செவ்வாய், 29 டிசம்பர், 2015

'யாமம்’ – நுகரப்படாத இரவின் வாசனை

இரவுக்கு வாசனை உண்டா? இரவுக்கென்று மணம் இருந்தால் அதுதான் ‘யாமம்’. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அற்புதமான நவீன நாவல் யாமம். 

இரவு என்பது நம்மில் பலரும் முழுதாகப் பார்த்து முடிக்காத, அனுபவிக்காத அற்புதமான பொழுது. நம் அகவுலகை பார்க்க உதவுவது இரவு. அந்த அகவுலகை நான்கு பேரின் வாழ்க்கையின் ஊடாக 360 பக்கங்களில் விவரிப்பதே இந்த நாவல். இது பல வகையில் அற்புதமான நாவலாக எனக்குத் தோன்றுகிறது. 

இந்த நாவலை முதலில் படிக்கத் தொடங்கிய போது ஏதோ மொழிபெயர்ப்பு நூலைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. கதை மாந்தர்களின் பெயரும் கதைக் களமும் கொஞ்சம் அந்நியமாகத் தோன்றின. ஆனால், கதை செல்ல செல்ல மிகவும் நெருக்கமாக உணர முடிந்தது. கதாபாத்திரங்கள் மனதைப் பிடித்துக்கொண்டு நகர மறுத்தனர். 

‘குறுமிளகின் கதை’, ‘முதல் சாசனம்’, ‘காற்றும் வெயிலும்’ என்ற மூன்று எழுதாக் கதைகள் சொல்லப்பட்ட பின்புதான் நேரடி கதை ஆரம்பமாகிறது., ‘மதராப்பட்டணம் என்னும் கடற்பாக்கம்’ என்ற அத்தியாயத்தில் சென்னை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உருவானது என்பதை மிக அழகாகச் சொல்கிறார். 

மிளகு வியாபாரம் செய்ய டச்சு நாட்டு வணிகர்களுக்கு அனுமதி கொடுப்பது, முகாலய மன்னர் ஷாஜகானின் பெண் ஷாகாநாராவின் தீப்புண்களை ஆற்றிய கதை, ஆங்கிலேய அதிகாரி ஃப்ரான்ஸிஸ் டே மசூலிப்பட்டணத்தை விட்டு மதராப்பட்டணத்தை உருவாக்குவது என்ற கதைகளில் கொஞ்சம் வரலாறும் கொஞ்சம் புனைவும் கலந்து சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. அதன் பின்பு, பட்டணத்துவாசிகளின் சரிதம் ஆரம்பமாகிறது. 

நான்கு தனி நபர்களின் வாழ்க்கையை நாவல் விவரிக்கிறது. இந்த நான்கு மனிதர்களுக்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. அவர்களை ஒரு சரடாக இணைப்பது ‘யாமம்’ என்னும் அத்தர் தான். 

1. யாமம் என்னும் அத்தர் தயாரிக்கும் கரீம். கரீமினுடைய முன்னோர்களால் அவருக்குக் கிடைக்கும் வரப்பிரசாதம். அது யாரையும் அனுமதிக்காமல் தனியாக ஒரு தோட்டத்தில் அவர் மட்டுமே வடிக்குமளவு மிகவும் ரகசியமானது. அவர் தயாரிக்கும் அத்தர் ஆளை மயக்கக்கூடியது. அதைப் பூசிக்கொண்டால் நம்மைச் சுற்றி இரவின் பிசுபிசுப்பு ஒட்டிக்கொள்ளும். அந்த அத்தரின் மூலம் பெரும் செல்வந்தராகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த கரீமுக்கு ஆண்மகன் பிறக்கவில்லை. ஆண்பிள்ளைகளிடம் மட்டுமே இந்த வியாபார சூத்திரத்தை கடத்துவார்கள். எனவே, அவர் மூன்று திருமணங்கள் செய்து கொள்கிறார். அப்படி இருந்தும் ஆண்பிள்ளை இல்லை. அவருடைய மனைவிகளான ரஹ்மானி, வகிதா, சுரையா மூவரும் தனித்துவமான குணம் கொண்டவர்கள். குதிரை பந்தயத்தின் மீது மோகம் கொண்ட கரீம் தன் செல்வம் முழுவதையும் அதில் இழந்து குடும்பம் நடத்த முடியாமல் வீட்டை விட்டுச் சொல்லிக்கொள்ளாமல் தலைமறைவாகிவிடுகிறார். அதன் பின்பு அவருடைய மூன்று மனைவிகளும் வறுமை எய்தி மீன் வியாபாரம் செய்யும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் குடும்பம் என்னாகிறது என்பது கிளைமாக்ஸ். 

2. பத்ரகிரி. லாம்டனின் நில அளவைக் குழுவில் பணி புரிபவன். சிறுவயதில் சரியில்லாத தந்தை, இளமையிலே உயிரை விடும் தாய். சித்தியின் அரவணைப்பில் தம்பி திருச்சிற்றம்பலத்துடன் வாழ்வு. திருச்சிற்றம்பலம் கணிதப்புலி. ஆராய்ச்சிக்காக லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் ஆய்வு செய்வதற்காகத் தன் மனைவி தையல்நாயகியை அண்ணன் பத்ரகிரியின் வீட்டில் விட்டுவிட்டுச் செல்கிறான். இங்கிலாந்து சென்ற சிற்றம்பலம் அங்குக் கணித ஆராய்ச்சியில் தன் முழுக் கவனத்தையும் செலுத்துகிறான். அங்கிருக்கும் மற்ற பேராசிரியர்களுக்கு இவன் உழைப்பைப் பார்த்து ஆச்சர்யம். எப்போதாவது தன் மனைவியின் நினைப்பும் அண்ணனின் நினைப்பும் வந்து போகும். ஆராய்ச்சியில் அதெல்லாம் மறந்தும் போகும். 

பத்ரகிரிக்கு விசாலா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறது. தையலுக்குக் குழந்தை இல்லை. அவள் பேசுவதும் சிரிப்பதும் பத்ரகிரிக்கு அவளுடன் இணைய வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. அதே சமயம், தம்பி மனைவியுடன் இப்படிச் செய்யலாமா என்று உறுத்துகிறது. ஆனாலும், அவன் இணைகிறான். குழந்தை உருவாகிறது. அவளைத் தன் வீட்டிலிருந்து வேறொரு வீட்டில் குடி வைக்கிறான். விசாலாவுக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது, சிற்றம்பலம் திரும்பி வந்தானா, பத்ரகிரி என்ன செய்தான் என்பது இவர்களின் கிளைமாக்ஸ். 

3. கிருஷ்ணப்பக் கரையாளர். மேல்மலையில் வசிப்பவர். நிறையச் சொத்துடையவர். அவருக்கும் சொந்தங்களுக்கும் சொத்துப் பிரச்னை. மிகவும் மனசு கஷ்டப்படுகிறார். ஆனால் மேல்மலையின் இயற்கை எழில் அவருக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அவருக்கு ஆங்கிலோ இந்தியப் பெண்ணுடன் தொடர்பு உண்டு. அவள் ஒரு வேசி. ஆனால், அவளுடைய நெருக்கம், அவளுடைய துணை அவருக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. அவளை நேரில் சந்தித்துத் தன்னோடு அழைத்து வந்து விடுகிறார் மேல்மலைக்கு. அவர்கள் இருவருக்கும் உள்ள உறவை தெளிவாகச் சொல்ல முடியாது. சில நேரம் இருவரும் மது அருந்திக்கொண்டே பல கதைகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். சில நேரம் எந்த உரையாடலும் நடக்காது. அமைதியாக இருப்பர். ஒரு கட்டத்தில் தன் அனைத்துச் சொத்தையும் சொந்தங்களிடம் எழுதிக் கொடுத்துவிட்டு மேல்மலையை ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் பெயரில் எழுதி வைத்து விட்டு தன் நாட்களை அவளோடு அங்கேயே கழிக்கிறார். 

4. சதாசிவப் பண்டாரம் என்னும் துறவி. பண்டாரம் என்ற பெயரை பார்த்து வயதான சாமி என்று எண்ணிவிடலாகாது. மத்திய வயது சாமி. இளமையிலேயே துறவு மனப்பான்மை கொண்டு வீட்டை விட்டு வந்துவிடுகிறது. நீலகண்டம் என்ற நாய் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் பண்டாரமும் செல்லும். நீலகண்டம்தான் பண்டாரத்தின் குரு. அது தன்னை வழிநடத்துவதாக நம்புகிறார். அது எங்கேயும் போகாமல் ஒரே இடத்தில் நின்றால் அவரும் அங்கேயே இருப்பார். அது நடக்கத்தொடங்கினால் அவரும் நடப்பார். ஒருபோதும் நீலகண்டத்துக்கு முன்னால் அவர் சென்றதே கிடையாது. ஒரு வீட்டில் நீலகண்டம் ரொம்ப நாட்கள் தங்கிவிடுகிறது. பண்டாரமும் அங்கே இருக்கிறார். அப்போது அந்த வீட்டில் உள்ள பெண்ணோடு உறவு கொள்கிறார். குழந்தையும் உருவாகிறது. ஒன்பது மாதம் அங்கயே இருக்கும் நாய் அவளுக்குப் பிரசவ வலி ஏற்படும் அன்று பார்த்துக் கிளம்பிவிடுகிறது. குடிசையில் பண்டாரத்தின் மனைவி பிரசவ வலியில். இந்த நீலகண்டம் நடக்கத்தொடங்கிவிடுகிறது. பெரும் இக்கட்டில் மாட்டிக்கொள்ளும் பண்டாரம் நாயின் பின்னால் போனாரா அல்லது மருத்துவரை அழைத்து வந்து மனைவிக்குப் பிரசவம் பார்க்கச் செய்தாரா என்பது இவர் கதையின் கிளைமாக்ஸ். இது கதையின் ரத்தினச் சுருக்கம் அல்ல. அணு அளவு சுருக்கம். 

இனி நாவலின் வெற்றிகளைப் பார்ப்போம். 

என்னை மிகவும் பாதித்த கதாபாத்திரம் சதாசிவப் பண்டாரம். நீலகண்டம் என்ற நாயின் பின்னாலேயே செல்லும் பண்டாரம் மிகப் பெரிய ஞானியாகவே எனக்குத் தோன்றினார். காரணம், அவ்வப்போது அவர் மனம் எந்தப் பக்கம் செல்வது என்று தடுமாறினாலும் இறுதியில் நீலகண்டம் பின்னால் செல்வது என்று தன் முடிவில் சிறிதும் மாற்றம் செய்து கொள்ளவில்லை. ‘இந்தியாவில் தெருப் பரதேசிகளிடம் ஞானம் கொட்டிக்கிடக்கிறது’ என்ற வைரமுத்துவின் வரி ஒன்று நினைவுக்கு வந்தது. 

