வெள்ளி, 12 டிசம்பர், 2014

யார் இவன்?

பரவாயில்லை...சமூக வலைத்தளங்களில் கணிசமான பகிர்வுகளும் தகவல்களும் பரிமாரப்பட்டுள்ளன. மகிழ்ச்சி.  மகாகவி பாரதியின் 133ஆம் பிறந்த நாள் பகிர்வுகளைப் பற்றிதான் குறிப்பிட்டேன்.

சமூக வலைத்தளங்களையும் செய்தித் தாள்களையும் கவனித்தேன். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பாரதிக்குக் கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் எளிது. மத்திய அமைச்சர் தருண் விஜயின் முயற்சியால் பாரதியின் பாடல்களை மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும் அவர் பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் கிடைத்தக் கூடுதல் கவனம். மகிழ்ச்சியான செய்தி. இதைத்தான் பாரதியும் எதிர்பார்த்தான். தன் பாடல்கள் தீப்பெட்டியை விட மலிவாக விற்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். 

பாரதியைப் பற்றி எழுத முற்படும்போது எதை எழுதுவது என்ற தடுமாற்றம் வருகிறது. காரணம், பாரதியின் பன்முக ஆளுமை. எழுத்தின் எல்லா சாத்தியக்கூறுகளையும் பாரதி முயற்சித்துள்ளான். இலக்கண விதிகளுக்கு உட்பட்டு செய்யுள்களும் இயற்றியிருக்கிறான். இலக்கணத்தை மீறி புதி விதிகளும் சமைத்திருக்கிறான். அவனுடைய பன்மொழி ஆளுமை, அறிவியல் ஆர்வம், சமகால நிகழ்வுகளின் மீது கவனம் - இதெல்லாம் அவன் கவிதைக்கு மேலும் மெறுகேற்றுகின்றன. 

பாரதியின் பாடல்கள் முழுவதையும் நான் படித்திருக்கிறேன். திரும்ப திரும்ப பாடிப் பரவசமாகியிருக்கிறேன். மோன நிலையைக் கூட அடைந்திருக்கிறேன். பாரதியின் மிக மிக மிக மிக (பாரதியின் தாக்கம்) சிறந்தப் படைப்பாக நான் கருதுவது 'குயில் பாட்டு'ம் 'வசன கவிதை'யும். ஒருமுறை படித்துப் பாருங்கள். வாசிக்கும் எல்லோருக்கும் பரவசம் ஏற்படும். பாரதியிடம் எனக்குப் பிடித்தது புதுமையை விரும்பும் போக்கு. புதிதாக செய்ய வேண்டும் என்ற தவிப்பு. இந்தத் தவிப்பு கொண்ட மகாகவிஞர்கள் சில நூற்றாண்டு இடைவெளியில் தமிழில் வந்துகொண்டுதானிருக்கின்றனர். அப்படி நான் மதிக்கும் புதுமைவிரும்பிகள் இவர்கள் - திருவள்ளுவர், ஔவையார், பாரதியார். 

பாரதியைக் கொண்டாடுவோர் ஒரு புறம். அவனைத் தூற்றுபவர் இன்னொரு புறம். நான் இரண்டு தரப்பினரின் வாதங்களையும் வாசித்திருக்கிறேன். பாரதியைக் கொண்டாடுவோர் அவருடைய பெண் விடுதலைச் சிந்தனை, விடுதலை வேட்கை, தமிழ்க் காதல், தேசியத் தலைவர்கள் பற்றிய பாடல்கள், பக்திப் பாடல்கள், ஞானப் பாடல்கள், முப்பெரும் பாடல்கள், பத்திரிகைத் திறன் பற்றி பேசுவர். எதிர்ப்பவர்கள் யாரென்று தெரிந்துகொள்ள ஆர்வப்பட்டேன். அவர்களில் முதலில் இருப்பவர்கள் திராவிடக் கழகத்தினர். அவர்கள் பாரதி ஆரியத்தைத் தூக்கிப் பிடித்தான், அவனுக்கு தமிழ் மேல் காதல் என்பது பொய், பார்ப்பனீயத்தை மறைமுகமாக பரப்பியவன், ஆர். எஸ். எஸ். இன் ஆரம்பம் அவன்தான் என்றெல்லாம் குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஏனென்றால், பாரதி பார்ப்பன வகுப்பில் பிறந்தவர். இத்தனைக்கும் கி. வீரமணி அவருடைய புத்தகங்களில் பல இடங்களில் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன் பாரதி பக்தன், பாரதி பித்தன். ஆனால், எழுத்தாளர் ஜெயமோகனோ பாரதி மகாகவி இல்லவே இல்லை என்று அடித்து பேசுகிறார். எல்லாவற்றையும் படித்த பிறகு ஒன்று புரிந்தது. பாரதியை எந்த காரணத்திற்கு வேண்டுமானாலும் போற்றலாம் அல்லது தூற்றலாம். ஆனால், எந்த காரணத்திற்காகவும் புறக்கணிக்க முடியாது. அதுதான் பாரதி.

பாரதி இறந்தபோது வறுமையிலிருந்து மீள  அவர் கவிதைகளை இசையமைத்துத் தர சூரஜ் மால்  என்பவரிடம் அவருடைய குடும்பம் கொடுத்தது. அவர் மொத்தப் பாடல்களையும் சுருட்டிவிட்டார். அவரிடமிருந்து ஏ. வி. மெய்யப்ப செட்டியார் அந்தக் காலத்திலேயே 10,000 ரூபாய் கொடுத்து சூரஜ் மாலிடம் இருந்து பாரதியின் மொத்தப் பாடல்களையும் மீட்டெடுத்தார். தன்னுடைய படங்களில் பாரதியின் பாடல்களைப் பயன்படுத்தத் தொடங்கினார். பின்னர், அவரிடமிருந்து அரசுடமையாக்கப்பட்டது. அதன் பிறகே, பாரதியின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரவின. 

