு”                                                                                  (நாடு: குறள் 739)
எந்த நாடு வேறோர் நாட்டை நாடாமல் சுயமாகத் தன்னுடைய வளங்களைக் கொண்டே பூர்த்திச் செய்து கொள்கிறதோ அதுவே சிறந்த நாடு என்பது இதன் பொருள்.

உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் இது முடியாத காரியம் போலத் தோன்றும். ஆனால், சற்று ஆழமாகச் சிந்தித்தால் இது சாத்தியமே.
இறக்குமதிகள் இல்லாமல் தங்கள் நிலங்களில் விளையும் பொருள்களை அனைவரும் உண்டு, தங்கள் நாட்டு கனிம வளங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் நாட்டு சூழலுக்கு ஏற்ப தொழில் அமைத்துக் கொண்டால் அந்த நாடு மற்ற நாடுகளை நாட வேண்டிய தேவையிருக்காது. இதையே ‘தன்னிறைவு’ என்கிறார்கள். இதே கருத்தைதான் வள்ளுவரும் மேற்கூறிய குறளில் சுட்டிக்காட்டுகிறார்.

வர்த்தக ரீதியிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தித்திறன் அதிகரிப்பிலும் ஒரு நாடு சிறந்த பொருளாதார நாடாக உயர வேண்டுமானால் வெளிநாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களையோ, இயந்திரங்கள், உபகரணங்கள், தொழில் முறைகள் ஆகியவற்றின் இறக்குமதியையோ சார்ந்திருக்கக் கூடாது.10 இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் இது சாத்தியமே.

அடுத்தப் பகுதியில் - விவசாயப் பொருளாதாரம் பற்றி வள்ளுவர், உழவர்களுக்கு வள்ளுவரின் வழிகாட்டல், இன்றைய விவசாயப் பிரச்சினைகளும் வள்ளுவரின் தீர்வுகளும், முடிவுரை, உதவிய நூல்கள்.

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை: 

உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும் விழுமியங்கள் என்று பல தளங்களில் வள்ளுவரின் உழவியல் பார்வையை எடுத்து இயம்புவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 

உழவின் சிறப்பு: 

எந்த ஒரு தொழிலைப் பற்றியும் குறிப்பிட்டு பேசாத வள்ளுவர் உழவுத் தொழில் பற்றி மட்டும் தனி அதிகாரம் அமைத்து ஆராய்வது நம்மையும் ஆராயத் தூண்டுகிறது. வேட்டைச் சமூகமாக இருந்த மனித சமூகம் நாகரிக சமூகம் ஆனதற்குக் காரணம் உழவுத் தொழிலே. சம வெளிகளில் தங்கிவிட்ட மனிதன் கண்டுபிடித்த முதல் தொழில் உழவுதான். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உழவுத் தொழில் தோன்றிவிட்டது.1 அதுதான் மனிதனை மற்ற மிருகங்களிலிருந்து மேம்பட்டவனாக மாற்றியது. “உழவே அறிவியல்களிலெல்லாம் உயர்ந்த அறிவியல்” என்று டாக்டர். ஜான்சன் கூறினார்.2 “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற பழமொழியும் உழவர்களை நோக்கித்தான் சொல்லப்பட்டது. பழமையை மறந்துவிடா பண்பு கொண்ட வள்ளுவர் இயல்பாகவே உழவு பற்றிப் பேச தனி அதிகாரம் படைத்துள்ளார். அப்படிப் பாடப் புகுந்த வள்ளுவர் பாயிரவியலிலேயே உழவின் சிறப்பைப் பாடியிருக்கலாமே, ஏன் 104 வது அதிகாரமாகப் பாடியுள்ளார் என்ற கேள்வி எழலாம். சற்று ஆராய்ந்து பார்த்தால் பாயிரத்திலேயே உழவைப் பற்றி அவர் பாடியிருக்கிறார் என்பது புலப்படும். 

“ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் 
வாரி வளங்குன்றிக் கால்”                                                           (வான் சிறப்பு : குறள் 14) 

மழையின் சிறப்பைப் பாட வந்தவர் ‘ஏர்’ என்றும் ‘உழவர்’ என்றும் நேரிடையாக உழவு பற்றிப் பேசியுள்ளார். குறைவில்லாது பொழிய வேண்டிய மழை இல்லாது போகுமானால், உழவர் தங்களுடைய ஏர்களைப் பூட்டி உழவை மேற்கொள்ள மாட்டார் என்பது இதன் நேரிடைப் பொருள். மழை இல்லையென்றால் உழவர்கள் படுத்துக் கொள்வார்கள்; உழவர்கள் படுத்து விட்டால் உலகமே படுத்து விடும் என்பது இதன் மறை பொருள். இங்கே குறிப்பால் உணர்த்திய வள்ளுவர் ‘உழவு’ அதிகாரத்தின் முதற் குறளில் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். 

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை”                                                                        (உழவு: குறள் 1031) 

உலகமே உழவை நம்பிச் சுழன்றுக் கொண்டிருப்பதால் உழவே தலையாயத் தொழில் என்பது இதன் மூலம் சொல்லப்படும் செய்தி. 

உழவர்கள் - மேற்குடி மக்கள்: 

வள்ளுவரைப் பொறுத்தவரை உழவர்களே சமுதாயத்தின் மேற்குடி மக்கள். ஏனென்றால், மற்றவர்கள் வேறு பல தொழில் செய்யக் காரணமானவர்கள் உழவர்களே. அரசன் முதல் ஆண்டி வரை உழவர்களை நம்பித்தான் வாழ வேண்டியுள்ளது. உழவர்கள் மட்டும்தான் உண்மையாக வாழ்பவர்கள். ஏனைய தொழில் புரியும் அனைவரும் அவர்களைத் தொழுது உணவுக்கு நம்பியிருப்பவர்கள். இக்கருத்தை, 

“உழுவார் உலகத்தார் காணியஃ தாற்றா 
தெழுவாரை எல்லாம் பொறுத்து”                                                    (உழவு: குறள் 1032) 

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல் பவர்”                                                            (உழவு: குறள் 1033) 
என்ற குறள்களில் வெளிப்படுத்துகிறார். 

உலக இன்பங்களில் ஈடுபாடிழந்து மெய்யாகவே துறவு பூண்டவர்கள் சிலரே. பல பேர் உண்ண உணவு கிடைக்காமல் போனதாலே துறவு பூண்டவர்கள். வறுமையிலிருந்து தப்பித்துக்கொள்ள அன்றைய மக்கள் கடைபிடித்த வழி இது. மேலும், எல்லாவற்றையும் துறந்துவிட்ட துறவிகள் கூட உழவர்கள் இல்லையென்றால் இல்லாமல் போவார்கள். எனவே, முற்றும் துறந்த முனிகளுக்கும் உணவளித்து வாழ வைப்பதால் அவர்களை விடவும் உழவர்களே சிறந்தவர் என்கிறார் வள்ளுவர். இதனை, 

“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் 
விட்டேமென் பார்க்கும் நிலை”                                                           (உழவு: குறள் 1036) 

ஆகவே, அரசர்கள், துறவிகள், அந்தணர் என எல்லோரையும் விட உழவர்களே அன்றைய சமுதாயத்தின் மேற்குடி மக்கள் என்பது வள்ளுவர்தம் கருத்து. 

அடுத்தப் பகுதியில் - வள்ளுவர் கூறும் விவசாய முறைகள், செயற்கை உரங்கள் பற்றி வள்ளுவர், வளமான நாட்டின் இலக்கணம்...


ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

வள்ளுவரின் உழவியல் பார்வை - முன்னுரை

இதுவரை எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களிலேயே அதிக முறை ஆய்வு செய்யப்பட்ட இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும். இரண்டு கிலோ ஆண்டுகளாக ஓர் இலக்கியம் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால் அது குறள் மட்டுமே. குறளின் சிறப்பை குறள் போல் இரண்டு அடியில் சுருக்கி விட முடியாது. நான் உலகத் திருக்குறள் மையத்திலே உறுப்பினராக இருக்கிறேன். மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்கிறேன். இரண்டு முறை குறள் பற்றிச் சொற்பொழிவும் ஆற்றியிருக்கிறேன். 