இந்த நான்கு கதாபாத்திரங்களும் ஏதோவொரு தருணத்தில் சந்திப்பார்கள் என்ற நம் எதிர்பார்ப்பை உடைக்கிறார் எஸ்.ரா. அது இந்த நாவலின் மிகப் பெரிய வெற்றி என்பேன். நால்வரும் சந்தித்துக்கொண்டிருந்தால் அது சினிமாத்தனமாக இருந்திருக்கும். எனவே, இது முதல் வெற்றி. 

இரண்டு - இந்த நூல் மிக மிக நுண் சித்தரிப்புகளுடையது. இந்த நூலை படிக்கும்போது நம் வாசிப்பை இன்னும் சுவையுடையதாக ஆக்கவேண்டுமென்றால் சில வரலாறுகளை நாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நல்ல வேளையாக, நான் இதில் வரும் சில கதாபாத்திரங்களோடு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தேன். ஏ.எஸ்.ஐயர், லாம்டன், ஃப்ரான்ஸிஸ் டே போன்றவர்கள். இந்த நுண் சித்தரிப்புகள் முழுதும் ஒருமுறை படிப்பதால் நினைவிலிருக்காது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். கொஞ்சம் வரலாறு தெரிந்துகொண்டு இந்த நாவலை வாசிக்க நான் பரிந்துரைக்கும் புத்தகங்கள் இரண்டு: 
1. ‘சென்னை: தலைநகரின் கதை’ – பார்த்திபன் 
2. ‘கடைசிக் கோடு’ – ரமணன் 

இதன் மூன்றாவது வெற்றி என்ன தெரியுமா? இதன் எந்த அத்தியாயத்தை எடுத்துப் படித்தாலும் அது ஓர் அற்புதமான சிறுகதையாகத் தோன்றும். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை. இதில் ஆங்காங்கு கவித்துவமான வரிகள் வருகின்றன. 

நான்காவது வெற்றி - நான்-லீனியர் முறையில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல் உணர்வுகளை மிக ஆழமாகப் பாதிக்கிறது. நான்- லீனியர் முறையை மிகவும் சிறப்பாகக் கையாண்டுள்ளார் எஸ்.ரா. 

“யாவரின் சுக துக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப் போல முடிவற்று எல்லாப் பக்கங்களிலும் ஓடிக்கொண்டேயிருந்தது. அதன் சுகந்தம் எப்போதும் போல உலகமெங்கும் நிரம்பியிருந்தது” என்று முடிகிறது நாவல். எவ்வளவு பெரிய உண்மை!! யாமத்தைப் படித்தபின்பு என்னுடைய இரவுகளிலும் ஒரு வாசனை இருப்பதாகத் தோன்றியது.

ஒரு மகத்தான படைப்பை ஒரு முறை வாசித்தால் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியாது. கதை எப்படி நகர்கிறது என்பதுதான் முதல் முறை படிக்கும்போது நம் சிந்தையில் ஓடும். இரண்டு, மூன்று முறை படித்தால்தான் சில அபூர்வமான தருணங்களைத் தரிசிக்க முடியும். யாமத்தை நான் ஒரு முறை தான் படித்திருக்கிறேன். விலை கொடுத்து வாங்கி மீண்டும் படிக்க வேண்டும். 

பி.கு: இது நூல் பற்றிய விமர்சனம் அல்ல. ஒரு நல்ல நூலைப் பற்றிய அறிமுகம். 

திங்கள், 14 செப்டம்பர், 2015

வள்ளுவரின் உழவியல் பார்வை - 3

விவசாயப் பொருளாதாரம் பற்றி வள்ளுவர்: 

வளர்ந்த நாடுகளில் 10% மக்களும் வளரும் நாடுகளில் 60% மக்களும் தங்களின் வாழ்க்கையை வேளாண்மை மூலமே நடத்தி வருகின்றனர்.14 இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது விவசாயம் தான். 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 58% வேலைவாய்ப்புகள் இந்தத் துறையில் தான் உள்ளன. மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் (CSO) 2011 கணக்கெடுப்பின் படி நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மையும் அது சார்ந்த தொழிகளும் 14.2% இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.15 பல நாடுகளில் பெரிய பரப்பளவிலான நிலங்கள் உள்ளன. ஆனால், அவை வேளாண்மைக்கு ஏற்றதாக இருக்கவில்லை. இந்தியா இயற்கையால் வரமளிக்கப்பட்ட நாடு. இங்கே 62% நிலம் வேளாண்மை செய்வதற்கு ஏற்ற நிலமாக இருக்கிறது.11 
உழவுக்கு இன்றியமையாத தேவை நீர். முறையான பாசன வசதி இருந்தால்தான் நல்ல விளைச்சல் தர முடியும். நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாள்பவர்களுடையது. உழவர்களுக்குச் சிறந்த பாசன வசதி செய்து கொடுக்கும் மன்னர்களையே வரலாறு பேசும். கல்லணை கட்டிய கரிகாலனைத் தான் உலகம் இன்று வரை போற்றுகிறது.

“காடுகொன்று நாடாக்கி 
குளம் தொட்டு வளம்பெருக்கி” என்று பட்டினப்பாலையில் கரிகாலனை புகழ்ந்து கடியலூர் உருத்திரக்கண்ணனார் பாடியுள்ளார்

நமது முக்கிய உணவான அரிசி, இந்தியாவில் பத்து கோடியே எண்பத்தைந்து லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு ஐயாயிரம் லிட்டர் தண்ணீர் தேவை என்கிறார்கள் நிபுணர்கள்.12 நம் நாட்டில் நதிகள் அனைத்தும் வற்றிக் கிடக்கும் நிலையில் மழையும் பொய்த்துப் போவதால் பூமியில் உள்ள நீரை உறிஞ்சிதான் பெரும்பாலான இடத்தில் நெல் விளைவிக்கப்படுகிறது. எனவே, மழை நீர் சேமிப்பின் அவசியத்தை நாம் உணர வேண்டும். இதை உணர்ந்துதான் வான் சிறப்பில் மழையின் முக்கியத்துவத்தையும் அதைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் மக்கள் பட வேண்டிய துன்பங்களையும் தெளிவாக விளக்குகிறார்.

“விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
  துண்ணின் றுடற்றும் பசி”                                                     (வான் சிறப்பு: குறள் 13)

“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
  பசும்போல் தலைகண் பரிது”                                              (வான் சிறப்பு: குறள் 16)

என்ற குறள்களின் மூலம் விளக்குகிறார். எல்லாவற்றுக்கும் உச்சபட்சமாக வான் சிறப்பின் இறுதிக் குறளில் மழை இல்லையென்றால் உலகில் ஒழுக்கமே இருக்காது என்கிறார்.

“நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு”                                               (வான் சிறப்பு: குறள் 20)

இதனால் உழவுக்குத் தேவையான நீர் வசதி பற்றியும் நம் நாட்டின் புவியியல் சூழலுக்கு ஏற்ற முறைகளை வள்ளுவர் தம் குறளில் விவரிக்கிறார்.
நம் நாட்டின் 70% மழையை நம்பிய மானாவாரி நிலங்கள். எனவே இங்கே நவீன வேளாண் முறைகளால் பயனில்லை. இந்த 70% ஏறத்தாழ 30% இடங்களில் தரிசு நிலச் சாகுபடி நடக்கிறது. அங்கு வருடாந்திர சராசரி மழை அளவு 400 மில்லி மீட்டர்.13 இந்த மழையைச் சரியாகப் பயன்படுத்தினால் சிறந்த பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதியும் செய்யலாம். எனவே, நாம் மழை நீரை சேமிக்கும் சரியான திட்டங்களை வகுத்து அதைச் செயல்முறையிலும் கொண்டு வர வேண்டும்.

உழவர்களுக்கு வள்ளுவரின் வழிகாட்டல்: 
உழவர்கள் எந்த மாதிரியான பயிர்களை விளைவிக்க வேண்டும் என்று வள்ளுவர் பட்டியலிடவில்லை. ஆனால், உழவர்களிடம் இருக்க வேண்டிய பண்பு நலன்கள் பற்றியும் பொறுப்புணர்ச்சி பற்றியும் தன்னுடைய அறவுரையில் அறிவுறுத்தியிருக்கிறார்.

1. தன் பணி பற்றிய உயர்வெண்ணம்:
உலகின் அனைத்து மக்களுக்கும் உணவளிப்பது உழவர்கள்தான். எனவே அவர்கள் தங்கள் தொழில் மீது பற்றுக் கொள்ள வேண்டும். ‘வெள்ளைக் காலர் வேலை’ (White Collar Jobs) புரிபவர்களைப் பார்த்து தன்னுடைய தொழில் இழிவானது என்று ஓர் உழவன் எண்ணக் கூடாது. அவன் யாரிடமும் சென்று கையேந்துபவன் அல்ல. இல்லை என்று கையேந்தி வருபவர்களுக்கு மறைக்காமல் தந்து உதவுபவன்.
இக்கருத்தை,

“இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்”                                                               (உழவு: குறள் 1035)

என்ற குறளில் பதிவு செய்கிறார்.

2. பொறுப்புணர்ச்சி: 
தன்னை நம்பித்தான் மற்றவர்கள் வேறு தொழில்களை மேற்கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கு உணவளிக்க வேண்டிய உழவன் தன்னுடைய பொறுப்புணர்ச்சியை உணர்ந்து செய்ய வேண்டும். அவனிடம் சோம்பல் இருக்கக்கூடாது. தன் நிலத்தை நாள்தோறும் சென்று கவனித்து வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் பொறுப்பில்லாத கணவனிடம் ஊடும் மனைவியைப் போல நிலமும் விளைச்சலின்றி அவனோடு பிணக்குக் கொண்டு விடும்.

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்”                                                                    (உழவு: குறள் 1039)

என்னும் குறளில் அழகாக விளக்கியுள்ளார்.

3. நேர மேலாண்மை: 
வேளாண்மையில் மேலாண்மை பேசிய முதல் அறிஞர் வள்ளுவராகத்தான் இருக்க முடியும். நேர மேலாண்மை இன்று எல்லாத் துறைகளிலும் முக்கியமான ஒன்று என்றாலும் உழவுக்கு மிக மிக முக்கியம். ஏனென்றால், இந்தியா போன்ற நாடு பருவ மழையை நம்பித்தான் விவசாயம் செய்ய வேண்டும்.14 எனவே, சரியான பருவ காலத்தில் சோம்பியிருக்காமல் விதைக்க வேண்டும். ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி காலத்தின் அவசியத்தை உணர்த்துவது. ‘காலமறிதல்’ அதிகாரத்திலே நேர மேலாண்மையை விரிவாகப் பேசுகிறார். சரியான சூழல் வைக்கும்போது சரியான முறையில் செய்தால் உலகமே கைகூடும் என்கிறார்.