அதற்கு மிக முக்கியக் காரணமானவர் தோழர் ஜீவானந்தம். எங்கேயோ கேட்ட பெயர் போல இருக்கிறதல்லவா? வேறெங்குமில்லை. 'கத்தி' படத்தில் எளிய மக்களுக்காகப் போராடும் கதாபாத்திரத்திற்கு இவர் நினைவாகத்தான் ஜீவானந்தம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அவர்தான் தமிழக சட்டமன்றங்களிலும் பொதுவுடைமைக் கூட்டங்களிலும் அதிக அளவில் பாரதியின் பாடல்களைப் பாடி அதை பரவலாக்கியவர். அவருடன் எப்போதும் 'பாரதி கவிதைகள்' புத்தகம் இருக்கும். அதை ஒருமுறை வாங்கிப் பார்த்த ஒருவர் புத்தகம் முழுவதும் எல்லா வரிகளும் அடிக்கோடிற்றிருப்பதைப் பார்த்து வியந்து ஜீவாவிடம் ஏன் என்று கேட்டாராம்.  "ஒரு முறை படிக்கும் போது சில வரிகள் சிறப்பாகத் தோன்றும். அப்போது அவற்றை அடிக்கோடிடுவேன். அடுத்த முறை படிக்கும்போது வேறு சில வரிகள். இப்படியே புத்தகம் முழுதும் அடிக்கோடிட்டுவிட்டேன்" என்றாராம் ஜீவா . அஹா...எண்ணி எண்ணி வியக்கிறேன். 

பாரதியின் படைப்புகள் எண்ணற்ற பிரதிகள் கண்டுவிட்டன. பாரதிக்குப்பின் அவர் தாக்கம் இல்லாத எந்த தமிழ் கவிஞனும் இல்லை. பாரதியின் வரிகளை திரைப்படங்களுக்குத் தலைப்புகளாக வைத்தாயிற்று. (சமீபத்திய உதாரணம் - சூது கவ்வும், ஆதலால் காதல் செய்வீர்). எல்லாப் பாடகர்களும் அவர் பாடல்களைப் பாடியாயிற்று. மாறுவேடப் போட்டிகளுக்கு அவர் உருவத்தை Standard ஆக செய்தாயிற்று. சிலை வைத்தாயிற்று. பூஜை செய்தாயிற்று. இன்னும் என்ன செய்ய வேண்டும் பாரதிக்கு?

உண்மைதான். அவன் தன் கவிதைகளுக்கு அங்கீகாரத்தை எதிர்பார்த்தான். ஆனால், அதை விட பெரிதாக அவன் ஆசைப்பட்டது தன் மக்கள் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று; அவனைப் போல் உணவில்லாமல் யாரும் சாகக் கூடாது என்று;  பழம் பெருமை பேசியே பாழாகக் கூடாது என்று; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கக் கூடாது என்று; புல், புள், செடி, கொடி, விலங்கு என்று எல்லா உயிரையும் தன்னைப் போல் நினைக்க வேண்டும் என்று; வையத் தலைமை கொள்ள வேண்டும் என்று. இன்னும் எத்தனை எத்தனையோ. அவனுடைய 'புதிய ஆத்திசூடி' முழுவதுமே நமக்கான கட்டளைகள். இவற்றை நாம் முழுமையாகச் செய்திருக்கிறோமா??

பாரதி யார்?

பாரதியை மகாகவி என்று பலர் சொல்கிறார்கள். 'நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா', 'பைந்தமிழ்த் தேர்ப் பாகன்', 'பாட்டுக்கொரு புலவன்' என்று பாவேந்தர் சொல்கிறார். "இல்லை இல்லை. பாரதி  ஒரு தலைவன். அவன் கவிஞனாகவும் இருந்தான் என்பதுதான் உண்மை" என்று சுகி. சிவம் சொல்கிறார். பாரதி ஒரு சிறந்த இதழாசிரியர் என்று இதழாளர்கள் சொல்கிறார்கள். பாரதி ஒரு விஞ்ஞானி என்று அப்துல் கலாம் சொல்கிறார். அவன் வெறும் இசைப் பாடலாசிரியன் மட்டும்தான் என்று ஜெயமோகன் சொல்கிறார். விடுதலைக் கவி என்று சிலர், நூற்றாண்டுக் கவி என்று சிலர், பிரபஞ்சக் கவி என்று சிலர், பார தீ என்று சிலர். மகாக(கா)வி பாரதி என்று தி. க. வினர்.  

10 நிமிடங்களுக்கு முன்பு ஓஷோவின் புத்தகத்தில் படித்தது இது. ஓஷோ சொல்கிறார், "ஞானமடைந்தவர்கள் யோசிப்பதில்லை, அதற்கு அவசியமில்லை! வாழ்க்கை அவன் முன்னால் என்ன கொண்டு வந்தாலும், அவன் எதிர்கொள்வான்". 

ஒருவேளை, பாரதி ஞானியோ??

யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். யார் இவன்?

சனி, 15 நவம்பர், 2014

உள்ளவரை வாழ வைக்காத சென்னை

இந்த வலைப்பூவில் நான் இரண்டு விஷயங்களைப் பற்றி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்றிருந்தேன். ஒன்று அரசியல் (கட்சி அரசியல்).  இரண்டு சினிமா. ஆனால், இப்போது ஒரு படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று என்னையறியாமலே என்னுள் ஒரு தூண்டுதல். என்னைக் கவர்ந்த அந்தப் படம் 'மெட்ராஸ்'. 