பல நாட்களாகவே எனக்கு ஒரு வருத்தம் உண்டு. இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அனைவருமே வயதானவர்கள் (என்னைத் தவிர). ஆம். மற்ற அனைவருமே நாற்பத்தைந்து வயதைத் தாண்டியவர்கள். பலர் அறுபது வயது காரர்கள். இளைஞர்கள் இல்லா குறளரங்கம் ஒரு வித சலிப்பையே எனக்கு ஏற்படுத்தியது. முடிந்த வரையில் என் நண்பர்களை "கட்டாயப்படுத்தி" அழைத்துச் சென்றிருக்கிறேன். ஆனாலும், அவர்கள் தொடர்ச்சியாக வருவதில்லை. காரணம், கூட்டங்களில் ஒரு சிறப்பு அழைப்பாளர் வந்து ஏதேனும் ஒரு தலைப்பில் நீண்ட உரையாற்றுவார். அதற்கு முன்னதாக, மைய உறுப்பினர்கள் பல நிமிடங்கள் குறள் சொல்லி, சில சமயம் தொடர்பே இல்லாத கதைகள் சொல்லி, சிலர் திருவாசகம், திருவருட்பா, பாரதி பாடல்களை ஒப்பித்துக் கூட்டத்தின் நோக்கத்தையே மாற்றுவர். சிறப்பு அழைப்பாளரின் பேச்சு கூடப் பழைய குறளை பழைய பார்வையிலேயே நோக்குவதாகவே இருக்கும். இதனால், குறள் இன்றைய தலைமுறைக்குச் சலிப்பைத் தருவதாக ஆகி விடுகிறது. 

அதுமட்டுமல்லாமல், குறளை நாம் ஒரு நீதி நூல் என்றே சொல்லி சொல்லிப் பழகி விட்டோம். அதனால், அதிலுள்ள அருமையான கவிதைகளை நம்மால் ரசிக்க முடியவில்லை. இந்த அணுகுமுறை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் ஆழமாக விமர்சனம் செய்துள்ளார். இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் நீதிக் குறள்களை அதிகமும் போதனை போன்று சொல்லி வேதனைப் படுத்துவதை விட ரசிக்கும்படியாக உள்ள கவிதைக் குறள்களைச் சொன்னால் குறள் மீது ஓர் ஈர்ப்பு வரும். பிற்பாடு, நீதி சொல்லலாம். அப்போது அது எடுபடும். இது குறளை மாற்று முறையில் அணுக வேண்டிய நேரம், அணுகி மாற்று முறையில் அதை அடுத்தத் தலைமுறையிடம் சேர்ப்பிக்க வேண்டிய நேரம். நிற்க, விட்டால், நான் குறள் பற்றி எழுதிக்கொண்டேயிருப்பேன். வள்ளலார் சொன்னது போல, 'இது விரிக்கின் பெருகும் என்பதால் இத்துடன் விடுக்கிறேன்'` 


சென்ற ஆண்டு, தமிழ்நாட்டு மாநில அளவில் நடத்தப்பட்ட திருக்குறள் ஆய்வுக் கட்டுரை போட்டிக்கு நானும் ஓர் ஆய்வுக் கட்டுரை அனுப்பினேன். கொடுமை என்னவென்றால், இன்னும் அந்தப் போட்டியின் முடிவு வெளிவரவில்லை. தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது கட்டுரையைத் தேர்வு செய்யும் நடுவர் ஒருவர் மருத்துவமனையில் இருப்பதால், நாளாகும் என்றனர். நானும் அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருந்தேன். இன்னும் வந்தபாடில்லை. எனவே, நான் அவர்களுக்கு "வள்ளுவரின் உழவியல் பார்வை" என்ற தலைப்பில் அனுப்பிய கட்டுரையை இங்கே  வெளியிடுகிறேன். நவீன விவசாயத் தொழில்நுட்பம் பற்றி வள்ளுவர் கொண்ட பார்வையை விளக்கும் கட்டுரை. அது 15 பக்கக் கட்டுரை. உங்கள் வசதிக்காக இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளியிடுகிறேன் . படித்துப் பாருங்கள். நன்றி!!! 

Ads Inside Post