“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு”                                                         (காலமறிதல்: குறள் 482)

“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்”                                                          (காலமறிதல்: குறள் 484)
என்ற இரு குறள்களும் உழவர்கள் கடைபிடிக்க வேண்டிய பண்பு.

இன்றைய விவசாயப் பிரச்னைகளும் வள்ளுவரின் தீர்வுகளும்:
·
உழவுக்கு முக்கியத்துவம் அளிக்காத அரசு: 

இன்றைய சூழலில் இந்தியாவில் உழவர்களுக்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் சரிவரச் செய்து தரவில்லை. பெருகிவிட்ட தொழிற்சாலைகளாலும் வாகனங்களாலும் சுற்றுச் சூழல் மாசடைந்து புவி வெப்பமயமாதலை ஊக்குவிக்கிறது. இதனால் மழையும் பொழிவதில்லை. நெல்லை உரிய விலைக்கு யாரும் கொள்முதல் செய்வதில்லை. உணவை உற்பத்தி செய்த உழவனால் அதற்கு விலை நிர்ணயிக்க முடியவில்லை.

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்”                                     (ஆள்வினை உடைமை: குறள் 619)

என்று வள்ளுவர் கூறியபடி மெய் வருத்தி உழைத்துப் பார்க்கின்றனர். ஆனால், கூலி மட்டும் வந்தபாடில்லை. எனவே, விவசாயிகளால் தங்கள் தொழிலை செம்மையாகச் செய்ய முடியாத சூழலில் பல உழவர்கள் தங்கள் நிலங்களை மனைகளாக விற்று விட்டு வந்த பணத்தில் வேறு தொழில் பார்க்கின்றனர். அல்லது, வறுமை எய்தி தாளமுடியாமல் பல நூறு பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது அரசுக்கு எவ்வளவு பெரிய அவமானம்?

“ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு”                                                                      (நாடு: குறள் 740)

என்ற குறளில் ‘நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை’ என்று வள்ளுவர் கூறுவது நம் நாட்டுக்கு எவ்வளவு பொருத்தம்! எனவே நம் நாடு உழவுக்கு முக்கியத்துவம் அளித்தால் நம் நாட்டின் பொருளாதாரமும் சமூகப் பொருளாதாரமும் உயரும்.
· 
உணவைப் பகிர்ந்தளிப்பதில் சிக்கல்: 
கட்டுமான பணிகளுக்காகவும் தொழிற்சாலைகளுக்காகவும் ஒருபக்கம் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், சில புதிய ரகப் பயிர் விதைகளால் குறைந்த நிலத்திலயே நல்ல விளைச்சலைத் தர முடிகிறது. எனவே, இங்கே உணவு பற்றாக்குறை இல்லை. ஆனால், உற்பத்தி செய்த உணவுப் பொருள்களைச் சரியான முறையில் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படவில்லை. அதுதான் சிக்கல். யாரோ ஒரு சிலருக்கு மட்டும் இந்த உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் செல்கின்றன. மற்றவர்கள் வறுமையில் உழல்கின்றனர். எனவே, பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் உணவு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனை வள்ளுவர்,

“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைதொருபாற்
கோடாமை சான்றோர் கணி”                                            (நடுவு நிலைமை: குறள் 118)

என்ற குறள் மூலம் விளக்குகிறார்.
· 
வறுமை: 
ஒரு நாட்டில் அந்நாட்டு மக்களுக்குப் போதுமான அளவு உணவு உற்பத்தி செய்யப்படவில்லையென்றால் அந்நாட்டு மக்கள் வறுமை எய்துவர். வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிக மக்களைக் கொண்டுள்ள நாடு வளராத நாடு என்றே பொருள்படும். வறுமை ஒரு நாட்டின் மதிப்பை உலக அரங்கில் குறைத்துவிடுகிறது. வறுமையின் கொடுமையை ‘நல்குரவு’ என்னும் அதிகாரத்திலே சொல்லி வருந்துகிறார் வள்ளுவர். நல்குரவை உழவுக்கு அடுத்த அதிகாரமாக வைத்துள்ளது எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. உழவு செழிக்கவில்லையென்றால் மக்கள் வறுமை எய்துவர் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே உழவின் தொடர்ச்சியாய் நல்குரை அமைத்துள்ளார்.

“இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
  இன்மையே இன்னா தது”                                                             (நல்குரவு: குறள் 1041)

வறுமையை விடக் கொடியது எது என்று யோசித்த வள்ளுவர் வறுமையே அந்த வறுமையை விடக் கொடியது என்று முடிவு செய்துள்ளார்.
ஆனால், இன்று நிலைமையோ வேறாக உள்ளது. தேவையான உணவை உழவர்கள் உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். உற்பத்தி செய்த அவர்களோ வறுமையில் சிக்கிக் கொள்கின்றனர்.
இப்படி வறுமையில் வாடும் மக்களை ஒரு நாடு கொண்டிருக்குமானால் அந்நாட்டை ஆளும் அரசனும் பிச்சை எடுத்து அத்துன்பத்தை அனுபவிக்கட்டும் என்று வள்ளுவர் சாபமிடுகிறார்.

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”                                                           (இரவச்சம்: குறள் 1062)

என்ற குறள் மேற்கூறிய கருத்தை வலியுறுத்துவது. இக்குறளில்
‘உலகியற்றியான்’ என்பதற்குப் பரிமேலழகர் தொடங்கி அனைத்து உரையாசிரியர்களும் உலகைப் படைத்த கடவுள் என்றே பொருள் எழுதியுள்ளனர். ஆனால், உலகியற்றியான் என்பது நாட்டைச் சட்டம் இயற்றி ஆளும் அரசனைத் தான் குறிக்கிறது.15
‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாரதி கொதித்ததும் இந்தக் குறளின் நீட்சி தான்.
·
வறுமையைப் போக்கும் வழிமுறை: 
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். ஆனால், வள்ளுவர் இதை ஒப்பவில்லை. அன்னதானம் செய்வது சிறந்ததுதான். ஆனால், அது பசி என்னும் நோய்க்குத் தற்காலத் தீர்வு தான். நிரந்தரத் தீர்வைக் காண வழி வகைச் செய்ய வேண்டும் என்கிறார்.16
இதனை,

“ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்”                                                                (ஈகை: குறள் 225)

என்று ஈகையிலே சொல்கிறார். எனவே, அறிவியல் அறிஞர்கள் வறுமை வராத சூழல் உருவாகும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.

முடிவுரை: 

வள்ளுவர் உழவின் மீது கொண்டுள்ள பற்றையும் அதன் சிறப்பையும் இக்காலச் சிக்கல்களையும் தீர்வுகளையும் இக்கட்டுரை விரிவாக ஆராய்ந்தது. தொலை நோக்கு சிந்தனையாளர்களால் மட்டும்தான் உலகம் உய்யும் வழிமுறைகளைச் சொல்ல முடியும். அந்த வகையில் இன்று நம் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் கண்டுபிடித்ததாகச் சொல்லும் நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு, பகிர்ந்தளிக்கும் முறை என்று பலவற்றையும் வள்ளுவர் அன்றே சொல்லியுள்ளார். அவரின் தொலை நோக்குப் பார்வை நம் புருவங்களை உயர்த்த வைக்கிறது. இன்றைய வாழ்வியலோடு ஒப்பிட்டு வள்ளுவத்தை ஆராய்ந்தால் இன்னும் பல செய்திகள் கிடைக்கும்.

உதவிய நூல்கள்: 
1. “Illustrated Family Encyclopedia”, DK Publishers, Edition 2008, Page 326.
2. “Thiruvalluvar and Agricultural economy”, http://snalapat.blogspot.in/2010/05/agroeconomy-of- south-india.html
3. புலவர் நன்னன், “திருக்குறள் மூலமும் விளக்க உரையும்”, ஏகம் பதிப்பகம், பக்கம் 492.
4. சாலமன் பாப்பையா, “திருக்குறள் விளக்கவுரை”.
5. டாக்டர். கோ. நம்மாழ்வார், “எந்நாடுடைய இயற்கையே போற்றி”, விகடன் பிரசுரம், ப 23.
6. “Illustrated Family Encyclopedia”, DK Publishers, Edition 2008, Page 326.
7. APJ Abdul Kalam & A. Sivathanu Pillai, “Envisioning and Empowered Nation – Technology for Societal Transformation”, Tata McGraw-Hill Publishing Company Ltd., Page 58.
8. டாக்டர். கோ. நம்மாழ்வார், “உழவுக்கும் உண்டு வரலாறு”, விகடன் பிரசுரம்.
9. ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம் & ய.சு. ராஜன், “இந்தியா 2020 (மாணவர்களுக்கு)”, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 7
10. . ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம் & ய.சு. ராஜன், “இந்தியா 2020 (மாணவர்களுக்கு)”, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 10
11. “Manorama Year Book 2012”, Malayala Manorama Press, Page 674.
12. டாக்டர்.கோ. நம்மாழ்வார், “உழவுக்கும் உண்டு வரலாறு”, விகடன் பிரசுரம்.
13. ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம் & ய.சு. ராஜன், “இந்தியா 2020 (மாணவர்களுக்கு)”, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 46
14. “Thiruvalluvar and Agricultural economy”, http://snalapat.blogspot.in/2010/05/agroeconomy-of-south-india.html
15. புலவர் மு. அருச்சுனன், “திருக்குறள் புதிய பார்வை”, பாரதி பதிப்பகம், பக்கம் 114
16. டாக்டர்.கோ. நம்மாழ்வார், “உழவுக்கும் உண்டு வரலாறு”, விகடன் பிரசுரம், பக்கம் 82

உரை நூல்கள்: 
1) திருக்குறள் – கலைஞர் உரை
2) திருக்குறள் – பரிமேலழகர் உரை
3) திருக்குறள் – சாலமன் பாப்பையா உரை
4) திருக்குறள் – புலவர் நன்னன் உரை
5) திருக்குறள் வாழ்வியல் உரை – மதுரை இளங்குமரனார்
6) திருக்குறள் – மணக்குடவர் உரைவள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்: 

இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும்.

முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது.3  புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம்.4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீசும்போது காற்றிலிருக்கும் நைட்ரஜன் மண்னால் உறிஞ்சப்படுகிறது. இதனை நைட்ரஜனேற்றல் என்கிறார்கள். இந்த அறிவியல் கருத்தை மறைமுகமாக இக்குறளிலே வள்ளுவர் பதிவு செய்கிறார்.