நூறில் தொன்னூற்று ஒன்பதே முக்கால் புள்ளி ஒன்பது ஒன்பது படங்கள் சென்னையில் நடைபெறுவதாகவே இருக்கிறது. அதைப் பார்க்கும் மக்கள் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்து இன்று வரை சென்னை என்றால் டாம்பீகமும் கம்பீரமும் கொண்ட மாநகரம் என்று நினைத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே முதல் முறை சென்னைக்குப் போகும் அயலூர்வாசிக்கு அதன் மீது அதீத எதிர்ப்பார்ப்பும் நிறைய நம்பிக்கையும் கொஞ்சம் பயமும் மிரட்சியும் வந்துவிடுகிறது. (முதல் முறை போனபோது எனக்கும் இவை இருந்தன). உண்மைதான். சென்னையில் இல்லாதது எதுவும் இல்லை. ஆனால், நாம் பார்க்கும் இந்த முகம் சென்னையின் ஒரு பகுதிதான். தென் சென்னையை மட்டும் காண்பிக்கும் தமிழ் சினிமாவில் முதன் முதலாக முழுக்க முழுக்க வட சென்னையைக் காட்டியிருப்பதால் தான் இந்தப் படம் எனனைக் கவர்ந்தது.


படத்தின் கதையை யாரிடமாவது கேட்டால் 'செவுத்துக்காக அடிச்சுக்குற படம்' என்பார்கள் (என்னிடம் பலர் அப்படித்தான் சொன்னார்கள்). பார்த்துவிட்டு நானும் கொஞ்சம் யோசித்தேன். கதை என்று பார்த்தால் மேற்சொன்னது ஓரளவு உண்மைதான். ஆனால், இது சுவர் பற்றியது அல்ல. அதிகாரம் பற்றியது. எனக்கு எழுத்தாளர் எஸ்.ரா சொன்னது நினைவுக்கு வருகிறது. "ஒரு சினிமா என்பது கதை சொல்லும் ஊடகம் அல்ல. சினிமாவில் கதையை மட்டும் எதிர்பார்க்கக் கூடாது. அது பல விஷயங்களின் தொகுப்பு. பாடல், இசை, நடிப்பு, களம், தொழில் நுட்பம், காமெடி, ஒளிப்பதிவு என்று பலவற்றின் தொகுப்பு. இவை எல்லாமுமே ஒரு படத்தில் நன்றாக அமைய வேண்டும்" என்று அவர் சொன்னது உண்மைதான். இந்தப் படம் அப்படி ஒரு படம்.


தலித் மக்களின் வாழ்க்கையை அப்பட்டமாகப் படம் பிடித்திருக்கிறது. இரண்டரை மணி நேரம் வட சென்னை மக்களோடு வாழ்ந்தது போலவே இருந்தது. படத்தில் நடித்திருக்கும், மன்னிக்கவும். வாழ்ந்திருக்கும் எல்லா கதாபாத்திரங்களும் மனதில் தங்கிவிடுகின்றனர். ஜானி, கலையரசி, அன்பு, மாரி, மேரி, காளி என்று அனைவரும் அட்டகாசமாக நடித்திருக்கின்றனர்.  கார்த்தியின் தோற்றம் முழுதும் வடசென்னையன் போல் இல்லை என்றாலும் உடல் மொழியிலும், பேச்சிலும் வட சென்னையன் தான். கேத்ரினின் இயல்பான நடிப்பு, அளவான அழகு அருமை. பலரும் புதுமுகங்கள். ஆனால், நாம் ஏற்கனவே பழகிய மனிதர்கள் போலவே இருக்கின்றனர். 


சந்தோஷ் நாராயணனை எப்படி பாராட்டுவது. இவர்தான் இந்த மாதிரியான கதை களத்திற்குப் பொருத்தமான இசையை தரமுடியும் என்றே தோன்றுகிறது. 'எங்க ஊரு மெட்ராஸ்' - தலித்களின் வாழ்க்கையின் சுருக்கம். 'ஆகாயம் தீப்பிடிச்சா', 'நீ நான்' காதல் அனுபவம். கானா பாலாவின் 'இறந்திடவா' இரங்கற்பா. 


 சில இடங்கள் என்னைச் சிலிர்க்கச் செய்தன. தலித் மக்கள் மீது பெரும் மதிப்பும் அவர்கள் படும் துன்பங்களையும் உணர முடிந்தது. இப்படி ஒரு படத்தை நான் வெகு நாட்களாகவே எதிர்பார்த்தேன். இயக்குனர் ரஞ்சித்துக்கு மிகப்பெரிய சலாம். 

"ரிப்பன் பில்டிங் ஹை கோர்ட்டுல செங்கல் மணல் மட்டுமில்ல 
எங்களோட ரத்தங்களும் சேர்ந்திருக்குடா", "போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு கூட்டம் கூட்டி ஓட்டு போட்டும் ஏமாற்றமே எங்க பண்பாடு தான்" என்ற கபிலனின் வரிகள் என்னை பாதித்தன. இந்த சமூகத்தை சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. 

மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றி பல ஆண்டுகள் ஆனாலும் வட இந்தியா வாசிகள் இன்னமும் தமிழர்களை மதராஸிஸ் என்றுதான் சொல்கிறார்கள். வட இந்திய மக்களால் நாம் எப்படி ஒதுக்கப்படுகிறமோ அப்படி தென் சென்னை வாசிகளால் ஒதுக்கப்படுபவர்கள்தான் வட சென்னையர். 

வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தென் சென்னையை மையமாக வைத்தே தீட்டப்படுகின்றன. வட சென்னை இன்னமும் வளராத சென்னையாகவே இருக்கிறது. மாட மாளிகைகளும், சிறந்த மருத்துவமனைகளும், இ.ஏ (EA) களும், ஸ்பென்சர்களும், கல்லூரிகளும், மைதானங்களும் தென் சென்னையில் தான் உள்ளன. சினிமாக்காரர்களின் வீடுகளும், அரசியல்வாதிகளின் வீடுகளும் தென் சென்னையில்தான். இவ்வளவும் இங்கே இருக்கின்றன.

வட சென்னையிலும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் உள்ளனவே என்று நீங்கள் நினைக்கலாம். இதிலும்  ஓர் அரசியல் இருக்கிறது. வட சென்னையில் வசிப்பவர்கள் (வாழ்பவர்கள் என்று சொல்லமுடியாது) பெரும்பாலும் தலித்கள். தொழிற்சாலைகளின் கழிவுகள் வட சென்னைவாசிகளையே பாதிக்கின்றன. உயிரிழப்பு அங்கேதான் அதிகம். ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக வைக்கப்படுவது போல்தான் இது. இயந்திரங்களுக்கு இரை இவர்கள்தான். ஐ.டி. கம்பெனிகள் எதுவும் வட சென்னையில் இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே இவர்களின் நினைவு அரசியல்வாதிகளுக்கு வருகிறது. 

அரசியல் பேசும் வசனங்களும் இப்படத்தில் உள்ளன. அதிகார அரசியல்வாதிக்கு எதிராக ஒரு தலித் குரல் கொடுக்கும் போது "உங்கள உசுப்பி விட்டவன் யாருன்னு தெரியும்" என்று அந்த அரசியல்வாதி சொல்லும் வசனம் உண்மை நிலை. தலித் மக்கள் வாய் திறந்தாலே சமூகம் இப்படித்தான் பேசுகிறது. "பெரிய கலவரமாச்சு. ஆனா போலிஸ் ஹவுசிங் போர்டு ஆளுங்களத்தான் புச்சிகினு போனாங்க" என்று ஆரம்பத்திலேயே  அரசியல் பேசுகிறது. இறுதியில், பள்ளி பிள்ளைகளுக்கு அரசியல் சொல்லித் தருவது போல் முடித்திருப்பது மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது. சினிமேட்டிகலாக இருக்கிறது. ஆனால், அதுவும் ஒரு தீர்வை முன்வைப்பதாக எடுத்துக்கொள்ளலாம். 

இந்தப் படம் தலித் அரசியலைப் பேசும் படம் என்கிறார்கள். எனக்கென்னவோ இன்னும் கொஞ்சம் அரசியல் பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது. முதல் பாதியில் பேசும் அரசியல் இரண்டாம் பாதியில் தனி நபர் பழி வாங்குதல் போல மாறிவிடுகிறது. ஆனாலும், மெய்யாகச் சொல்கிறேன். இந்தப் படம் மிகச் சிறந்த படம். ரஞ்சித்துக்கு மீண்டும் பாராட்டுகள். 
 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' என்கிறார்கள். ஆனால், மெட்ராஸின் அட்ரஸாக இருக்கும், பூர்வ குடிகளான தலித் மக்களை எப்போது வாழ வைக்கப் போகிறது, இந்த சென்னை ????

சனி, 6 செப்டம்பர், 2014

பிறக்கட்டும் புதுயுகம்!!!

இந்தக் கட்டுரை ....
                                  
          LKG முதல் 12-ஆம் வகுப்பு வரை நான் படித்த பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டு மலருக்காக  நான் எழுதிக் கொடுத்த கட்டுரை.       


             வரலாற்றுப் புத்தகங்கள் நம்மிடையே ஏராளம் உண்டு. புத்தகங்களைப் பற்றிய வரலாறும் உண்டு. புத்தகங்களின் மேற்பார்வையில் தான் மனித சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி நடைபெற்று வந்துள்ளது. புத்தகங்களின் சிறப்பை ஒரு கட்டுரையில் விளக்க முயல்வது, ஒரே ஒரு பளிங்குக் கல்லின் மூலம் தாஜ்மஹாலின் அழகை வர்ணிக்க முயல்வதைப் போன்றது. எனினும், அதையே நான் இங்கு செய்ய விரும்புகிறேன். சிலரின் வாழ்வில் புத்தகங்களின் தாக்கத்தைப் பாருங்களேன்.
          
     சீனாவிலிருந்து இந்தியா வந்தவர் யுவான் சுவாங்.  நாளந்தா பல்கலைகழகத்தில் மாணவராகச் சேர்ந்து பல நூல் பயின்று, சில காலம் அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர். ஒரு நாள் தன் தாயகம் திரும்பி புத்தமத பிரச்சாரம் செய்யும் உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. புறப்பட்டார். அப்போது தம்முடன் அற நூல்கள் பலவற்றை எடுத்துச் சென்றார். அவரை வழியனுப்ப மாணவர் பலரும் உடன் சென்றனர். கழகத்திலிருந்து கப்பலுக்கு படகு மூலமாகத்தான் செல்ல முடியும். அப்படியே சென்றனர்.  படகு சிந்து நதியின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று புயல் வீசியது. நிலை குலைந்தனர் படகில் இருந்தவர்கள். படகு கவிழ்ந்துவிடுமோ என்று அனைவருமே அஞ்சினர். யுவான் தாம் கற்றவை, கொண்டு செல்ல நினைத்தவை அனைத்தும் நதிக்கே இரையாகிவிடுமோ என்று முகம் வாடினார். அது கண்ட மாணவர்கள் உடனே அச்செயலைச் செய்தனர். ஆம். பாரம் குறைந்தால் படகு தப்பக்கூடும் என்றெண்ணி ஆற்றில் குதித்து விட்டனர். ஆறு அவர்களை உள் வாங்கி ஏப்பம் விட்டது.  படகு தப்பியது. அறிவுச் செல்வத்தை விட தம்முயிர் பெரிதல்ல என்பதை உணர்த்திய இந்திய மாணவர்களின் தியாக உணர்வையும் தன் புத்தகங்களோடு யுவான்  சுமந்து சென்றார்.