ஆனால், இதே முறையை நன்செய் நிலத்தில் கையாள முடியாது. காரணம், அந்த நிலத்தின் தன்மை, நீர் வளம், மழையை உள்வாங்கும் தன்மை, வெப்பம், காற்றின் ஈரப்பதம் இவையெல்லாம் மாறுபடும். எனவே, இந்த நிலத்துக்கு வேறு மாதிரியான அணுகுமுறையைச் சொல்லித் தருகிறார். அதாவது, புன்செய் நிலத்தில் மீண்டும் மீண்டும் ஏர் உழுதலை விட நல்ல உரங்களை இட வேண்டும். எருவிட்டபின் களை எடுக்க வேண்டும். விடுபட்ட களையும் களைபட்ட களையும் அழுகும் அளவுக்கு நீர் பிடித்துக் கட்ட வேண்டும். இவற்றோடு சரியான அரண் அமைத்துப் பயிர்களைக் காத்தல் வேண்டும். அப்படிச் செய்தால் நன்செய் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது அவர்தம் முடிவு.

இந்த இரண்டு வகையான முறைகளோடு தெளிப்பு நீர் பாசனம் பற்றியும்
வள்ளுவர் கூறுகிறார். ஆனால், இதே அதிகாரத்தில் அல்ல. பொருட்பாலிலே 72வது அதிகாரமான ‘அவையறிதல்’ இன் எட்டாவது குறளில்.

“உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று”                                                  (அவையறிதல்: குறள் 718)

‘வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று’ என்பதற்கு ‘வளரக்கூடிய பயிருக்கு மேலிருந்து நீர் தெறித்தது போல’ என்பது பொருள். சொட்டு நீர், தெளிப்பு நீர் என்று நீர்ச் சிக்கனம் பற்றி அன்றே வள்ளுவர் கூறியுள்ளார். இப்படி நீரை மேலிருந்து சொரிந்தால், நிலத்தில் நீர் இறங்கினால், நிலம் முழுவதிலும் உள்ள செடி கொடிகள் செழிக்கும். அதனால் அங்கே பல்லுயிர் ஓம்பும்.5


செயற்கை உரங்கள் பற்றி வள்ளுவர்: 

பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கிய வேளாண் புரட்சி வெகு வேகமாக முன்னேறியது. இதே காலகட்டத்தில்தான் தொழிற் புரட்சியும் உண்டானது. 1786 இல் ஆண்ட்ரு மெய்க்கில் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கதிர் அறுக்கும் இயந்திரம் தான் இந்தப் புரட்சிக்கு மூல காரணம்.6 மனிதர்கள் செய்து கொண்டிருந்த பல வேலைகளை இயந்திரங்கள் வெகு சுலபமாகவும் அதி வேகமாகவும் செய்தன. இதனால் உணவுப் பொருள்களின் உற்பத்தி பெருகியது. தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டன. செயற்கை உரம், பூச்சிக் கொல்லிகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் என்று இத்தனை ஆண்டுக் காலம் இல்லாத மாற்றம் இத்துறையில் ஏற்பட்டது.

1960-70 களில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க அப்போதைய இந்திய அரசு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான பேரா. நார்மன் பர்லாக் என்பரைக் கொண்டு “பசுமைப் புரட்சி” யைச் செய்தது.7 அதிகமான உற்பத்தியைக் கொடுத்தாலும் இந்த இரசாயன உர விவசாய முறை மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. மண்ணின் தரத்தைக் கெடுத்ததாகவும், பல பாரம்பரிய பயிர் வகைகளை அழித்ததாகவும், பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பார்த்ததாகவும் நம்மாழ்வார், வந்தனா சிவா போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.8 வியாபாரத்தை முன்னிறுத்தி உடல் நலனை பின்னுக்குத் தள்ளிய அவலமும் அப்போதிலிருந்துதான் அரங்கேற ஆரம்பித்தது. எல்லாமே வர்த்தகமயமாகிவிட்டது. மக்களைக் கவர்வதற்காக அளவில் பெரிய தக்காளி, வெங்காயம், போன்றவையும் ஒரே அளவிலான கேரட் வகைகளும் சந்தையில் புகுந்தன. இவையெல்லாம் ஓர் ஆய்வக அறையில் விஞ்ஞானிகளின் அறிவால் விளைந்தவையே. கடிவாளம் இல்லாத தொழில்நுட்ப வளர்ச்சியில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துவிட்டது.

‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று சொன்ன வள்ளுவர்தான் ‘கல்வியினால் பெற்ற அறிவு புதிய கண்டுபிடிப்புகளையும் முறைகளையும் உருவாக்க உதவினாலும் இயற்கையின் இயல்பையும் உணர்ந்து அதை நடைமுறைபடுத்த வேண்டும்’ என்கிறார்.
இதனை,

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
  இயற்கை அறிந்து செயல்”                                                             (அமைச்சு: குறள் 637)

என்பதன் மூலம் விளக்குகிறார்.

இக்குறளுக்கு இப்படியும் பொருள் கொள்ளலாம். வள்ளுவர் செயற்கை உரங்களையோ செயற்கை முறைகளையோ மறுதலிக்கவில்லை. மாறாக, இயற்கைக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருக்குமானால் செயற்கை முறைகளை ஏற்றுக்கொள்ளலாம். 

வளமான நாடு: 

இன்றைய உலகில் நாம் ‘வளமான நாடு’ என்ற பதத்தை விட ‘வளர்ந்த நாடு’ என்னும் பதத்தையே அதிகம் பயன்படுத்துகிறோம். இன்றைய உலகம் வளம் என்பதைப் போர் ஆயுதங்களின் அளவை வைத்தும், பணத்தின் மதிப்பை வைத்தும் மட்டுமே கணக்கிடுகிறது. இயற்கை வளங்களும் மனித வளமும் அதிக அளவில் பெற்றுள்ள நம் இந்தியா போன்ற நாடுகள் வளரும் நாடுகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளன.

ஒரு நாடு சிறந்த நாடா என்பதை அளக்கும் காரணிகளுள் உழவையே மீண்டும் மீண்டும் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு”                                                                       (நாடு: குறள் 731)

இக்குறளில் மூன்று காரணிகளை வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். அவற்றில் முதலில் இருப்பது உழவு. அதாவது செழிப்புக் குறையாத விளைபொருள்கள். இரண்டாவது அறிஞர் பெருமக்கள். மூன்றாவது தான் செல்வம்.
அதே போல்,

“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”                                                                                  (நாடு: குறள் 734)

என்ற குறளில் மூன்று காரணிகள் இல்லாமல் இருப்பது சிறந்த நாடு என்கிறார். பசி, நோய், பகை என்பவைதான் அவை. இவற்றில் முதல் இரண்டு காரணிகளான பசியும் நோயும் உழவோடு தொடர்புடையது. போதுமான உணவு இருந்தால் பசியும் வராது, நோயும் வராது.

ஒரு நாட்டிற்கு அழகு தருவன என்று சொல்பவற்றில் நோயில்லாமை, நல்ல விளைச்சல் என்று மீண்டும் உழவையே சார்ந்து எழுதுகிறார். அக்குறள்,

“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து”                                                        (நாடு: குறள் 738)

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறும் அளவுகோல் இன்றும் பொருத்தமானதாகவே இருக்கிறது.

“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு”                                                                                  (நாடு: குறள் 739)
எந்த நாடு வேறோர் நாட்டை நாடாமல் சுயமாகத் தன்னுடைய வளங்களைக் கொண்டே பூர்த்திச் செய்து கொள்கிறதோ அதுவே சிறந்த நாடு என்பது இதன் பொருள்.

உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் இது முடியாத காரியம் போலத் தோன்றும். ஆனால், சற்று ஆழமாகச் சிந்தித்தால் இது சாத்தியமே.
இறக்குமதிகள் இல்லாமல் தங்கள் நிலங்களில் விளையும் பொருள்களை அனைவரும் உண்டு, தங்கள் நாட்டு கனிம வளங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் நாட்டு சூழலுக்கு ஏற்ப தொழில் அமைத்துக் கொண்டால் அந்த நாடு மற்ற நாடுகளை நாட வேண்டிய தேவையிருக்காது. இதையே ‘தன்னிறைவு’ என்கிறார்கள். இதே கருத்தைதான் வள்ளுவரும் மேற்கூறிய குறளில் சுட்டிக்காட்டுகிறார்.

வர்த்தக ரீதியிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தித்திறன் அதிகரிப்பிலும் ஒரு நாடு சிறந்த பொருளாதார நாடாக உயர வேண்டுமானால் வெளிநாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களையோ, இயந்திரங்கள், உபகரணங்கள், தொழில் முறைகள் ஆகியவற்றின் இறக்குமதியையோ சார்ந்திருக்கக் கூடாது.10 இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் இது சாத்தியமே.

அடுத்தப் பகுதியில் - விவசாயப் பொருளாதாரம் பற்றி வள்ளுவர், உழவர்களுக்கு வள்ளுவரின் வழிகாட்டல், இன்றைய விவசாயப் பிரச்சினைகளும் வள்ளுவரின் தீர்வுகளும், முடிவுரை, உதவிய நூல்கள்.

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை: 

உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும் விழுமியங்கள் என்று பல தளங்களில் வள்ளுவரின் உழவியல் பார்வையை எடுத்து இயம்புவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 

உழவின் சிறப்பு: 

எந்த ஒரு தொழிலைப் பற்றியும் குறிப்பிட்டு பேசாத வள்ளுவர் உழவுத் தொழில் பற்றி மட்டும் தனி அதிகாரம் அமைத்து ஆராய்வது நம்மையும் ஆராயத் தூண்டுகிறது. வேட்டைச் சமூகமாக இருந்த மனித சமூகம் நாகரிக சமூகம் ஆனதற்குக் காரணம் உழவுத் தொழிலே. சம வெளிகளில் தங்கிவிட்ட மனிதன் கண்டுபிடித்த முதல் தொழில் உழவுதான். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உழவுத் தொழில் தோன்றிவிட்டது.1 அதுதான் மனிதனை மற்ற மிருகங்களிலிருந்து மேம்பட்டவனாக மாற்றியது. “உழவே அறிவியல்களிலெல்லாம் உயர்ந்த அறிவியல்” என்று டாக்டர். ஜான்சன் கூறினார்.2 “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற பழமொழியும் உழவர்களை நோக்கித்தான் சொல்லப்பட்டது. பழமையை மறந்துவிடா பண்பு கொண்ட வள்ளுவர் இயல்பாகவே உழவு பற்றிப் பேச தனி அதிகாரம் படைத்துள்ளார். அப்படிப் பாடப் புகுந்த வள்ளுவர் பாயிரவியலிலேயே உழவின் சிறப்பைப் பாடியிருக்கலாமே, ஏன் 104 வது அதிகாரமாகப் பாடியுள்ளார் என்ற கேள்வி எழலாம். சற்று ஆராய்ந்து பார்த்தால் பாயிரத்திலேயே உழவைப் பற்றி அவர் பாடியிருக்கிறார் என்பது புலப்படும். 

“ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் 
வாரி வளங்குன்றிக் கால்”                                                           (வான் சிறப்பு : குறள் 14) 

மழையின் சிறப்பைப் பாட வந்தவர் ‘ஏர்’ என்றும் ‘உழவர்’ என்றும் நேரிடையாக உழவு பற்றிப் பேசியுள்ளார். குறைவில்லாது பொழிய வேண்டிய மழை இல்லாது போகுமானால், உழவர் தங்களுடைய ஏர்களைப் பூட்டி உழவை மேற்கொள்ள மாட்டார் என்பது இதன் நேரிடைப் பொருள். மழை இல்லையென்றால் உழவர்கள் படுத்துக் கொள்வார்கள்; உழவர்கள் படுத்து விட்டால் உலகமே படுத்து விடும் என்பது இதன் மறை பொருள். இங்கே குறிப்பால் உணர்த்திய வள்ளுவர் ‘உழவு’ அதிகாரத்தின் முதற் குறளில் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். 

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை”                                                                        (உழவு: குறள் 1031) 

உலகமே உழவை நம்பிச் சுழன்றுக் கொண்டிருப்பதால் உழவே தலையாயத் தொழில் என்பது இதன் மூலம் சொல்லப்படும் செய்தி. 

உழவர்கள் - மேற்குடி மக்கள்: 

வள்ளுவரைப் பொறுத்தவரை உழவர்களே சமுதாயத்தின் மேற்குடி மக்கள். ஏனென்றால், மற்றவர்கள் வேறு பல தொழில் செய்யக் காரணமானவர்கள் உழவர்களே. அரசன் முதல் ஆண்டி வரை உழவர்களை நம்பித்தான் வாழ வேண்டியுள்ளது. உழவர்கள் மட்டும்தான் உண்மையாக வாழ்பவர்கள். ஏனைய தொழில் புரியும் அனைவரும் அவர்களைத் தொழுது உணவுக்கு நம்பியிருப்பவர்கள். இக்கருத்தை, 

“உழுவார் உலகத்தார் காணியஃ தாற்றா 
தெழுவாரை எல்லாம் பொறுத்து”                                                    (உழவு: குறள் 1032) 

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல் பவர்”                                                            (உழவு: குறள் 1033) 
என்ற குறள்களில் வெளிப்படுத்துகிறார். 

உலக இன்பங்களில் ஈடுபாடிழந்து மெய்யாகவே துறவு பூண்டவர்கள் சிலரே. பல பேர் உண்ண உணவு கிடைக்காமல் போனதாலே துறவு பூண்டவர்கள். வறுமையிலிருந்து தப்பித்துக்கொள்ள அன்றைய மக்கள் கடைபிடித்த வழி இது. மேலும், எல்லாவற்றையும் துறந்துவிட்ட துறவிகள் கூட உழவர்கள் இல்லையென்றால் இல்லாமல் போவார்கள். எனவே, முற்றும் துறந்த முனிகளுக்கும் உணவளித்து வாழ வைப்பதால் அவர்களை விடவும் உழவர்களே சிறந்தவர் என்கிறார் வள்ளுவர். இதனை, 

“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் 
விட்டேமென் பார்க்கும் நிலை”                                                           (உழவு: குறள் 1036) 

ஆகவே, அரசர்கள், துறவிகள், அந்தணர் என எல்லோரையும் விட உழவர்களே அன்றைய சமுதாயத்தின் மேற்குடி மக்கள் என்பது வள்ளுவர்தம் கருத்து. 

அடுத்தப் பகுதியில் - வள்ளுவர் கூறும் விவசாய முறைகள், செயற்கை உரங்கள் பற்றி வள்ளுவர், வளமான நாட்டின் இலக்கணம்...


ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

வள்ளுவரின் உழவியல் பார்வை - முன்னுரை

இதுவரை எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களிலேயே அதிக முறை ஆய்வு செய்யப்பட்ட இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும். இரண்டு கிலோ ஆண்டுகளாக ஓர் இலக்கியம் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால் அது குறள் மட்டுமே. குறளின் சிறப்பை குறள் போல் இரண்டு அடியில் சுருக்கி விட முடியாது. நான் உலகத் திருக்குறள் மையத்திலே உறுப்பினராக இருக்கிறேன். மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்கிறேன். இரண்டு முறை குறள் பற்றிச் சொற்பொழிவும் ஆற்றியிருக்கிறேன். 

பல நாட்களாகவே எனக்கு ஒரு வருத்தம் உண்டு. இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அனைவருமே வயதானவர்கள் (என்னைத் தவிர). ஆம். மற்ற அனைவருமே நாற்பத்தைந்து வயதைத் தாண்டியவர்கள். பலர் அறுபது வயது காரர்கள். இளைஞர்கள் இல்லா குறளரங்கம் ஒரு வித சலிப்பையே எனக்கு ஏற்படுத்தியது. முடிந்த வரையில் என் நண்பர்களை "கட்டாயப்படுத்தி" அழைத்துச் சென்றிருக்கிறேன். ஆனாலும், அவர்கள் தொடர்ச்சியாக வருவதில்லை. காரணம், கூட்டங்களில் ஒரு சிறப்பு அழைப்பாளர் வந்து ஏதேனும் ஒரு தலைப்பில் நீண்ட உரையாற்றுவார். அதற்கு முன்னதாக, மைய உறுப்பினர்கள் பல நிமிடங்கள் குறள் சொல்லி, சில சமயம் தொடர்பே இல்லாத கதைகள் சொல்லி, சிலர் திருவாசகம், திருவருட்பா, பாரதி பாடல்களை ஒப்பித்துக் கூட்டத்தின் நோக்கத்தையே மாற்றுவர். சிறப்பு அழைப்பாளரின் பேச்சு கூடப் பழைய குறளை பழைய பார்வையிலேயே நோக்குவதாகவே இருக்கும். இதனால், குறள் இன்றைய தலைமுறைக்குச் சலிப்பைத் தருவதாக ஆகி விடுகிறது. 

அதுமட்டுமல்லாமல், குறளை நாம் ஒரு நீதி நூல் என்றே சொல்லி சொல்லிப் பழகி விட்டோம். அதனால், அதிலுள்ள அருமையான கவிதைகளை நம்மால் ரசிக்க முடியவில்லை. இந்த அணுகுமுறை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் ஆழமாக விமர்சனம் செய்துள்ளார். இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் நீதிக் குறள்களை அதிகமும் போதனை போன்று சொல்லி வேதனைப் படுத்துவதை விட ரசிக்கும்படியாக உள்ள கவிதைக் குறள்களைச் சொன்னால் குறள் மீது ஓர் ஈர்ப்பு வரும். பிற்பாடு, நீதி சொல்லலாம். அப்போது அது எடுபடும். இது குறளை மாற்று முறையில் அணுக வேண்டிய நேரம், அணுகி மாற்று முறையில் அதை அடுத்தத் தலைமுறையிடம் சேர்ப்பிக்க வேண்டிய நேரம். நிற்க, விட்டால், நான் குறள் பற்றி எழுதிக்கொண்டேயிருப்பேன். வள்ளலார் சொன்னது போல, 'இது விரிக்கின் பெருகும் என்பதால் இத்துடன் விடுக்கிறேன்'` 


சென்ற ஆண்டு, தமிழ்நாட்டு மாநில அளவில் நடத்தப்பட்ட திருக்குறள் ஆய்வுக் கட்டுரை போட்டிக்கு நானும் ஓர் ஆய்வுக் கட்டுரை அனுப்பினேன். கொடுமை என்னவென்றால், இன்னும் அந்தப் போட்டியின் முடிவு வெளிவரவில்லை. தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது கட்டுரையைத் தேர்வு செய்யும் நடுவர் ஒருவர் மருத்துவமனையில் இருப்பதால், நாளாகும் என்றனர். நானும் அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருந்தேன். இன்னும் வந்தபாடில்லை. எனவே, நான் அவர்களுக்கு "வள்ளுவரின் உழவியல் பார்வை" என்ற தலைப்பில் அனுப்பிய கட்டுரையை இங்கே  வெளியிடுகிறேன். நவீன விவசாயத் தொழில்நுட்பம் பற்றி வள்ளுவர் கொண்ட பார்வையை விளக்கும் கட்டுரை. அது 15 பக்கக் கட்டுரை. உங்கள் வசதிக்காக இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளியிடுகிறேன் . படித்துப் பாருங்கள். நன்றி!!! 

வெள்ளி, 26 ஜூன், 2015

உலக நண்பர்களோடு நான்கு நாள்

சென்னை புத்தகத் திருவிழாவுக்கு இதுவரை நான் சென்றதில்லை. ஆனால், போகவேண்டும் என்ற ஆசை மட்டும் காதல் மிகுதியால் கசிந்துருகி பசலை நோய் வந்த சங்க காலத் தலைவி போல் எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. நம் ஊரில் இப்படி ஒன்று எப்போது நடக்கும் என்று நான் எதிர்பார்த்த ஒன்று இப்போது நடந்திருக்கிறது. ஆம். தஞ்சையில் முதன்முறையாக பெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஜூன் 12 முதல் 21 வரை. 

முதலில், இதை முன்னெடுத்து நடத்திய தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர். சுப்பையன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன். திரு. சுப்பையன் பொறுப்பேற்ற பிறகு மிக முக்கியமான இரண்டு பரிசோதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவை வெற்றியும் கண்டுள்ளன. ஒன்று - தஞ்சை மாவட்டம் முழுதும் 12 மணி நேரத்தில் 12 லட்சம் மரக்கன்றுகள் நட்டு அதை ஒரு கின்னஸ் சாதனைக்காக முயன்றார். என் தெருவில் கூட 12 மரக்கன்றுகள் வளர்ந்து வருகின்றன. இரண்டாவது - இத்தனை ஆண்டு காலம் இல்லாத ஒரு திருவிழாவை முதன் முறையாக நடத்தியிருக்கிறார்.   120 ஸ்டால்களில் பெரும் புத்தகக் கண்காட்சி. 

தஞ்சையின் சரஸ்வதி மகால் நூலகம் உலகப் பெயர் பெற்றது. அதனருகே, அரண்மனை வளாக மைதானத்தில் கண்காட்சி நடைபெற்றது. பத்து நாள் விழா. நாள்தோறும் ஒரு சிறப்புப் பேச்சாளரின் சொற்பொழிவு. நான் நான்கு நாட்கள் சென்று வந்தேன்.  எத்தனை எத்தனை நண்பர்கள்! அனைவரையும் கட்டித் தழுவ வேண்டும் போலிருந்தது. புத்தகங்களைத்தான் சொல்கிறேன். பணம் கொஞ்சமே இருந்ததால், புத்தகங்களும் கொஞ்சமே வாங்கினேன். இன்னும் என் வீட்டுக்கு வராத நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். 