             பொதுவாக அரசர்கள் போர்க்களத்துக்கு செல்லும்போது, சில சமயம் பல்லக்கில் அரசியை அழைத்துச் செல்வர். ஷாஜஹானோடு போர்க்களத்துக்கு மும்தாஜும் சென்றதாகச் சொல்வர். மும்தாஜ் மீது அவனுக்கு அப்படி ஒரு காதல்.  ஆனால், மாவீரன் நெப்போலியன் எங்கு படை எடுக்கச் சென்றாலும் தன்னுடன் பல்லக்கில் ஒரு நடமாடும் நூலகத்தையே கொண்டு செல்வானாம். அதில் 5000 புத்தகங்கள் இருந்தனவாம். புத்தகங்கள் மீது இவனுக்கு இப்படி ஒரு காதல். ஒரு புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிப்பதற்காக தனக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையையே ஒரு நாள் தள்ளிப் போட்டவர் பேரறிஞர் அண்ணா. ஜனாதிபதி பதவியை முடித்து ராஷ்டிரபதி பவனிலிருந்து வெளியேறிய டாக்டர். அப்துல் கலாமிடம் இருந்தது இரண்டு சூட்கேஸுகள்தான். ஒன்றில் அவருடைய துணிகள். இன்னொன்றில் அவருக்குப் பிடித்தமான புத்தகங்கள். கியூப நாட்டின் அதிபராக ஃபிடல் கேஸ்ட்ரோ இருந்தபோது சிறந்த புத்தகங்களை அந்நாட்டின் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிடைக்கச் செய்தார். நாம் போற்றும் எல்லா சரித்திர நாயகர்களும் இப்படி ஏதேனும் ஒரு வகையில் புத்தகங்களுடன் தொடர்பு கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
           
    சில புத்தகங்கள் குழந்தையைப் போல் அனுமதியின்றி நம் மேல் ஏறிக்கொள்ளும். சிலவோ, ஒரு தோழன் போல நம் தோள் மேல் கை போட்டு உடன் வரும். இன்னும் சில ஓர் ஆசிரியரைப் போல் கண்டிப்புடன் நமக்கு கட்டளையிடும். புத்தகம் மட்டும்தான் நம் தவறுகளை அடுத்தவர் அறியாமல் சுட்டிக்காட்டும்.  ஓர் அருமையான சொலவடை: "நமக்கு எவ்வளவுதான் தெரிந்திருந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும், எல்லாம் இருந்தும் அமைதியாக இருக்கும் நூலகம் போல." இப்படி இன்னும் எத்தனையோ நல்ல பண்புகள் உள்ளன புத்தகத்திடமிருந்து கற்றுக்கொள்ள.

       அப்துல் கலாம் சொல்கிறார், "நம்மால் நம் எதிர் காலத்தை நேரடியாக மாற்ற முடியாது. ஆனால், நம் பண்புகளை மாற்றிக்கொள்ள முடியும். அந்த பண்புகள் மூலம் நம் எதிர்காலம் மாறும்" என்று. நல்ல புத்தகங்கள் நல்ல பண்புகளை வளர்க்க உதவுகின்றன. மாணவப் பருவம் வாழ்வின் முக்கியப் பருவம்.  மாணவர்கள் அனைவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். மதிப்பெண்கள் பெற பாடப் புத்தகங்களையும் சமுதாயத்தில் மதிப்பு பெற பொது நூல்களையும் படிக்க வேண்டும். கலாம் மேலும் சொல்கிறார் "நாள்தோறும் ஒரு மணி நேரம் பொது நூல்களைப் படித்தால் ஓராண்டில் நாம் ஒரு அறிவுக் களஞ்சியமாக விளங்குவோம்" என்று.

              2750 ஆண்டுகளுக்கு முந்தைய மெசபடோமியாவின் அசிரியப் பேரரசின்   கடைசி மன்னரான அசுர்பானிபல் மகத்தான காரியம் ஒன்றை செய்து விட்டுப் போனார். 30,000 களிமண் தகடுகளில் அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பதியப்பட்டன. அவற்றைத் துறை வாரியாகப் பிரித்து அடுக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார். 'The Royal Library Of Ashurbanipal' என்று பெயரிடப்பட்ட இதுவே உலகின் முதல் நூலகம். பின்னர் எகிப்திய மன்னரான டாலமி (மாவீரன் அலெக்ஸாண்டரின் நண்பர்) காலத்தில் ஏழு லட்சம் பாப்பிரஸ் தாள்களைக் கொண்ட மாபெரும் நூலகம் அலெக்ஸாண்ட்ரியா நகரில்             'The Royal Library of Alexandria' என்ற பெயரில் அமைக்கப்பட்டது. தற்போது நல்ல, விதவிதமானத் தாள்களில் அச்சடிக்கப்பட்ட கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. இதையும் தாண்டி இன்று புத்தகங்கள் மின்னனு பரிமாணத்தில் பரிணாமம் அடைந்துள்ளன. இவற்றை e-books என்கின்றனர். 1993லேயே மின் புத்தகங்களைப் படிப்பதற்கென்றே பிரத்யேகமான மென்பொருள்கள் வடிவமைக்கப்பட்டன. இன்று எல்லாம் கணினி மயமாகிவிட்டன. தாள்களின் தேவை குறைந்துவிட்டது. (நானும் கூட இக்கட்டுரையை தாளில் எழுதவில்லை. நேரடியாகவே கணினியில் தட்டச்சு செய்கிறேன்). களிமண் தகடுகளில் தொடங்கிய புத்தகத்தின் பயணம் சிலிக்கான் சில்லு வரை வளர்ந்து விட்டது. 

                புத்தகம் என்பது வெறும் காகிதம் அல்ல. நூலகத்தின் ஏதோவொரு மூலையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் ஏதோவொரு புத்தகம் யுகப்புரட்சியையே ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது. இரண்டு புரோட்டான்கள் இணையும்போது உண்டாகும் ஆற்றலின் அளவை விட ஒரு புத்தகமும் மனிதனும் இணையும்போது உண்டாகும் ஆற்றலின் அளவே பெரிது என்று கருதுகிறேன். இந்த உலகையே ஒரு புத்தகத்தால் நல்வழிப்படுத்த முடியும் என்று நம்பியதால்தான் இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் 'திருக்குறள்' என்ற அரிய நூலை வடித்துத் தந்துள்ளார். 