எனக்கு மிகவும் பிடித்த இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்த அன்று சென்றேன். அவர் அமர்ந்த வரிசைக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்தேன். 50 நிமிடங்கள் புத்தகங்கள் பற்றி மிக அருமையாக உரையாற்றினார். இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் போன வருடம் வேறொரு புத்தக விழாவில் அவர் பேச்சை கேட்டிருக்கிறேன். அதில் பேசிய எந்தவொரு கருத்தையும் இங்கே அவர் மறுபடியும் சொல்லவில்லை. முற்றிலும் வேறான செய்திகள். 

இன்னொரு நாள் சென்றபோது எதிர்பாராத விதமாக விநாடி வினா போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டேன். எதிர்பாராத விதமாக ஜெயித்தும் விட்டேன்.   சங்கர சரவணன் நடத்திய அந்தப் போட்டியில் ஐந்து சுற்று. கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. நிகழ்ச்சியில் நன்றாக விளையாடியதற்காக மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். நிறைவு நாளன்று ஆட்சியர் பரிசு வழங்கினார். கவிஞர் நெல்லை ஜெயந்தா வந்திருந்தார். அவருடன் கால் மணி நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக கவிதை பற்றியும் அவரைப் பற்றியும் பேசிக் கொண்டோம். முதல் சந்திப்பு அவருடன். 

இங்கே நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியலோடு இப்பதிவை முடித்துவிடுகிறேன். 
1. சின்ன சங்கரன் கதை - மகாகவி பாரதியார்
2. ஞான ரதம் - மகாகவி பாரதியார்
3. ரோஜா - சுஜாதா
4. குருபிரசாத்தின் கடைசி தினம் - சுஜாதா
5. 6961 - சுஜாதா
6. ஓரிரவில் ஒரு ரயிலில் - சுஜாதா
7. நான் நாத்திகன் - ஏன்? - பகத்சிங்
8. இது மிஷின் யுகம் - புதுமைப்பித்தன்
9. நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் - வெ. இறையன்பு
10. அயோக்கியர்களும் முட்டாள்களும் - ஞாநி
11. வில்லோடு வா நிலவே - வைரமுத்து
12. கொடிமரத்தின் வேர்கள் - வைரமுத்து
13. பகல் கனவு - ஜிஜூபாய் பதேக்கா
14. மலாலா ஓர் அறிமுகம் - ப்ரியா பாலு
15. பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்
16. சென்னை: தலைநகரின் கதை - பார்த்திபன்
17. மோகினித் தீவு - கல்கி
18. தமிழ் மண்ணில் விவேகானந்தரின் வீர முழக்கம்
19. அவளுக்காக ஒரு பாடல் - கவிஞர் கண்ணதாசன்
20. நானும் எனது நண்பர்களும் - ஜெயகாந்தன்
21. மேற்குச்சாளரம்: சில இலக்கிய நூல்கள் - ஜெயமோகன்
22. சாட்சிமொழி:சில அரசியல் குறிப்புகள் - ஜெயமோகன்
23. முன் சுவடுகள்: சில வாழ்க்கை வரலாறுகள் - ஜெயமோகன்
24. எப்போதுமிருக்கும் கதை - எஸ். ராமகிருஷ்ணன்
25. நகுலன் வீட்டில் யாருமில்லை - எஸ். ராமகிருஷ்ணன்
26. சித்திரங்களின் விசித்திரங்கள் - எஸ். ராமகிருஷ்ணன்
27. பாஷோவின் ஜென் கவிதைகள் - எஸ். ராமகிருஷ்ணன்
28. நாத்திகம் Vs ஆத்திகம் - சு. பொ. அகத்தியலிங்கம்
29. 'தின்'சைக்ளோபீடியா - என். சொக்கன்
30. மனிதகுல வரளாறு - ஏ.எஸ்.கே
31. உடல் மொழி - சிபி கே சாலமன்
32. ஆண்ட்ரூ க்ரோவ் - எஸ்.எல்.வி.மூர்த்தி
33. நவீன நோக்கில் வள்ளலார் - ப. சரவணன்
34. கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக - ராஜ் கௌதமன்
35. தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம் 
36. கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 
37. Work and its secret - Swami Vivekanandha 
38. What is real personality? - Swami Srikantandha
39. The last ticket and other stories (Collection of 10 different authors of 10 different countries)
40. Gitanjali - Rabindranath Tagore

நான்கு நாள் நண்பர்களோடு நெருக்கமாக இருந்தது மிகச் சிறந்த அனுபவம். இப்போது என் வீட்டுக்கு வந்திருக்கும் இந்த 40 நண்பர்களும் சந்தோசமாக விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.

புதன், 24 ஜூன், 2015

பழநி ஆண்டியும் தெரு ஆண்டியும் - 3 (இந்துக்கள் மட்டும் உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள் )

அந்த எதிர்பாராதது, ஓர் அறிவிப்பு பலகை. பக்தர்களுக்கு.
"இந்துக்கள் மட்டும் உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள்" என்று நீல வண்ண பலகையில் வெள்ளை எழுத்துகளில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் எனக்கு அதிர்ச்சி. நண்பன் ராகவனை அழைத்துக் காண்பித்தேன். உடனே, புகைப்படம் எடுக்கச் சொல்லி இதைக் கண்டித்து எழுதச் சொன்னான். அப்போது எனக்குள் சில...அல்ல அல்ல...பல கேள்விகள் எழுந்தன. 2014ல் கூட இப்படி ஒரு அறிவிப்பா? இந்தியா உண்மையிலேயே மதச் சார்பற்ற நாடா? பெரியார் விதைத்த விதை கனி தராமல் போய்விட்டதா? இப்படியெல்லாம் நினைத்து குழம்பிக்கொண்டே படிகளில் இறங்கினேன்.


சில தூரத்தில் ஒரு பலகை இருந்தது. இதுவும் அறிவிப்பு பலகை தான். ஆனால், இது பக்தர்களுக்கானது அல்ல. கடவுளுக்கானது. பக்தர்கள் தங்கள் கடவுள் பழநி முருகன் தங்கள் ஆசையை நிறைவேற்றச் சொல்லி காகிதத் துண்டுகளில் எழுதி ஒட்டி வைத்திருந்த கரும்பலகை. அங்கே போதிய அளவு வெளிச்சம் இல்லை. எனவே, படிப்பதற்குச் சிரமமாக இருந்தது. புகைப்படம் எடுக்கவும் தான். வெறுமனே வேண்டிக்கொண்டால் தங்கள் கோரிக்கையைக் கடவுள் மறந்து விடுவார் போலும். அதனால்தான், தாளில் எழுதி நினைவூட்டுகின்றனர். சில விண்ணப்பங்கள் வேடிக்கையாக இருந்தன. 
1. "நான் எக்ஸாம் ஸ்டேட் ஃபர்ஸ்ட் மார்க். முருகா என் அப்பா வருவாங்க"
2. "சந்தோஷ். ஐ லவ் யூ" (இடையில் கொஞ்சம் காகிதம் சுரண்டப்பட்டிருந்தது. எழுதியது ஆணாக இருக்க அதிக வாய்ப்புண்டு.  சுரண்டப்பட்ட இடத்தில் பெண்ணின் பெயர் இருந்திருக்கலாம்)
3. எனக்கு எப்படியாவது ஒரு கார் வேணும்.
   இவை மட்டும்தான் நான் புகைப்படம் எடுத்த வாசகங்கள். இன்னும் நிறைய என் கைபேசிக்குள் அகப்படாமல் போய்விட்டன.

    இப்போது கொஞ்சம் சிந்திக்கலாம். வாட்ஸப், முகநூல், ஐ - வாட்ச் என்று தொழில்நுட்பம் நம் கைகளுக்குள் சுருங்கி வந்துவிட்ட 2015ல்  ஒரு கோவிலில் 'இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்' என்று எழுதப்பட்டிருப்பது எதைக் காட்டுகிறது? நாம் வளர்ந்து விட்டோம் என்பதையா? அல்ல. இதில் மதத்தின் மிகப்பெரிய தந்திரம் இருக்கிறது. ஒரு காலத்தில் அறிவியலை மதம் வலுவாக எதிர்த்தது. விஞ்ஞானிகளை அது சாத்தான்களாக பாவித்தது. அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் உண்மையை தைரியமாகச் சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால், உண்மைதானே வெல்லும்? அறிவியல் வென்றது. மதங்களின் பெயரால் உருவாகியிருக்கும் பேதங்களை விஞ்ஞானம் அகற்ற முனைந்தது. இப்போது மதங்கள் கொஞ்சம் உஷாராகின. அறிவியலை எதிர்க்காமல் அறிவியலின் துணை கொண்டே தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவை முடிவெடுத்தன.  அறிவியலை நன்கு பயன்படுத்திக்கொண்டன. மின் விளக்குகளால் கோவில் இரவிலும் பளிச் ஒளி பெற்றது. மைக் வைத்து மதவாதிகள் மந்திரம் ஓதினர். குறைந்த செலவில் சுவரில் மாட்டும் மின்சார மேளங்களையும் பயன்படுத்திக்கொண்டன. பூஜைகளையும் திருவிழாக்களையும் நேரடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பின. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.  இவ்வளவும் பயன்படுத்தும் அதே வேளையில் தன் நோக்கத்திலிருந்து இந்த மதங்கள் விலகவில்லை. பேதங்களை ஊக்குவிக்க இதே தொழில் நுட்பத்தை அவை பயன்படுத்துகின்றன. மக்களை மீடியா மூலம் பழைய அடிமை தனத்துக்கு அழைத்துச் செல்கின்றன. அதன் ஒரு சின்ன வெளிப்பாடுதான் இந்தப் பலகை. இதன் நீட்சிதான் தொலைகாட்சியில் சொல்லப்படும் ராசி பலன்கள், பெயர்ச்சிப் பலன்கள், சமயச் சொற்பொழிவுகள், புராணக் கதைகள்.

இந்த அறிவிப்பை எதிர்த்து யாரும் கேட்கவில்லையா? இதே அறிவிப்பு காஞ்சி காமாட்சியப்பன் கோவிலிலும் இருந்தது. நான் பார்த்தது பத்து ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. இருக்கும் இருக்கும். ஏன் இப்படி? உண்மையான காரணம், அதிகம் காசு பார்க்கும் கோவில்களில் இந்த அறிவிப்புப் பலகை உள்ளது. தஞ்சை பெரியக் கோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவில் போன்ற யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் கோவில்களில் இவ்வறிவிப்பு இல்லை. எனவே, இது காசு பார்க்கும் ஒரு வழியேயன்றி வேறில்லை. இந்துக்கள் மட்டும்தான் ஏமாந்து பணம் தருவர் போல. அதனால்தான், அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பழநி கோவில் செழிப்பாக இருக்கிறது.