                    இன்று நம் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி, நாம் புத்தகத்தின் பொருளைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளோமா என்பதுதான். இலக்கணப்படி புத்தகம் என்பது காரணப்பெயர். புது + அகம் = புத்தகம். அகத்தை சுத்தம் செய்து புதிதாக்குவதுதான் அதன் பணி. புத்தகம் தன் பணியைச் செய்ய என்றுமே தயங்கியதில்லை. அது தயாராகவே உள்ளது. நாம் தான் அவற்றை வாசிக்க யோசிக்கிறோம். இன்று இது வெறும் சொல்லாகவே உள்ளது. இதன் பொருள் என்றைக்கு நம்மால் முழுமையடகிறதோ அன்று புது அகம் மட்டுமல்ல, புது யுகமும் பிறக்கும்.


                தீனதயாளன். மு   B. Tech (Chemical Engg.,) 
                'பட்டுக்கோட்டை அழகிரி' வளர்த்தெடுத்த பிள்ளை

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

இந்தியும் இடைவிடா இருமலும்


வடமொழியால் பட்ட பாடு போதும் என்ற மன நிலையில் இருந்த தமிழர்களுக்கு அடுத்த தலைவலியாய் வந்து சேர்ந்தது இந்தித் திணிப்பு. இந்தியை இந்தியா முழுவதும் கட்டாயமாக்கிய நேரு பலத்த கண்டனத்துக்கு உள்ளானார். திராவிட இயக்கங்களும் மாணவர்களும் தமிழக மக்களும் வீதியில் இறங்கி தங்கள் மொழிக்காகப் போராடியது இந்தியை கட்டாயத்திலிருந்து விருப்பத்துக்கு கொண்டு சென்றது. அந்த 1960களிலிருந்து இந்தியை ஊடுருவ விடாமல் இரும்புத்திரைப் போட்டு பாதுகாத்து வருகின்றனர். எனினும், அமைதியாக மக்கள் இந்தியின் மீது ஈர்ப்பு கொண்டுள்ளனர் என்பதும் உண்மை. அதன் வெளிப்பாட்டை இரண்டு வாரங்களுக்கு முன்னால் (ஆகஸ்ட் 9, 10 தேதிகளில்) தஞ்சை உமா மகேஸ்வரனார் கல்லூரியில் கண்டேன். . 

தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா என்ற அமைப்பு தென் இந்திய மக்கள் இந்தி கற்க அருமையான பாடத் திட்டதோடு  எட்டு தேர்வு நிலைகளில் இந்தியைக் கற்றுத் தருகின்றனர். இந்த அமைப்பு 1918 - ஆம் ஆண்டு காந்திஜியால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றாண்டை நெருங்கினாலும் இந்த அமைப்பின் நோக்கம் சமீப காலமாகத்தான் சொல்லிக்கொள்ளும்படி நிறைவேறியுள்ளது. இப்போது எழுதிய தேர்வு ஐந்தாவது நிலை. 'விஷாரத் பூர்வார்த'. இன்னும் மூன்று தேர்வுகள் முடித்தால் B.A (Hindi) என்று போட்டுக்கொள்ளலாம். 

செமஸ்டர் தேர்வுக்கு முதல் நாள் ஓர் இரவு மட்டும் படித்தே பழகிவிட்டதால் இந்தத் தேர்வுக்கும் அதையே செய்தேன். தேர்வு நாளன்று திருவிழா போன்ற கூட்டத்தை கண்டு ஆச்சர்யப்பட்டேன். பிராத்தமிக் தேர்வுக்கு இந்த கூட்டம் இருந்தால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. அது முதல் நிலை. ஆனால், ஐந்தாம் நிலைத் தேர்வைக் கூட இவ்வளவு பேர் எழுதுவது வியப்புதான். இந்தியின் மீது ஆர்வம். 2000 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள், வகை வகை வாகனங்கள், பரபரப்பு, படபடப்பு, அறை எண்ணை கண்டுபிடிக்கக் காட்டிய அவசரம் எல்லாம் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. 
ஆனால், பெற்றோர்கள் அக்கரைப்படுவதாக கொஞ்சம் அதிகமாகவே மற்றவர்களுக்கும் இடையூறு செய்தனர்.

பத்து மணிக்கு தேர்வு தொடங்கிய பிறகும் அறைக்கு வெளியே நின்றுகொண்டு உள்ளே இருக்கும் தங்கள் பிள்ளைகளுடன் சத்தமாகப் பேசினர். அங்கிருந்து நகரச் சொன்ன ஆசிரியருக்கும் பெற்றொருக்கும் வாக்குவாதம் நடந்தது. தேர்வு முடியுமுன்பே அறைக்கு வெளியே வந்து நின்று "எல்லாக் கேள்வியும் எழுதிருக்கியா? ஈசியா இருக்கா? ஜெனரல் எஸ்ஸே என்ன கேட்டிருக்கான்?" என்று வெளிவந்த பின்பு கேட்க வேண்டியதை முன்னமே கேட்டது என்னைப் போல் தேர்வு எழுதிய மற்றவர்களையும் எரிச்சலாக்கியது. 

பெற்றோர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளின் கல்வியின் மேல் அவர்கள் அக்கறை எடுத்துக்கொள்வது மகிழ்ச்சியானது என்றாலும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் நடந்துகொள்வது சரியல்ல. இவர்களில் படித்த, நல்ல பணியில் இருப்பவர்கள்தான் அதிகம் என்பது கொஞ்சம் சிந்திக்கவேண்டியது. ஆங்கிலத்தில் 'etiqutte' என்றொரு சொல் உள்ளது. தமிழில் இங்கிதம் என்பர். அந்த இங்கிதம் தெரிந்து நடந்துகொள்ள வேண்டும். எல்லோரும் கத்துவதால் எளிமையாக கண்டுபிடிக்கக்கூடிய அறைகளைக் கூட சிரமப்பட்டு கண்டறிகிறார்கள்.  பிரச்சார சபாவும் மாணவர்கள் எளிதாக தங்கள் அறையைக் கண்டுபிடிக்கவும் அங்கே செல்ல வழி காட்டவும் தனியே சில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் சிரத்தைக் காட்டினால் இந்தத் தேர்வுகளை இன்னும் சிறப்பாக நடத்தலாம். 