ஒரு பக்கம் பக்தர்களாக மக்கள் மூடர்களாக...இன்னொரு பக்கம், வியாபாரிகளாக மதவாதிகள். இந்த முரண்பாடு களையப்படுவற்கு முன்னால் உலகமயமாக்கலின் விளைவைப் பற்றிப் பேசி பயனில்லை. இன்னொரு முறை யாராவது பழநியில் முருகன் ஆண்டியாய் இருக்கிறான் என்று சொல்லட்டும்....அப்புறம் இருக்கிறது. 
- முற்றும்  
ஞாயிறு, 21 ஜூன், 2015

பழநி ஆண்டியும் தெரு ஆண்டியும் - 2

பழநி மலையின் படிக்கட்டுகளில் நானும் நண்பர்களும் ஏறத் தொடங்கினோம். பழநிக்கு செல்வது அதுதான் எனக்கு முதல்முறை. ஒரே கூட்டம். நாங்கள் போனபோதுதான் கூட்டமா என்றால் எப்போதுமே அப்படித்தானாம். படிகளில் ஏறிக்கொண்டே நண்பன் ஒருவனை பகடி செய்தோம். அவன் உடுமலைக்கு வருவதற்கு முன்பே இங்கே வந்து ஒரு தரிசனம் போட்டுவிட்டுதான் வந்திருக்கிறான். உடுமலையில் அவன் அதிகம் செலவு செய்யவில்லை. ஏன் என்று கேட்டபோது, தன் செருப்பை பாதுகாப்பதாகவும், சிறப்புப் பிரசாதம் தருவதாகவும் ஒரு கடையிலிருந்த தம்பதி சொல்லியிருக்கின்றனர். சொன்னார்கள் என்று சொல்வதை விட நம்ப வைத்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். நண்பனும் அவர்களை 'நம்ம்ம்ம்ம்ம்பி' செருப்பை விட்டு உள்ளே சென்று தரிசனம் முடித்து வந்து செருப்பை எடுத்திருக்கிறான். அவர்கள் சொன்னபடியே பிரசாதமும் கொடுத்தனர். வாங்கிய நண்பன் எவ்வளவு என்று கேட்டுக்கொண்டே 50ரூ நோட்டை எடுத்தபோது அவர்கள் 430ரூ என்றிருக்கின்றனர். நண்பனின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இவ்வளவா என்று வாய் பிளந்து கேட்டவனுக்கு 'சாமிக்கு செய்ய கணக்குப் பாக்காதீங்க' என்று பதில் சொல்லி 430ரூபாயை வாங்கிக்கொண்டு நண்பனை ஆண்டியாக்கி விட்டனர். 'சரி, 430ரூ மதிப்புள்ள பிரசாதம் இருந்தாலாவது மனதைத் தேற்றிக் கொள்ளாலாமென்றால் உள்ளே இரண்டு விபூதிப் பொட்டலம் மட்டுமே இருந்திருக்கிறது. இந்த சம்பவத்தைச் சொல்லிதான் நாங்கள் அவனை பகடி செய்தோம். அதற்கும் அவன் மீசையில் மண் ஒட்டாதவன் போல் 'என்னிடமிருந்து சாமி இதை எடுத்துகிச்சுனா, எனக்கு வேற எதோ தரப்போகுதுனு அர்த்தம்' என்றான். எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. (உபரித் தகவல்: நண்பனின் ரயில் டிக்கட்டை நாங்களே எடுத்து அவனை ஊருக்குக் கூட்டி வந்தோம்.) 
இடையிடையே ஓட்டப்பந்தயம் வைத்து வேகமாக படிகளில் ஏறி எங்களுக்கு விளையாட்டு காண்பித்தனர் வேறு இரண்டு நண்பர்கள். மலை மீதும் பயங்கர கூட்டம். இருட்டி விட்டிருந்தது. விளக்கொளியில் கோவில் பளிச்சென்றிருந்தது. நீண்ண்ண்ண்ண்ட வரிசையில் பக்தர்கள் கூட்டம். நாங்களும் காத்திருந்தால் அன்றைய இரவு ரயிலைப் பிடிக்கமுடியாது என்பதறிந்தோம். வெகு நேரம் காத்திருக்க முடியாது. எனவே, கொஞ்ச நேரம் காத்திருந்து பொங்கல் வாங்கிச் சாப்பிட்டோம். அங்கேயிருந்த தண்ணீர் தொட்டியில் மாட்டியிருந்த தம்ளரை எடுத்து குழாயைத் திறந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது.....ஒரு குரங்கு. அலைபேசியில் காணொளி எடுத்தோம். குரங்குகளுக்கு அறிவில்லை என்று யார் சொன்னது? 

அதை வியந்துகொண்டே, ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டே கோவிலைச் சுற்றி வந்தோம். மலை மீது ஏறியும் ஆண்டியைப் பார்க்க முடியவில்லையென்றாலும் நண்பனின் வடிவில் பார்த்து விட்டோம். முன் வாசலுக்கு வந்தோம். அங்கேதான் எதிர்பாராத ஒன்றைப் பார்த்தோம். என்னது அது? ?
 - தொடரும்

வெள்ளி, 19 ஜூன், 2015

பழநி ஆண்டியும் தெரு ஆண்டியும் - 1

மு. கு: ஆண்டியை ஆண்ட்டி என்று படித்துவிடாதீர்கள். தலைப்பின் பொருளே மாறி விடும்.

பழநி சென்று வந்ததைப் பற்றி ஒரு பதிவு இடவேண்டுமென்று  நண்பன் வற்புறுத்தியதால் (ஆனாலும், நன்றி ராகவன்) பதிவது இது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் செமெஸ்டர் தேர்வுக்குப் பின் (எவ்வளவு நாளுக்குப் பிறகு எழுதுகிறேன்!!!) உடுமலையில் ஒரு பேப்பர் தொழிற்சாலையில் இன்-ப்ளான்ட் டிரெய்னிங் (தமிழில் என்ன என்று தெரிந்தவர்கள் சொல்லலாம் ) சென்றோம். பயிற்சியெல்லாம் நன்றாகத்தான் சென்றது. சீக்கிரம் முடிந்துவிட்டதால், கடைசி நாள் திருமூர்த்தி அருவிக்கும் பழநி கோவிலுக்கும் சென்று வர முடிவு செய்தோம். புறப்பாடு ஆயிற்று.

காலை நேரமாகியதால் நகரப் பேருந்தின் கூட்டத்தைத் தாள முடியவில்லை. ஆங்கில எழுத்துகளைப் போல வளைந்து நிற்க வேண்டியிருந்தது. எப்படியோ திருமூர்த்தி மலைக்குச் சென்று சேர்ந்தோம். சிறிய அருவிதான் என்றாலும் குறைவில்லாமல் நீர் சுரந்தது; அல்லது பொழிந்தது. சிறு வயதில் ஒரே ஒரு முறை குற்றாலத்தில் குளித்திருக்கிறேன். அருவியில் குளிப்பது இது இரண்டாவது முறை. இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் நாம் எவ்வளவு அற்பமானவர்கள் என்பது சுற்றுலா செல்லும்போது தான் புரிகிறது. புறந்தூய்மை மட்டுமல்ல; மனம் கூட நீரால் புத்தணர்ச்சி கொண்டது. அப்போது ஐயப்பன் சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் பலர் வந்துகொண்டே இருந்தனர். குளித்து தலை துவட்டியபோது வைரமுத்துவின் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. 

"நக்கீரா..
 இதை நீர்வீழ்ச்சி என்பது
 பொருட்குற்றம் அல்லவா?
 நீருக்கு இது
 வீழ்ச்சியல்ல.
 எழுச்சி"

அருவிகள் என்றால் குரங்குகள் இருந்தால்தானே அழகு? நிஜக் குரங்குகள் மனிதக் குரங்குகளை (எங்களைத்தான்) வம்புக்கிழுத்தன. அருவிக்கு செல்லும் முன் ஒரு கோவில் இருக்கிறது. அதனருகே நிறைய கடைகள் இருந்தன. சில கடைகளுக்கு முன் மூன்று பெரிய தட்டுகளில் குங்குமம், சந்தனம், திருநீறு வைக்கப்பட்டிருந்தன. ஒரு ரூபாய் கொடுத்தால் ஒன்றைப் பூசிக்கொள்ளலாம். மூன்றுக்கும் சேர்த்து மூன்று ரூபாய். எதிரே கண்ணாடி கூட உண்டு. இது எனக்கு புதியதாக இருந்தது. 

அடுத்து பழனி வந்தோம். மாலை நேரம். கொண்டு வந்த பைகளை சேஃப்டி லாக்கரில் வைத்து கொவிலுக்குச் செல்ல அடியெடுத்தோம். ஒரு சிறுவன் என்னிடம் கை நீட்டினான். பசிக்கிது என்றான். யாசிப்பவர்களைக் காணும்போது என் தேசத்தின் மீது கோபம் வருகிறது. சுயநலவாதிகள் கொழுப்பதும் இவனைப் போல் இளைத்தவன் நோவதும் முடிவுக்கு வந்தபாடில்லை. பையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை அப்படியே கோடுத்தேன். அவன் வாங்கிக்கொண்டான். நான் மகிழ்ந்து கொண்டேன். மீண்டும் கை நீட்டினான். பணம் வேண்டும் என்றான். எனக்குப் புரியவில்லை. யோசித்தேன். 'ஒருவேளை அவன் உணவாக சாப்பிட நினைத்திருக்கலாம். பிஸ்கெட்டெல்லாம் சரி வருமா' என்று நானே எண்ணிக்கொண்டு 10ரூ கொடுத்தேன். அவன் வாங்கவில்லை. "என்னாண்ணே. கூட குடுங்கண்ணே" என்றான். நான் மறுத்தேன். அவன் என் சட்டை பையைக் காட்டி 'அதைக் குடுங்க' என்றான். நான் வைத்திருந்தது 50 ரூபாய் நோட்டு. எனக்கு அவன் கேட்டது ஆச்சர்யமாக இருந்தது. கோபத்தில் நான் அவன் தோள் மேல் கை போட்டு உணவகத்துக்கு அழைத்தேன். அவன் மறுதலித்தான். பிறகு, 10 ரூ நோட்டை கேட்டு வாங்கிக்கொண்டு  போய் விட்டான். கொஞ்ச தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தேன். அவன் வேறொருவரிடமும் யாசித்துக்கொண்டிருந்தான். மலை மீது ஏறிதானா ஆண்டியைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே மலையில் ஏறத் தொடங்கினேன். 
   - தொடரும் 

வியாழன், 9 ஏப்ரல், 2015

எழுத வைத்த எழுத்து

இந்தத் தலைப்பில் நான் எழுத நேரிடும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.  மனத்தின் கணத்தோடுதான் எழுதுகிறேன். இப்போது என்னை எழுத வைத்தது ஜெ.கே என்னும் இரண்டெழுத்து. 