இந்தி இந்தியாவின் ஒரு மொழி என்ற அளவில் அதை கற்றுக்கொள்வது தவறில்லை. மொழிப் பயிற்சி என்பது அறிவு சார்ந்ததல்ல. அது திறன் (Skill) சார்ந்தது. எந்த மொழி கற்றாலும் தன் தாய் மொழியை நேசித்து அதையே தன் நாட்டில் பேசி, பயன்படுத்தி தேவைப்படும்போது மட்டும் மற்ற மொழிகளைப் பயன்படுத்தினால் திணிப்பு என்ற ஒன்று வராது. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்பதெல்லாம் இன்றைய உலகத்தில் நடக்காத விஷயம். எனவே, எல்லா மொழிகளையும் எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்வதுதான் நாம் அறிவில் வளர்ந்திருக்கிறோம் என்பதற்கான அறிகுறி.  அந்தப் பக்குவம் வர முயற்சி எடுப்போம். 

சரி....தலைப்பில் இருமல் என்று சொல்லியிருந்தேனே?? அது என்ன என்று யோசிக்கிறீர்களா? இந்தத் தேர்வில் பெற்றோர்களோ ஆசிரியர்களோ செய்ததை விட எனக்கு மிகப்பெரிய தொந்தரவாக இருந்தது என்னுடைய இருமல். அமைதியாக இருந்த தேர்வறையில் சளியை அடித் தொண்டை
யிலிருந்து மேலெழுப்பும் முயற்சியாய் நான் இருமிய இடைவிடாத இருமல் தான் எனக்கும் மற்றவர்களுக்கும் பெரும் தொந்தரவாக இருந்தது.

ஞாயிறு, 11 மே, 2014

ஃபேஸ்புக் உலகில் தமிழ் வாழுமா? சாகுமா?


ஃபேஸ் புக் உலகில் தமிழ் - வாழுமா? சாகுமா?