ஜெயகாந்தன் இறந்துவிட்டாராம். ஜெயகாந்தன் யாரென்று கேட்கமாட்டீர்கள். அவரை அறியாதோர் தமிழ் இலக்கியத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஜெயகாந்தனின் முகத்தை பலர் பார்த்திராமல் இருக்கலாம். அவர் கதைககளைக் கூட பலர் வாசித்தறியாதிருக்கலாம். ஆனாலும், ஜெயகாந்தன் என்ற பெயரைக் கேள்விப் படாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த காந்தம் தான் ஜெயகாந்தன்.

என் பள்ளிப் பருவம். எல்லோரையும் போல் நானும் முதலில் சுஜாதாவின் கதைகளைத்தான் படித்தேன். அதன் பிறகே ஜெ.கே வை அறிந்தேன். அவருடைய "சில நேரங்களில் சில மனிதர்கள்" நாவலை 100 பக்கங்கள் படித்தேன்.  பிடிக்கவில்லை. 'அப்படி ஒன்றும் பெரிதாக இவர் எழுதிடவில்லையே. இதற்கா சாகித்ய அகாடமி விருது கொடுத்தார்கள்?இது ஒரு தொடர் கதை. நாவல் என்று சொல்லமுடியாது' என்றெல்லாம் முடிவு கட்டிவிட்டேன். பிறகுதான் புரிந்தது, அப்போது நான் வாசிப்பின் ஆரம்ப நிலையைக்  கூட தாண்டவில்லையென்று. வாசிப்பு பெருக பெருக வெகு நாள் கழித்து மீண்டும் அதை எடுத்துப் படித்தேன். இல்லை இல்லை. அவர் அறிமுகப்படுத்திய  மனிதர்களோடு வாழ்ந்தேன். 4 நாள் சாப்பிட மனமே இல்லாமல், தூங்க மனமேயில்லாமல் கையோடு எப்போதும் வைத்திருந்து படித்து முடித்தேன். அது நாவலா? ம்ஹூம் 'அதுக்கும் மேல'. படித்துக்கொண்டிருந்தபோதே நண்பர்கள் ஐவருக்கு முழுக் கதையையும் சொன்னேன். அந்நாவலின் மாந்தர்களான கங்கா, அவள் மாமா, பிரபு, அவர் மகள், ஆர்.கே.வி என்று யாரை நான் மறப்பேன்???  

தேடித் தேடிப் படித்தேன் அவர் எழுத்துகளை. இணையத்தில் அவரைப் பற்றி இதுவரை என்னவெல்லாம் செய்திகள் இருக்கின்றனவோ அத்தனையும் படித்து முடித்தேன். அவருடைய அனைத்து புகைப்படங்களையும் சேகரித்தேன். அவரைப் பற்றி ரவி சுப்ரமணியன் இயக்கிய ஆவணப்படம் பார்த்தேன். ஜெயகாந்தன் என்ற மாமனிதனை இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டேன். ஞான பீட விருது வழங்கி ஜெயகாந்தனைப் பற்றி அப்துல் கலாம் பேசிய நீண்ட உரையை கஷ்டப்பட்டுத் தேடிப் படித்தேன். எல்லோருக்குமே ஜெ.கே ஒரு நாயகன் தான். அவர் சினிமாவும் இயக்கியிருக்கிறார். அரசியலிலும் நின்றிருக்கிறார். அவர் கோபம், கூர்மையான பேச்சு, குழந்தைச் சிரிப்பு, தலைப்பாக் கட்டு, கம்பீரமான நடை, உண்மையான செயல் எல்லாம் அறிந்து பிரமித்துப் போனேன். ஒரு வேளை பாரதி இப்படி தான் இருந்திருப்பானோ என்றே நம்பிவிட்டேன். அவர் பாரதியின் பெரும் பக்தனாயிற்றே! 


அவருடைய வித்தியாசமான பார்வை என்னை மிகவும் கவர்ந்தது. "கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா; இல்ல  ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா?" என்ற பாடலை எழுதிவிட்டு சிநேகன் பெரும் அவஸ்தைக்குள்ளானார். தமிழ் பண்பாட்டை இழிவுபடுத்துவதாக சொல்லி அவரை இழிவுப்படுத்தினர். அப்போது ஒரு மேடையில் ஜெயகாந்தன் அந்த பாடலுக்கு ஒரு விளக்கம் கொடுத்தார். நான் கேட்டேன். சிலிர்த்தேன். என்ன பார்வை அது!!!அதுதான் ஜெயகாந்தன். 

ஜெயகாந்தன் ஆணவம் பிடித்தவர் என்பர். எனக்கு அந்த சொல் சரியானதாகப் படவில்லை. ஆணவம் என்பது அரைகுறை எழுத்தாளர்களிடம் இருப்பது. ஜெ.கே விடம் இருப்பது ஆணவம் அல்ல. பாரதி சொன்னது போல் "திமிர்ந்த ஞானச் செருக்கு". அது ஞானம் அடைந்தவர்களிடம் இருக்கும் செருக்கு. ஜெயகாந்தன் தமிழ் நாவலின் வடிவத்தை மாற்றியவர். அதன் உள்ளடக்கத்தை மேம்படுத்தியவர். அதி பயங்கர பொருள் கொண்ட நாவல்களை அனாயாசமாக எழுதியவர். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' முதல் தர நாவல். 'ரிஷிமூலம்'. அய்யய்யோ! தாயிடம் உடல் இச்சை கொண்ட மகனைப் பற்றிய (இடிஃபஸ் காம்ப்லக்ஸ்) அதன் கதைக் கருவைப் பேசவே பலரும் தயங்குவரே! 'சினிமாவுக்குப் போன சித்தாளு', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' எல்லாமே அந்த காலக்கட்டத்தில் எழுதமுடியாத, எழுதக்கூடாத கதைகள்.

ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனால், இன்னும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் என்றே பலரும் அவரை நினைக்கின்றனர். ஆனந்த விகடன் நடத்திய அவருடைய 80-வது பிறந்த நாள் விழா தான் அவர் கடைசியாகக் கலந்துகொண்ட விழா என்று நினைக்கிறேன். அந்த விழாவில் கூட அவர் அதிகம் பேசவில்லை. எப்போதும் கர்ஜிக்கும் சிங்கம் அன்று இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசியது.

ஜெயகாந்தன் இன்னும் நிறைய எழுதியிருக்கலாம் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால், அவர் இதுவரை எழுதிய எழுத்துக்களே இன்னும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. அதை அவரே கூட ஒருமுறை சொல்லியிருக்கிறார். அவர் படைப்புகளை முழுமையாகப் புரிந்து கொள்ள இன்னும் சில நூற்றாண்டுகளாவது ஆகும். அதுவரை அவர் இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியாது தான். வாழும் எழுத்தாளராகவே இன்னும் பல ஆண்டுகள் கருதப்படுவார். 
புதன், 4 பிப்ரவரி, 2015

கள்ளில் அரசியல்

நேற்று ஒரு புத்தகம் படித்தேன். புத்தகத்தின் பெயரே வித்தியாசமானது.    
 "அ-சுரர்களின் அரசியல்". ஆசிரியர் ரவிக்குமார். 40 பக்கங்கள் மட்டுமே கொண்ட மிக எளிய நூல்.  ஆசிரியர் ஒரு கருத்தரங்கில் பேசிய உரைதான் இந்த நூல். அரை மணி நேரத்தில் படித்து விடலாம். ஆனால், படிக்கும்போதும் படித்த பின்பும் நம்மை சிந்திக்க வைக்கும் செய்திகளைக் கொண்டுள்ளது. 

ஆசிரியர் இந்நூலில் சொல்லும் சில முக்கியமான செய்திகள் இவை:
  1. சுரர் என்பவர் வைதீகர்கள்.  அ-சுரர் என்று புராணங்களில் கொடூரமாக சித்திரிக்கப்பட்டவர்கள்  ஆதிகால பௌத்தர்கள்.
  2. இந்த அசுரர்கள் பஞ்சமா பாதகங்களான கொலை, களவு, பொய், கள் அருந்துதல், குரு நிந்தை ஆகியவற்றை செய்யாதவர்கள். அதை ஒதிக்கியவர்கள். அதற்கு எதிராக பிரச்சாரமும் செய்தவர்கள்.
  3. பிற்காலத்தில் நடந்த அரசியல் சூழ்ச்சியால் இவர்களை வர்ணக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி சூத்திரர்களாக ஒதிக்கிவிட்டனர் வைதிகர்கள். இந்த அசுரர்களே இன்றைய தலித்கள்.

தலித்களை வைத்து இன்று எவ்வாறு அரசியல் செய்யப்படுகிறது என்று ஆராய்கிறார் ஆசிரியர். நாமெல்லோரும் மது அருந்துவதைப் பற்றியும் புகைப் பிடிப்பதைப் பற்றியும் தான் அதிகம் பேசுகிறோம். கள் உண்ணுவதைப் பற்றி பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும், கள் உடலுக்கு நல்லது, அது ஆதிகாலத்திலிருந்து நம்மக்கள் பயன்படுத்திய இயல்பான ஒரு பானம் என்றுதான் பேசுகிறோம். இதை ஆசிரியர் முற்றிலும் மறுக்கிறார். 

கள்ளுக்கடை திறப்போம் என்று தமிழக அரசியல் கட்சிகள்(குறிப்பாக விஜயகாந்த்) கொடுக்கும் வாக்குறுதி மக்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை விளைவிக்கும் என்று சான்றுகளோடுச் சொல்கிறார். அது ஏழை மக்களின் பொருளாதாரத்தை எந்த வகையிலும் முன்னேற்றி விடாது என்றும் சொல்கிறார். 

சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார் ஆசிரியர்.

  • கள்ளுக்கடைகள் ஏன் சேரிப் பகுதிகளில் மட்டும் அதிகம் இருக்கின்றன?
  • கள்ளுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் யார்?
  • தலித் தலைவர்கள் ஏன் கள்ளை எதிர்க்கின்றனர்?
  • கள் போதை பொருள் இல்லையென்றால், அக்கால மக்களுக்கு உடல் வலுவைத் தந்திருந்தால் வள்ளுவர் ஏன் 2000 ஆண்டுகளுக்கு முன்பே "கள்ளுண்ணாமை"யை வலியுறுத்தி தனி அதிகாரம் படைத்துள்ளார்?
  • கள்ளுக்கடைகளையும் கள் இறக்க பயன்படுத்தப்பட்ட தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்திய பெரியார் வாழ்ந்த தமிழகத்தில் மீண்டும் கள் வேண்டும் என்று பேசும் கட்சிகள் என்ன அரசியல் நோக்கம் கொண்டுள்ளன?
இவ்வாறு 40 பக்கங்களில் நிறைய பேசியிருக்கிறார். கள் பற்றிய நம் கருத்தை மீள் பரிசோதனை செய்யவும் வைத்துள்ளார். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

Ads Inside Post