     தலைப்பை படித்தவுடனே 'இது என்ன அபத்தமான கேள்வி?' என்று உங்களுக்குத் தோன்றலாம். இப்படி எழுதியவன் எவனோ அவன் விலாசம் அறிந்து விலா எலும்பை முறிக்க வேண்டும் என்றும் தோன்றலாம். தலைப்பு என்பது பூவைத் தலையில் வைக்கும் பூப் போல. பூவைப் பார்த்தே பூவையின் அழகை அறிந்துவிடமுடியாது. அதுபோலத்தான் இத்தலைப்பும்.
             உண்மையைச் சொல்லப் போனால், இந்த தலைப்பை இரண்டு தரப்பினர் ஆர்வமாகப் படிப்பர்.  "என்ன எழுதியிருக்கிறான்" என்ற ஆர்வத்தில் பார்க்கும் என் நண்பர்கள். இன்னொரு தரப்பு, 'தமிழ் அபிமானிகள்' என்று சொல்லிக் கொள்(ல்)பவர்கள். ஏதேனும் சிக்காதா என்று பூதக்கண்ணாடிக் கொண்டுத் தேடுபவர்கள். ஒரு வரி தமிழுக்கு எதிராக எழுதுவதுப் போல் தோன்றினாலே எழுதியவனை நையப் புடைப்பவர்கள். சரி, வளர்த்தது போதும், விஷயத்துக்கு வருகிறேன்.
       தமிழ் மொழி என்று தோன்றியது என்பதில் முடிவான முடிவு இன்னும் ஏற்படவில்லை. அந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. எப்போது தொன்றியதோ அது முதல் இன்று வரை தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகமயமாக்கல்,  தொழில் நுட்பப் புரட்சி, ஆங்கில மோகம், ஃபேஸ் புக் உலகம் என்று இருக்கும் இன்றைய உலகைப் பார்த்தால் வைத்த தலைப்பு கொஞ்சம் யோசிக்க வேண்டியதுதானோ என்று தோன்றுகிறது.
         காலம்தோறும் தமிழுக்கு பல இடர்பாடுகள் வந்துள்ளன. வடமொழியால் அமுக்கப்பட்டதும், பிற மொழிகளால் கலப்படம் செய்யப்பட்டதும் நடந்துக்கொண்டே வந்திருக்கின்றன. இருந்தும் தமிழ் தன் ஜீவனை இழக்கவில்லை. 
          ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை அடிமையாக வைத்திருந்தனர். அப்போது நாம் யாரும் அடிமையாய் இருப்பதை விரும்பவில்லை. ஆனால், இன்று நாமே விரும்பி ஆங்கிலத்துக்கு அடிமையாகி விட்டோம் என்பது வருத்தமாக இருக்கிறது. ஆங்கிலம் சிறந்த மொழி என்பதை அதை அறிந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள். நானும் ஒப்புக்கொள்கிறேன். இங்கே முரண் என்னவென்றால், தமிழ் அறிந்தோர் பலர் தமிழை நனி சிறந்த மொழி என்று ஒப்பவில்லை என்பதுதான்.
         என் நண்பன் ஒருவன் ராஜஸ்தானில் படிக்கிறான். அவனோடு ஒருமுறை பேசிய போது "இங்கே என்னுடன் தமிழ் நாட்டு மாணவர்கள் யாரும் இல்லை. ஹிந்தியும் ஆங்கிலமும்தான் பேசுகிறேன். தமிழை ரொம்ப miss பண்றேன். பாரதியார் கவிதைகள் மட்டும் தான் என்னோடு தமிழ் பேசுகின்றன" என்று மிகவும் வருந்தி சொன்னான். அங்குள்ள (அ)நாகரிகம் பற்றியும் வருத்தப்பட்டுக் கொண்டான். "நம் தமிழ் கலாசாரத்தை தமிழ் நாட்டிலேயே எதிர்ப்பார்க்கமுடியாத போது ராஜஸ்தானிலே எப்படி எதிர்பார்க்கமுடியும்? இருந்தாலும், நம் பண்பாட்டின் மேன்மையை எடுத்து சொல்லி முடிந்தால் அவர்களை ஆங்கில கலாச்சாரத்திலிருந்து விடுவி" என்றேன். அதற்கு அவன்  "அடப் போங்க. நான் தமிழன் என்று சொன்னதற்கே வளராத காட்டுமிராண்டி கூட்டத்திலிருந்து வருபவன் போல் பார்க்கிறார்கள். இதிலே எங்கே பண்பாட்டை விளக்குவது?" என்று நொந்துக் கொண்டான். தமிழைப் பற்றி பேசுபவன் இன்று காலாவதியான மனிதன் என்று கருதப்படுகிறான். ஒரு நூற்றாண்டு முன்னால் பிறந்திருக்க வேண்டியவன் என்று சொல்லப்படுகிறான். 
            இன்று ஃபேஸ்புக் - இல் தமிழில் நிறைய பக்கங்கள் உள்ளன. இலக்கியம் பேசாவிட்டாலும் இன்றைய தமிழ் சமூகம் பற்றி நிறையவே பேசப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் பலர் இவைகளை பகிர்ந்து கொள்கின்றனர். வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தன் சொந்த ஊரின் பெயரில் யாரேனும் ஒரு Group உருவாக்கியிருந்தால் அதில் இணைந்துகொள்கின்றனர். எனவே, ஏதேனும் ஒரு வகையில் தமிழ் இணையத்தில் உலாவிக்கொண்டே இருக்கிறது. இன்று ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லையற்ற எழுத்து சுதந்திரத்தைத் தந்துள்ளன. யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம், தாக்கலாம். இதனால் ஒரு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தமிழ் அபிமானிகள் சொல்கிறார்கள். அதாவது, 'நினைத்தவன் எல்லாம் தன்னை கவிஞன் என்று சொல்லிக் கொள்கிறான். எதோ கிறுக்கிவிட்டு எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்கிறான் (என்னைப் போல). தமிழை எவ்வளவு கொச்சைப் படுத்த முடியுமோ அதை விட அதிகமாகவே கொச்சைப் படுத்துகிறான். இவர்களால் தரமில்லாத சரக்குகள் தமிழில் வந்துவிடும். அதனால், தமிழின் தூய்மை கெட்டு விடும். இனி தமிழ் எப்படி வாழும்?' என்று அவர்கள் சொல்கிறார்கள். 
           இதில் என்னுடைய கருத்து என்னவென்றால், இதைப் பற்றி இவ்வளவு கவலைப்படத் தேவை இல்லை. நானும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். எனக்குத் தோன்றியவை என்ன தெரியுமா? உண்மையை சொல்லப்போனால், இந்த ஃபேஸ்புக் பதிவர்கள்தான், ஃபேஸ்புக் எழுத்தாளர்கள் தான் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப் போகிறவர்கள். இவர்களால்தான் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும். தமிழ் தரமற்றுப் போய்விடும் என்று கவலைப்படுவதிலும் அர்த்தம் இல்லை. ஆயிரம் கவிதைகள் தரமற்றதாய் வந்தாலும் அவை எல்லாமே நிலைக்கப்போவதில்லை. சிறந்தவை மட்டும்தான் நிலைக்கும். "காதுக்கு இனிமையாக இல்லாத ஒசையுடைய சொற்கள் காலப்போக்கில் வழக்கொழிந்து போய் விடும். மற்றவை நிலைக்கும்" என்று தொல்காப்பியர் சொன்னது போல தரமற்ற படைப்புகளும் எழுத்துகளும் காலப்போக்கில் அழிந்து விடும். சிறந்தவை நிலைத்து நிற்கும். 
       இறுதியாக ஒன்று சொல்லி முடிக்கிறேன். இணையத்தில் இடம்பெற்ற முதல் இந்திய மொழி என்ற பெருமைக்குரியது நம் தமிழ் தான். எப்போது  தன்னை இணையத்தில் இணைத்துக்கொண்டதோ அப்போதே தமிழ் அமரத்தன்மை அடைந்துவிட்டது. தமிழும் மாறிவரும் உலகத்திற்கேற்ப தன்னை 'Upgrade' செய்து கொண்டது.    Android app -இல் நுழைந்துவிட்ட  தமிழுக்கு அழிவில்லை.
   
                         

வெள்ளி, 9 மே, 2014

முதல் எழுத்து

 நண்பர்களே,  
                          வணக்கம்....
   
     வெகு நாட்களாகவே ஒரு 'Blog' தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முக நூலிலும், டிவிட்டரிலும், கூகுள் ப்ளஸிலும் நான் இருந்தாலும் வலைப்பூ என்பது என்னை எப்போதுமே ஈர்ப்பதாக இருந்தது. காரணம், மற்றவற்றை விட வலைப்பூவில் இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக செயல் பட முடியும் என்பதால் தான். அதுமட்டுமல்லாது, இன்று படித்துப் பார்க்காமலே ஒருவருடைய போஸ்ட் - க்கு 'லைக்' போடுவதும் கமென்ட் செய்வதும் இயல்பாகிப் போனதால் முக நூலில் நம்பிக்கைக் குறைந்ததும் ஒரு காரணம். நான் படித்த, கேட்ட, கோபப்பட்ட, சிந்தித்த, சிரித்த விஷயங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய எழுத்துகள் பாராட்டுக்கும் பகிர்வுக்கும் விமர்சனத்திற்கும் ஆளாக்கப்பட்டால் அதுவே என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று கருதுகிறேன். எனவே, நண்பர்களே, படியுங்கள். உங்களுடைய கருத்துகளை இடுங்கள்.

     நிச்சயம் இந்த வலைப்பூ வித்தியாசமானதாய் இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம். மே 9, 2014 இல் தொடங்கப்பட்டுள்ள இப்பூ என்றும் வாடாமல் இருக்குமென்று நம்புகிறேன். நன்றி!

Ads Inside Post